ஜனவரி 04
ஜனவரி 04
01 யோவான் 3: 7 -10
கடவுளின் பிள்ளைகள் யார்?
நிகழ்வு
ஒரு சமயம் மக்கள் அதிகமாகக் கூடியிருந்த சந்தைவெளியில், இளைஞன் ஒருவன் உரத்த குரலில், “பெரியோரே! தாய்மாரே! எல்லாரும் இங்கே வாருங்கள். வந்து என்னுடைய இதயம் எத்துணை அழகாக இருக்கின்றது என்று பாருங்கள்” என்று கத்தினான். அவனுடைய குரலைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவனருகே வந்து, அவனது இதயத்தைப் பார்த்தனர். (இதயத்தை எப்படிப் பார்க்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கவேண்டாம், இது கற்பனைக் கதைதான்). பார்த்த அனைவரும் வியந்து நின்றனர். ஏனெனில், அவன் சொன்னது போன்றே, அவனது இதயம் மிகவும் அழகாக இருந்தது. அப்படிப்பட்ட இதயம் அப்பகுதியில் இருந்த மக்கள் யாரிடத்திலும் இல்லை.
இதற்கிடையில் அங்கு வந்த பெரியவர் அந்த இளைஞன் அருகே சென்று, “தம்பி உன்னுடைய இதயம்தான் அழகானது என்று நீ கர்வப்பட்டுக் கொள்ளவேண்டாம். உன்னுடைய இதயத்தைவிடவும் என்னுடைய இதயம் அழகானது, எல்லார்மீதும் இரங்கக்கூடியது” என்றார். இதைக் கேட்டு அந்த இளைஞன் உட்பட அங்கு கூடியிருந்த எல்லாரும் பெரியவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இதயம் பார்ப்பதற்கு அவலட்சணமாகவும், இரத்தம் வழிந்துகொண்டும் இருந்தது.
அப்போது பெரியவர் அந்த இளைஞனைப் பார்த்து, “என் இதயம் பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகில்லாமல் இருக்கலாம். ஆனால், அன்பு செய்ய யாருமே இல்லாது இருக்கும் மனிதர்களிடத்தில் என்னுடைய இதயத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொடுத்து, அவர்களை அன்பு செய்திருக்கிறேன். பதிலுக்கு அவர்களுடைய இதயத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் அன்பின் ஊற்றாக இருக்கும் என்னுடைய இதயத்திலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொண்டபோதும், அதை அவர்கள் திருப்பித் தராமலே போயிருக்கிறார்கள். இதனால்தான் என்னுடைய இதயம் இப்படி இருக்கின்றது” என்றார்.
இதைக் கேட்ட அந்த இளைஞனுக்கு, “இதயத்தை அழகாக வைத்திருப்பதற்கு ஒருவன் தவறு செய்யாமல் இருப்பது மட்டும் பத்தாது, எல்லாரையும் அன்புசெய்யக் கூடியவராகவும், எளியவர்மட்டில் இரங்கக்கூடியவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட மனிதரால்தான் அழகான இதயத்தைக் கொண்டிருக்க முடியும்” என்ற உண்மை விளங்கியது. உடனே அவன் தன்னுடைய இதயத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அவருடைய இடத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து பொருத்திக்கொண்டான். இப்போது அவனுடைய இதயம் பார்ப்பதற்கு முன்புபோல் அழகில்லாமல் இருந்தாலும்கூட, அந்த பெரியவரைப் போன்று எல்லாரையும் அன்பு செய்யவும், எளியவர்மீது இரக்கம்கொள்ளவும் துடித்தது.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இதயத்தைக் கொடுத்தது, பத்திரமாக வைத்திருப்பதற்கு அல்ல, அதை அன்பாலும் இரக்கத்தாலும் நிரப்பி, நம்மோடு வாழும் சகோதர, சகோதரரிகளை அன்புசெய்வதற்கே என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.
நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்களா? சாத்தானைச் சார்ந்தவர்களா?
இன்றைய முதல் வாசகத்தில், யோவான் கடவுளின் மக்கள் அல்லது கடவுளைச் சார்ந்தவர் யார்?, சாத்தானைச் சார்ந்தவர் யார்? என்பதற்கான மிகத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றார்.
கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பாவ வழியில் நடவாது, நேர்மையாக நடந்து, தம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை யாராரெல்லாம் அன்பு செய்கின்றார்களோ, அவர்களெல்லாம் கடவுளின் மக்கள் அல்லது கடவுளைச் சார்ந்தவர்கள். இதற்கு எதிராக யாராரெல்லாம் பாவச் சேற்றில் விழுந்து, நேர்மையில்லாமல் நடந்துகொண்டு, தம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை அன்பு செய்யாமல், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களோ அவர்களே சாத்தானைச் சார்ந்தவர்கள். இதனைத்தான் யோவான் தன்னுடைய திருமுகத்தின் வழியாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.
கடவுளால் படைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், சாத்தானின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்தார்கள். அப்படியிருந்தபோதும், கடவுள் தன்னுடைய பேரன்பினால் தனது ஒரே மகனை அனுப்பி, இந்த உலகத்தினை மீட்டார். இப்படி இயேசுவால் பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும் நாம், மீண்டுமாகப் பாவம் செய்து, சாத்தானைச் சார்ந்தவர்களாக மாறுவது எந்த விதத்தில் நியாயம். ஆகவே, நாம் பாவத்திற்கு இறந்தவர்களாய், கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கின்றவகளாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் கடவுளைச் சார்ந்தவர்களாக இருக்கமுடியும்.
சிந்தனை
இயேசு கூறுவார், “எவரும் இரு தலைவர்களுக்குப் படைவிடை செய்ய முடியாது” என்று. (மத் 6:24). ஆம், நாம் ஒருபோதும் பாவச் சேற்றில் இருந்துகொண்டு கடவுளை அன்பு செய்யவோ, அவரைச் சார்ந்தவராகவே இருக்க முடியாது. ஆகவே, நாம் பாவத்தை விட்டுவிட்டு, நேர்மையோடும், நம்மோடு வாழக் கூடிய சகோதர, சகோதரிகளை அன்பு செய்யும் உள்ளத்தோடும் வாழ்வோம். அதன்வழியாக நாம் கடவுளைச் சார்ந்தவர்களாகி, அவருடைய அருளை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.