1ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

அறிவுரை

2ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி எயோதியாவைக் கேட்டுக்கொள்கிறேன்; சிந்திக்காவை கெஞ்சிக் கேட்கிறேன்.
3என் உண்மையான தோழரே, அவர்களுக்கு உதவி செய்யுமாறு உம்மிடம் வேண்டுகிறேன். ஏனெனில், அவர்கள் கிளமந்தோடும், மற்ற உடன் உழைப்பாளரோடும் என்னோடும் சேர்ந்து நற்செய்திக்காகப் போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்பட்டுள்ளன.
4ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.
5கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.
7அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.
8இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.
9நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.

6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும்

நன்கொடைகளுக்கு நன்றி

10என்னைப்பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால், அதைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை.
11எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில், எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்.
12எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
13எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.
14ஆயினும், நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.
15பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத்தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள்.
16ஏனெனில், நான் தெசலோனிக்காவில் இருந்தபோதுகூட என் தேவையை நிறைவுசெய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள்.
17நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன்.
18நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியுமாகும்.
19என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
20நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

7. முடிவுரை

இறுதி வாழ்த்து

21கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் இறைமக்கள் யாவருக்கும் வாழ்த்து கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர் சகோதரிகள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
22இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் சீசரின் அரண்மனைப் பணியாளர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
23ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!

4:15-16 2 கொரி 11:9. 4:18 விப 29:18.