யோனத்தானின் தீரச் செயல்

1ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்வோம்” என்றார். ஆனால் இதைத் தம் தந்தையிடம் சொல்லவில்லை.
2சவுல் கிபயாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவரோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.
3அப்போது சீலோவில் ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்குத் தெரியாது.
4யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று ‘போட்சேசு’ என்றும் மற்றொன்று ‘செனே’ என்றும் அழைக்கப்பட்டன.
5ஒரு தூண் பாறை வடக்கே மிக்மாசுக்கு எதிரிலும், மற்றொன்று தெற்கே கிபாவுக்கு எதிரிலும் இருந்தன.
6யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி “வா, இந்த விருத்தசேதனம் அற்றோரின் எல்லைக்காவலுக்குக் கடந்து செல்வோம். ஒரு வேளை ஆண்டவர் நம் சார்பாகச் செயல்படுவார். ஏனெனில், சிலரைக் கொண்டோ பலரைக் கொண்டோ மீட்பு அளிப்பதில் ஆண்டவருக்குத் தடையில்லை” என்றார்.
7அதற்கு, அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோன், “உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனத்திற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன்” என்று சொன்னான்.
8பிறகு, யோனத்தான், “இதோ! நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவோம்.
9அவர்கள் நம்மிடம் ‘நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்று கூறினால், நாம் அவர்களிடம் செல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம்.
10மாறாக, ‘எங்களிடம் வாருங்கள்’ என்று சொன்னால் நாம் அவர்களிடம் செல்வோம். ஆண்டவர் அவர்களை நம்மிடம் ஓப்படைத்துள்ளார் என்பதற்கு இதுவே அடையாளமாய் இருக்கும்.
11ஆகவே, இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், “இதோ! தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எபிரேயர் வெளியே வருகின்றனர்” என்று கூறினர்.
12எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கும் மறுமொழி கூறி, “எம்மிடம் வாருங்கள், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” என்றனர்.அப்போது யோனத்தான் தம் படைகளைத் தாங்குவோனிடம், “என் பின்னால் வா, ஏனெனில், ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவித்துள்ளார்” என்றார்.
13யோனத்தான் தன் கைகளாலும் கால்களாலும் ஊர்ந்து மேலே செல்ல, அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோன் பின்னால் சென்றான். யோனத்தான் அவர்களைத் தாக்க, அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோன் அவருக்குப் பின் வந்து அவர்களைக் கொன்றான்.
14யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் நடத்திய முதல் தாக்குதலில் ஏறக்குறைய இருபது பேர், அரை ஏர் நிலப்பரப்பில் வீழ்ந்தார்கள்.
15அப்பொழுது பாளையத்திலும் நிலவொளியிலும் மக்கள் அனைவரிடத்திலும் நடுக்கம் ஏற்பட்டது. எல்லைக் காவலர்களும் கொள்ளையிடுவோரும் கூட நடுநடுங்கினர். நிலமும் நடுங்கிற்று. அது ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கமாக இருந்தது.

பெலிஸ்தியரின் தோல்வி

16பென்யமின் பகுதியிலுள்ள கிபயாவில் இருந்த சவுலின் சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இங்கும் அங்கும் சிதறிக் கரைந்து விட்டதைக் கண்டார்கள்.
17சவுல் தம் ஆள்களை நோக்கி, “கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள்” என்றார். அவர்கள் கணக்கெடுத்துப் பார்க்க, யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் இல்லை என்று கண்டனர்.
18பிறகு, சவுல் அகியாவை நோக்கி, “கடவுளின் பேழையைக் கொண்டு வா” என்றார். ஏனெனில், அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது.
19குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்ந்து மிகுதியாயிற்று. சவுல் குருவிடம், “உன் கையை விலக்கிக் கொள்” என்றார்.
20அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவன் ஒருவனுக்கு எதிராக வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது.
21ஏற்கெனவே பெலிஸ்தியரோடு சேர்ந்து கொண்டு அவர்களோடு பாளையத்தில் திரிந்துவந்த எபிரேயரும், சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர்.
22எப்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று, அவர்களும் அவர்களைத் துரத்தித் தாக்கினார்கள்.
23அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.

போருக்குப்பின் நிகழ்ந்தவை

24இஸ்ரயேல் மக்கள் அன்று சோர்வுற்றனர். ஏனெனில், சவுல் அவர்களை நோக்கி, “நான் என் எதிரிகளை பழிவாங்க வேண்டும். ஆகவே, மாலைக்குள் யாராவது உணவு கொண்டால் அவன் சபிக்கப்படுவான்” என்று ஆணையிட்டுக் கூறினார். மக்களில் எவரும் அன்று ஏதும் உண்ணவில்லை.
25பின்பு, நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு காட்டினுள் வந்தனர். அங்கே தரையில் தேன் காணப்பட்டது.
26மக்கள் காட்டினுள் நுழைந்த போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால், எவனும் தன் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில், மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.
27ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே, அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியால் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன.
28அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: “இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டுள்ளார். மக்களும் சோர்ந்துள்ளார்கள்.”
29அப்போது யோனத்தான், “என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்; நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன.
30இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த எதிரியின் கொள்ளைப் பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும்” என்றார்.
31அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்மாசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே, அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தனர்.
32அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்தத்தோடே உண்டார்கள்.
33வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல்,“ நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள். இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள்" என்றார்.
34மேலும், சவுல் கூறியது: “நீங்கள் வீரர்களிடையே சென்று, ‘ஒவ்வொருவனும் தன் மாட்டையோ ஆட்டையோ என்னிடம் கொண்டு வந்து இங்கே அடித்துச் சாப்பிடட்டும். இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்டாம்’ எனச் சொல்லுங்கள், ஆகவே, ஒவ்வொருவனும் அன்று இரவே தன் மாட்டைக் கொண்டு வந்து அங்கே அடித்தான்.
35சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.
36அதன்பிறகு சவுல், “இரவில் பெலிஸ்தியரைப் பின் தொடர்ந்து சென்று விடியற்காலை வரை அவர்களைக் கொள்ளையடிப்போம். அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம்” என்றார். அதற்கு வீரர்கள், “உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யும்” என்றார்கள். குருக்களோ, “நாம் இங்கே கடவுளை அணுகுவோம்” என்றார்கள்.
37சவுல் கடவுளை நோக்கி, “நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா? அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ?” என்று கேட்டார்.
38ஆனால், அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்களின் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்; இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டறியுங்கள்.
39இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக என் மகன் யோனத்தானே இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான்” என்றார். எனினும், எவனும் மறுமொழி கூறவில்லை.
40மேலும், அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, “நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம்" என்று கூற வீரர்களும், “உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும்” என்று சவுலிடம் சொன்னார்கள்.
41ஆகவே, சவுல், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! முழு உண்மையை வெளிப்படுத்தும்’ என்று மன்றாட, யோனத்தான் மீதும் சவுல் மீதும் சீட்டு விழுந்தது; வீரர்களோ தப்பினர்.
42பிறகு சவுல், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள்” எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.
43சவுல் யோனத்தானை நோக்கி, “நீ என்ன செய்தாய்? சொல்” என வினவ, அதற்கு யோனத்தான், “என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார்” என்று கூறினார்.
44அதற்குச் சவுல், “யோனத்தான், நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்; அதற்கு மேலும் செய்யட்டும்” என்றார்.
45ஆனால், மக்கள் சவுலை நோக்கி, “இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில், கடவுளின் துணையோடுதான் இன்று அவர் செயல்பட்டார்” என்றார்கள். இவ்வாறு, வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.
46சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் திரும்பிச் செல்ல, பெலிஸ்தியரும் தாங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

சவுலின் அரசாட்சி

47இவ்வாறு, சவுல் இஸ்ரயேல் மீது ஆட்சி செலுத்தி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சோபா மன்னர்கள் பெலிஸ்தியர் ஆகிய சுற்றிலுமிருந்த எதிரிகள் அனைவருக்கும் எதிராகப் போர்தொடுத்தார். அவர் திரும்பிய இடமெல்லாம் அழிவை விளைவித்தார்.
48அவர் வீறுகொண்டெழுந்து அமலேக்கியரை முறியடித்து, கொள்ளையிடுவோரின் கையினின்று இஸ்ரயேலை விடுவித்தார்.
49சவுலுக்குப் பிறந்த புதல்வர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா. அவருடைய இரு புதல்வியரின் பெயர்களாவன; மூத்தவள் மேராபு; இளையவள் மீக்கால்.
50சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள். சவுலின் சிற்றப்பா நேரின் மகன் அப்பேனர் படைத்தலைவனாக இருந்தான்.
51சவுலின் தந்தை கீசும், அப்னேரின் தந்தையான நேரும் அபியேலின் புதல்வர்.
52சவுலின் வாழ் நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நடந்து வந்தது. வீரனையும் வலியவனையும் கண்டபோது சவுல் அவர்கள் எல்லாரையும் தம்மோடு சேர்த்துக் கொள்வதுண்டு.

14:33 தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 12:16,23; 15:23. 14:41 எண் 27:21; 1 சாமு 28:6.