24 மார்ச் 2023, வெள்ளி

எதிர்ப்பும் இறை பராமரிப்பும்!

தவக் காலத்தின் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை


I சாலமோனின் ஞானம் 2: 1a, 12-22

திருப்பாடல் 34: 16-17, 18-19, 20, 22 (18a)

II யோவான் 7: 1, 2, 10, 25-30

எதிர்ப்பும் இறை பராமரிப்பும்!

தம் அடியாரோடு உடனிருக்கும் ஆண்டவர்!


கடவுளின் பணிக்கென வந்துவிட்டால் சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் துன்பங்களுக்கும் தயாராக இருக்கவேண்டும். இவற்றையெல்லாம் எதிர்கொள்ள முடியாத ஒருவர் கடவுளின் பணியில் நிலைத்து நிற்க முடியாது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இறைப்பற்றில்லாதவர்கள் இறைப்பற்றுள்ளோருக்கு எதிராக எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்து, அவர்களை ஒழிக்கப் பார்க்கின்றார்கள் என்பதைப் பற்றிப் பேசுகின்றது. இறைப்பற்றுள்ளோர் அடிப்படையில் இறைவனுடைய மக்கள், அதனால் அவர்கள் இறைப்பற்றில்லாதவர்களின் செயல்களை எதிர்ப்பதால், அவர்கள் இறைப்பற்றுள்ளோருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, ஒழிக்கப் பார்க்கின்றார்கள்.

இந்த இறைவார்த்தைப் பகுதியை இன்றைய நற்செய்தியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னும் தெளிவாய் விளங்கும். இயேசு தான் கடவுளின் மகன் என்பதைப் பல்வேறு சான்றுகள் மூலம் விளக்கினார். அதே வேளையில் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இதனால் அவர்கள் இயேசுவைக் கொல்ல முயற்சி செய்தார்கள். இயேசுவின் நேரம் இன்னும் வராததால், அவர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 34 ம் நமக்கு இதே கருத்தினைத் தான் கூறுகின்றது. ஆண்டவரின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்த தாவீதுக்கு ஆண்டவர் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றியை அளித்தார். இதைக் கண்டு அவர்மீது காழ்ப்புணர்வு கொண்ட சவுல் தாவீதைக் கொல்லத் துணிந்தார். இதனால் தாவீது அவரிடமிருந்து தப்பித்து, அதுல்லாம் குகையில் தஞ்சம் அடைகின்றார் (1 சாமு 21: 10-15). இவ்வாறு ஆண்டவர் தாவீதோடு இருந்து அவரைக் காத்ததால், தாவீது அவருக்கு நன்றிப் பண் பாடுகின்றார்.

கடவுளின் பணியைச் செய்யும் நமக்கு ஆபத்துகள் இருக்கலாம். ஆனாலும் கடவுளின் பராமறிப்பு நமக்கு எப்போதும் உண்டு என்பதால், அவரது பணியினை நாம் துணிவோடு செய்வோம்.

கடவுளின் ஆசியும், சாத்தானின் எதிர்ப்பும்

கடவுளின் வார்த்தையைச் சீனாவிற்கு கொண்டு சென்றவர்களில் முன்னோடியாகக் கருதப்படுகின்றவர் ஹட்சன் டைலர் (Hudson Taylor). பல்வேறு துன்பங்களுக்கு நடுவில் கடவுளின் வார்த்தையை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தவர் இவர். அப்படிப்பட்டவர் அங்கே இருந்த மக்களைப் பிற நாடுகளுக்கும் சென்று நற்செய்தி அறிவிக்கத் தூண்டினார்.

ஒருமுறை இவர் அயல்நாடுகளுக்குச் சென்று, நற்செய்தி அறிவிக்க ஆர்வமாய் இருந்த இளைஞர்களிடம், “கடவுளின் பணியைச் செய்வதற்கு அவரது அருளை நீங்கள் வேண்டி நிற்கும்போது, கடவுள் விண்ணகத்தின் சாளரத்தைத் திறந்து தமது அருளை உங்களுக்கு வழங்குவார். அதே வேளையில், சாத்தான் பாதாளத்தின் சாளரத்தைத் திறந்து தனது எதிப்புகளை அனுப்புவான் . கடவுளின் அருளுக்கும் சாத்தானின் எதிர்புக்கு நடுவிலும்தான் நீங்கள் பணி செய்யவேண்டும்” என்றார்.

கடவுளின் பணியைச் செய்யும்போது அவரது அருள் நம்மோடு இருக்கும் அதே வேளையில், சாத்தானின் எதிர்ப்பும் இருக்கும். கடவுளின் அருளைக் கொண்டு, சாத்தானின் எதிர்ப்புகளைத் துணிவோடு எதிர்ப்போம்.

ஆண்டவரின் வார்த்தை

“அழியக் கூடிய பொன் நெருப்பினால் புடைமிடப்படுகின்றது. அதை விட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்” (1 பேது 1:7)

தீர்மானங்கள்

1. கடவுளின்மீது நம்பிக்கை வைத்து, அவரது பணியைச் செய்வோம்.

2. ஆண்டவரின் பணியில் ஆபத்துகள் இருந்தாலும், அவரின் உடனிருப்பு நம்மோடு எப்போது உண்டு.

3. ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோம். அதுதான் நமக்கு ஆசிகளைப் பெற்றுத் தரும்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்