தெபோரா, பாராக்கின் வெற்றிப்பாடல்

1அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
2“இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர். ஆண்டவரைப் போற்றுங்கள்.
3அரசர்களே, கேளுங்கள்! இளவரசர்களே, செவிகொடுங்கள்! நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன்.
4ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது.
5ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின. சீனாய் மலையே! நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய்.
6அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.
7தெபோரா! நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.
8வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது. இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது?
9என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது. மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்!
10பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே! விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே! பாதையில் பயணம் செய்வோரே! பாடி மகிழுங்கள்!
11நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது. இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது. அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள்.
12எழுந்திடு! தெபோரா! எழுந்திடு! பாடல் ஒன்று பாடு! எழுந்திடு! பாராக்கு! அபினோவாம் புதல்வா! உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு!
13அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்பீடு நடைபோட்டனர். வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர்.
14எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர். பென்யமின்! உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
15இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர். இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்; அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர். ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே!
16மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய்? ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே!
17கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது. தாண்! நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய்? ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான்.
18செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!
19மன்னர்கள் வந்து போரிட்டனர். கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர். கொள்ளைப்பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை.
20வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன! தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன!
21கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து வரும் ஆறே கீசோன் ஆறு. என் உயிரே! வலிமையுடன் பீடு நடை போடு!
22குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன. குதிரைகள் பாய்ந்து ஓடின; வேகமாக விரைந்து ஓடின.
23மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர். அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.
24கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறு பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்!
25அவன் கேட்டதோ தண்ணீர்! இவள் கொடுத்ததோ பால்! அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்.
26அவள் தன் கையைக் கூடாரமுளையில் வைத்தாள். அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது. சீசராவின் தலையில் அடித்தாள்; சிதைத்தாள்; அவன் நெற்றிப்பொட்டினை நொறுக்கினான்; துளைத்தான்.
27அவன் சரிந்தான்; விழுந்தான்; அவள் காலடியில் உயிரற்றுக் கிடந்தான்; அவள் காலடியில் அவன் சரிந்தான்; விழுந்தான்; அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்.
28சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்; “அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்? அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?
29அவளுடைய அறிவார்ந்த பணிப்பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்;
30அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ? ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்; சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்; என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்; இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.
31“ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும்! உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்!” பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.

5:5 விப 19:18.