தெபோராவும் பாராக்கும்

1ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.
2ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான்.
3இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான்.
4அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார்.
5அவர் எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் “தெபோராப் பேரீச்சை” என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்புப் பெறுதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர்.
6நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை அவர் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்; நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும்.
7யாபினின் படைத்தலைவன் சீசராவையம் அவன் தேர்களையும் படையையும் கீசோன் ஆற்றின் அருகே இழுத்து வந்து உம் கையில் கொடுப்பேன்” என்றார்.
8பாராக்கு அவரிடம், “நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன்” என்றார்.
9அவர் அவரிடம், “நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்” என்றார். பின்பு, தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார்.
10பாராக்கு செபுலோனையும் நப்தலியையும் கெதேசில் ஒன்று கூட்டினார். பத்தாயிரம் பேர் அவர்பின் அணிவகுத்துச் சென்றனர். தெபோராவும் அவருடன் சென்றார்.
11கேனியரான எபேர், மோசேயின் மாமனார் ஒபாபின் மக்களான கேனியரிடமிருந்து பிரிந்து, வாழ்ந்து வந்தார். அவர் கெதேசுக்கு அருகில் சானானிமிலிருந்த கருவாலி மரத்திற்கு அருகில் தம் கூடாரத்தை அமைத்திருந்தார்.
12அபினோவாமின் மகன் பாராக்கு தாபோர் மலைமீது ஏறிவிட்டதைச் சீசராவுக்கு அறிவித்தனர்.
13சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்களையும், தன்னுடன் இருந்த மக்கள் எல்லாரையும் அரோசத்கோயிமிலிருந்து கீசோன் ஆற்றின் அருகே ஒன்று திரட்டினான்.
14தெபோரா பாராக்கிடம், “எழுந்திரும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?” என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
15ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான்.
16பாராக்கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தினார். சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர்கூட தப்பவில்லை.
17சீசரா கேனியரான எபேரின் மனைவி யாவேலின் கூடாரத்திற்கு ஓடினான். ஏனெனில் ,ஆட்சோர் மன்னன் யாபினுக்கும் கேனியரான எபேரின் வீட்டுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவி இருந்தது.
18யாவேல் சீசராவைச் சந்திக்க வெளியே வந்து “இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும்; அஞ்ச வேண்டாம்” என்றார். அவன் அவரோடு கூடாரத்திற்குச் சென்றான். அவர் அவனை ஒரு போர்வையால் மூடினார்.
19அவன் அவரிடம், “எனக்குச் சிறிது தண்ணீர் கொடு. நான் தாகமாயிருக்கிறேன்” என்றான். பால் வைக்கும் தோற்பையைத் திறந்து அவர் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார். பின் அவனை மூடினார்.
20அவன் அவரிடம், “கூடாரத்தின் வாயிலில் நின்று கொள், எவனாவது வந்து, ‘இங்கு ஓர் ஆள் இருக்கின்றானா?’ என்று உன்னைக் கேட்டால் நீ ‘இல்லை’ என்று சொல்” என்றான்.
21அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது, எபேரின் மனைவி யாவேல் கூடார முளை ஒன்றையும் கத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளைதரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிந்தான்.
22இதோ! பாராக்கு சீசராவைத் துரத்திக் கொண்டு வந்தார். யாவேல் அவரைச் சந்திக்க வெளியே வந்தார். யாவேல் அவரிடம், “வாரும்! நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன்” என்றார். அவரும் அவருடன் உள்ளே செல்ல, இதோ! சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது.
23இவ்வாறு, அந்நாளில் கடவுள் கானானிய மன்னன் யாபினை இஸ்ரயேல் மக்களின் முன் ஒடுக்கினார்.
24இஸ்ரயேல் மக்களின் கை மேன்மேலும் வலுவடைந்து, கானானிய மன்னன் யாபினை நசுக்கி அழித்தது.