17 சனவரி 2025, வெள்ளி

புனித வனத்து அந்தோணியார் - ஆதீனத் தலைவர்

நினைவு

முதல் வாசகம்

கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொள்ளுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-13, 18

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்.

அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.

எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-26

ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

இயேசு அவரிடம், “நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார். அவர், “எவற்றை?” என்று கேட்டார்.

இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.

அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார். சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வாசகங்கள்



பிற நாட்கள்