ஜனவரி 03
ஜனவரி 03
01 யோவான் 2:29-3:6
கடவுளின் ஒப்புயர்வற்ற அன்பு!
நிகழ்வு
சிக்காகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜான் போவெல் (John Powell). பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அவருடைய வகுப்பு வரவேண்டும் என்பதற்காகத் தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு அவருடைய வகுப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.
ஜான் போவெலிடம், டோம் என்றொரு மாணவன் படித்துவந்தான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது. ஒவ்வொருமுறையும் வகுப்பறையில் ஜான் போவெல் கடவுளைப் பற்றியும், அவருடைய பேரன்பைப் பற்றியும் எடுத்துச் சொல்லும்போது டோமிற்கு, எல்லாம் புரியாத புதிராகவே இருக்கும். ஒருநாள் ஜான் போவெல் வகுப்பெடுத்து முடித்துவிட்டு, வெளியே வந்துகொண்டிருந்தபோது, அவரை சந்தித்த டோம், “ஐயா! உங்களிடமிருந்து நான் ஒருசில தெளிவுகளைப் பெறவேண்டும்... எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அப்படியிருக்கும்போது நீங்கள் கடவுள் இருக்கின்றார் என்றும், அவர் பேரன்பு கொண்டவர் என்றும் சொல்கின்றபோது எனக்கு புரியாத புதிராக இருக்கின்றது. ஒருவேளை நீங்கள் சொல்கின்ற அந்த பேரன்பு கொண்ட கடவுளை என்றைக்காவது ஒருநாள் நான் என் வாழ்வில் கண்டுகொள்வேனா?” என்று கேட்டான்.
ஜான் போவெல் சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னார், “பேரன்பு கொண்ட கடவுளை, உன் வாழ்வில் நீ கண்டுகொள்வாயா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பேரன்பு கொண்ட கடவுள் ஒருநாள் உன்னைக் கண்டுகொள்வார். இது நிச்சயம். இப்படித்தான் பிரான்சிஸ் தாம்சன் என்ற எழுத்தாளர் (The Hound of Heaven – என்ற அமர காவியத்தைப் படைத்தவர்) இருந்தார். அவர் கடவுளை விட்டு விலகி ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் பேரன்புகொண்ட கடவுள் அவரைத் தன்வயப்படுத்தினார்”
ஆம், கடவுளின் அன்பு ஒப்புயர்வற்றது. அவருடைய அன்பிலிருந்து யாரும் விலகிநிற்க முடியாது.
அன்பே கடவுள்
அன்பின் அப்போஸ்தலர் – அன்பின் திருத்தூதர் – என அழைக்கப்படும் தூய யோவான், தான் எழுதிய நற்செய்தி நூலாக இருக்கட்டும், மூன்று திருமுகங்களாக இருக்கட்டும் இவை அனைத்திலும் ஆண்டவரின் அன்பை அவ்வளவு அழகாக, ஆழமாக எழுதியிருக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றைய முதல் வாசகத்தில் யோவான், “நம் தந்தை நம்மிடத்தில் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்” என்கின்றார். தந்தைக் கடவுள் நம்மிடத்தில் கொண்ட அன்பை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. நாம் பாவிகளாக இருந்தபோதும், அவர் தன் ஒரே மகனை அனுப்பி நம்மை மீட்டுக்கொண்டார். அந்தளவுக்கு கடவுள் நம்மீது பேரன்பு கொண்டிருக்கின்றார். மேலும் யோவான் கூறுவதுபோல, அவர் நம்மைத் தம் பிள்ளைகளாக, மக்களாக பாவிக்கின்றார்.
நாம் கடவுளின் அன்பிற்குப் பாத்திரமாவது எப்படி? எப்போது?
கடவுளின் பேரன்பை எடுத்துச் சொல்லும் யோவான், தொடர்ந்து அவருடைய அன்பிற்குப் பாத்திரமாவது எப்படி என்பதைப் பற்றியும் அவருடைய அன்பிற்குரிய மக்களாவது எப்படி என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்கின்றார்.
கடவுளின் அன்பிற்குப் பாத்திரமாவதற்கு அவர் மூன்று காரியங்களைப் பட்டியலிடுகின்றார். நேர்மை, தூய்மை, பாவமில்லா அல்லது பாவம் செய்யாத வாழ்க்கைதான் அந்த மூன்று காரியங்களாகும். கடவுள் தூய்மையானவர். விவிலியத்தை ஆழ்ந்து படித்துப் பார்க்கும்போது, கடவுளின் எல்லாப் பண்புகளை விடவும் அவருடைய தூய்மைதான் அதிகமாக, ஆழமாக வலியுறுத்தப்படுகின்றது. அதனால்தான் கடவுள் தூயவர் என்று வருகின்றபோது, தூயவர் என்ற வார்த்தையானது மூன்று முறை வருகின்றது (எசா 6: 3). ஆகவே, தூயவரான, நேர்மையான, பாவமில்லாத ஆண்டவரின் அன்பிற்குப் பாத்திரமாகி, அவருடைய அன்பு மக்களாக நாம் மாறவேண்டும் என்றால், நாமும் தூயவர்களாக, நேர்மையானவர்களாக, பாவம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் பாவம் செய்கின்ற ஒருவர் கடவுள் கொடுத்த திருச்’சட்டத்தை மீறுகின்றவராக இருக்கின்றார். ஆகவே, நாம் பாவம் செய்யாதவர்களாக இருக்கவேண்டும்.
சிந்தனை
இன்றைய உலகம் பல்வேறு விதமான பாவங்களுக்கு அடிமைப்பட்டு, சீர்குலைந்து இருக்கின்றது. இத்தகைய சூழலில் நாம் கடவுளின் மேலான அன்பினை உணர்ந்து, அவருடைய அன்பு மக்களாக மாறுவதுதான் நமக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
இந்த உலகம் கடவுளின் அன்பினை உணர்ந்துகொண்டு, அவர் வழியில் நடக்கும் என்றால், இங்கே நடக்கும் வன்முறைகள், கலவரங்கள் அனைத்தும் மறைந்து, இந்த உலகமே ஒரு பூக்காடாக மாறும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. ஆகவே, கடவுளின் ஒப்புயர்வற்ற அன்பினை உணர்ந்து, அந்த அன்பினை பிறருக்குக் கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.