ஆண்டவரின் திருமுழுக்கு
ஜனவரி 13
ஆண்டவரின் திருமுழுக்கு
(எசாயா 40: 1-5, 9-11; தீத்து 2:11-14, 3:4-7; லூக்கா 3:15-16; 21-22)
நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்போம்
நிகழ்வு
சீனாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் எட்டு வயது சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் ஒருநாள்கூடத் தவறாமல் ஆலயத்திற்குச் சென்றுவிடுவாள். ஆலயத்தில், குருவானவர் (Missionary) ஜெபிப்பதையும், மறையுரை ஆற்றுவதையும் மிக நுணுக்கமாகக் கவனித்து வந்தாள். இது மட்டுமல்லாமல், குருவானவர் ஊரில் இருக்கக்கூடிய நோயாளிகளைச் சந்திப்பதையும், அவர்களிடத்தில் ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவதையும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும், பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதையும் அவள் தொடர்ந்து கவனித்து வந்தாள்.
இதற்கிடையில் அவளுக்கு பள்ளியில் விடுமுறை நாட்கள் வந்தன. எனவே அவள் விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக தூரத்தில் இருந்த தனது பாட்டி வீட்டுக்குச் சென்றாள். ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது அவளுடைய பாட்டி அவளை அந்த ஊரில் இருந்த ஆலயத்திற்குக் கூட்டிக் கொண்டுபோனாள். ஆலயத்தில் குருவானவர் இல்லாததால், ஒரு அருட்சகோதரி எல்லாருக்கும் மறைக்கல்வி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனவே பாட்டி சிறுமியை மறைக்கல்வி வகுப்பில் விட்டுவிட்டு, மறைக்கல்வி வகுப்பு முடியும் மட்டும் வெளியே அவளுக்காகக் காத்திருந்தார்.
அந்த நாளில் அருட்சகோதரி ஒரு கதையோடு மறைக்கல்வி வகுப்பைத் தொடங்கினார். ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இறைவனிடத்தில் நம்பிக்கையோடு ஜெபிக்கக்கூடியவர். அதே நேரத்தில் மக்களையும் அவர் அளவுகடந்த விதமாய் அன்பு செய்யக்கூடியவர். நோயாளிகள், ஏழைகள், பெரியவர், சிறியவர் என எந்தவொரு வித்தாசமில்லாமல் எல்லாரிடத்திலும் அன்பாய் பழகக்கூடியவர்... இயேசுவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழக்கூடிய இப்படிப்பட்ட ஒரு மனிதரை யாராவது, எங்காவது பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். உடனே விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்த சிறுமி, “சிஸ்டர், நீங்கள் சொன்னது போன்று நான் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறேன். அவர் வேறு யாருமல்ல, எங்கள் ஊரில் இருக்கின்ற குருவானவர்” என்றார்.
“அருமை” என்று சொல்லி அந்தச் சிறுமியைப் பாராட்டிய அருட்சகோதரி, திருமுழுக்குப் பெற்றிருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் அந்த குருவானவரைப் போன்று இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னார்.
வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற பிரபல எழுத்தாளர் சொல்வார், “நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதே திருமுழுக்கு” (Baptism is Faith in Action) என்று. எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை.
பாவிகளுக்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கை, பாவமற்ற இயேசு ஏன் பெறவேண்டும்?
இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவை அல்லது ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். ‘மக்கள் யாவரும் பாவமன்னிப்புப் பெற்று, மனம்மாறவேண்டும்’
(லூக் 3:3) என்பதற்காக யோவான் திருமுழுக்குக் கொடுத்து வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு பாவமும் அறியாத இயேசு திருமுழுக்குப் பெறுவது முறையா? என நாம் கேள்வி எழுப்பலாம். இது ஒருபக்கம் இருந்தாலும், இயேசு பெற்ற திருமுழுக்கு எந்தெந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகின்றது? அது என்னென்ன செய்திகளை நமக்கு எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு பெற்ற திருமுழுக்கு நமக்கு மூன்று முதன்மையான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, அவர் மக்களில் ஒருவராகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றார் என்பதாகும். முன்னமே பார்த்ததுபோல, பாவிகள் யாவரும் மனம்மாறி, ஆண்டவரிடத்தில் திரும்பிவர வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட திருமுழுக்கில், இயேசு பங்கு பெறுவதன் வழியாக மனிதர்களில் ஒருவராகி, அவர்களுடைய சுய துக்கங்கள், கஷ்ட, நஷ்டங்களில் கலந்துகொள்ளத் தயாராகின்றார்.
இரண்டு, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியதன் அடையாளமாக இருக்கின்றது. எப்படியென்றால், இயேசு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றபிறகு பாலைவனத்திற்குச் சென்று, நாற்பது நாட்கள் நோன்பிருக்கின்றார். அதற்குப் பின்பு அவர் ‘மனம்மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கிவிடுகின்றார் (மத் 4:17). ஆகையால், இயேசு பெற்ற திருமுழுக்கு அவர் தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்குவதற்கான ஓர் அடையாளம் என உறுதியாகச் சொல்லலாம். மூன்றாவதாக, இயேசு பெற்ற திருமுழுக்கு, அவர் கல்வாரி மலையில் மானிடர் யாவருடைய மீட்புக்காக, தன்னை பலியாகத் தருவதன் ஒரு வெளிப்பாடாக இருக்கின்றது (மத் 20:22). இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வாழ்வினைக் கொடுக்க வந்தார். அந்த வாழ்வினை அவர் உறுதியாகத் தரப்போகிறார் என்பதை எடுத்துக் காட்டுவதன் அடையாளமாக இருப்பதுதான் அவர் யோர்தானில் பெற்ற திருமுழுக்கு ஆகும்.
இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன?
யோர்தான் ஆற்றில் இயேசு திருமுழுக்குப் பெறும்போது, தூய ஆவியார் அவர்மீது புறவடிவில் இறங்கி வருவதையும், தந்தைக் கடவுள், “இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர், இவர் பொருட்டு நான் பூரிப்படைபடைகிறேன்” என்று சொல்வதையும், பின்னர் இயேசு நற்செய்தி அறிவிக்கத் தொடங்குவதையும் நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம். திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.
இதைக் குறித்துக் காட்டும் விதமாகத்தான் திருமுழுக்கு அருளடையாளக் கொண்டாட்டத்தின்போது குருவானவர், ‘சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு, ‘இவை இவையெல்லாம் நம்புகிறீர்களா?’ என்று கேட்பார். ஆம், நாம் ஒவ்வொருவரும் பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவால் உயிர்பெற்று, கிறிஸ்துவின் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், பரிவு, பாசம், மன்னிப்பு போன்றவற்றின்படி நடக்கவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற திருமுழுக்கு முழுமை பெறும்.
சிந்தனை
ரேய்மென்ட் ப்ரவுன் என்ற அறிஞர் சொல்வர், “ஒருவர் குருவாகவோ அல்லது ஆயராகவோ அருட்பொழிவு செய்யப்பட்ட நாளைவிடவும், அவர் திருமுழுக்குப் பெற்ற நாள் மிகவும் முக்கியமானது” என்று. இவ்வார்த்தைகளை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தோம் எனில், திருமுழுக்கின் முக்கியத்துவம் நமக்குப் புரிந்துவிடும். ஏனெனில், திருமுழுக்கின்போது ஒருவர் மறுபிறப்பு அடைகிறார். எனவே அத்தகைய மறுபிறப்பினை நாம் அர்த்தமுள்ளதாக மாற்ற, இயேசுவின் மதிப்பீடுகளின்படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.