அமலேக்கியருக்கு எதிராய்ப் போர்

1சாமுவேல் சவுலை நோக்கிக் கூறியது: “ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே, இப்போது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும்.
2படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.
3ஆகவே, சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடைமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும்”.
4சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்.
5சவுல் அமலேக்கியரின் நகரை வந்தடைந்து ஒரு பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்தார்.
6சவுல் கேனியரை நோக்கி, “இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டினீர்கள். ஆகவே, நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில், அவர்களோடு உங்களையும் நான் அழிக்க வேண்டியிருக்கும்” என்றார். எனவே, கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச்சென்றனர்.
7பின்னர், சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கும் சூருக்குச் செல்லும் எல்லைவரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார்.
8அமலேக்கியரின் மன்னன் ஆகாகை அவர் உயிரோடு பிடித்தார். ஆனால், மக்களனைவரையும் வாளுக்கு இரையாக்கினார்.
9சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும், ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் இரண்டாம்தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும் நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்துப் போட்டனர்.

அரசர் சவுல் புறக்கணிக்கப்படல்

10அப்போது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:
11“சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில், அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவில்லை.” சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் ஆண்டவரிடம் மன்றாடினார்.
12சவுலைச் சந்திப்பதற்காக சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்கானுக்கு கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்கு தெரிவிக்கப்பட்டது.
13சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, “நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர்! ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன்” என்றார்.
14அதற்கு சாமுவேல், “அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன?” என்று கேட்டார்.
15சவுல் மறுமொழியாக, “அவை அமலேக்கியரிடமிருந்து கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய உம் ஆண்டவருக்குப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளார். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம்” என்றார்.
16அப்போது சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார்.
17சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலுக்கு அரசராகத் திருப்பொழிவு செய்தார்.
18ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு” என்று சொன்னார்.
19அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை? கொள்ளைப் பொருள் மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?
20அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால், அமலேக்கியரை அழித்துவிட்டேன்.
21ஆனால், வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார்.

22அப்போது சாமுவேல் கூறியது:

“ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது

எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா?

அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா?

கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது.

கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின்

கொழுப்பை விட மேலானது!

23கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்!

முரட்டுத்தனம் சிலை வழிபாட்டுக்கு

ஒப்பான குற்றம்.

நீர் ஆண்டவரின் வார்த்தையைப்

புறக்கணித்தீர்!

அவரும் உம்மை அரச பதவியினின்று

நீக்கிவிட்டார்.

24அப்போது சவுல் சாமுவேலை நோக்கி, “நான் பாவம் செய்து விட்டேன். வீரர்களுக்கு அஞ்சி அவர்களின் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் வாய்மொழியையும் உம் வார்த்தையையும் மீறிவிட்டேன்.
25தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன்” என்றார்.
26அப்போது சாமுவேல் சவுலிடம் “நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறங்கணித்துவிட்டதாலும், ஆண்டவர் இஸ்ரயேல் மீது அரசு செலுத்துவதினின்று உம்மை விலக்கிவிட்டதாலும், நான் உம்மோடு திரும்ப வர மாட்டேன்” என்றார்.
27சாமுவேல் செல்லத் திரும்பியபோது, சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.
28அப்போது சாமுவேல் “ஆண்டவர் இன்று இஸ்ரயேல் அரசை உம்மிடமிருந்து கிழித்து உம்மைவிடச் சிறந்த, உமக்கு நெருங்கியவன் ஒருவனுக்கு அதைத் தந்துவிட்டார்.
29மேலும், ‘இஸ்ரயேலின் மாட்சி’ ஏமாற்ற மாட்டார். மனம் மாறவும் மாட்டார். மனம் மாறுவதற்கு அவர் என்ன மனிதரா?” என்று அவரிடம் கூறினார்.
30மீண்டும் சவுல், “நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து தொழுதிட என்னோடு திரும்பி வாரும்” என்றார்.
31சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுதார்.
32பிறகு சாமுவேல், “அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும்” என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் “உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது” என்றான்.
33அதற்குச் சாமுவேல் “பெண்கள் உனது வாளால் பிள்ளையற்றோர் ஆகியது போல, உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவள் ஆகட்டும்” என்று கூறி, கில்காலில் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டினார்.
34அதன் பின், சாமுவேல் இராமாவுக்குச் செல்ல, சவுலும் அவரது சொந்த ஊரான கிபியாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார்.
35சாமுவேல் தாம் இறக்கும் நாள் வரை சவுலை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால், அவர் சவுலுக்காகத் துக்கம் கொண்டாடினார். ஆண்டவரும் சவுலை இஸ்ரயேல்மீது அரசராக்கியதற்காக மனம் வருந்தினார்.

15:1 1 சாமு 10:1. 15:2 விப 17:8-14; இச 25:17-19. 15:27-28 1 சாமு 28:17; 1 அர 11:30-31.