எருசலேம் திருச்சபையில் பேதுருவின் அறிக்கை

1பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதைப் பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள்.
2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்த சேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர்.
3“நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர்.
4பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார்.
5“நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
6அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன்.
7“பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு” என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.
8அதற்கு நான், “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லை” என்றேன்.
9இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, “தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே” என்று அக்குரல் ஒலித்தது.
10இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.
11அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர்.
12தூய ஆவியார் என்னிடம், “தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்” என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம்.
13-14அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம்வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார்.
15நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.
16அப்போது, “யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால், நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப்பெறுவீர்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்.
17இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார்.
18இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

அந்தியோக்கிய திருச்சபை

19ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை.
20அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.
21ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.
22இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள்.
23அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும், உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
24அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
25பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்;
26அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
27அப்போது ஒருநாள் எருசலேமிலிருந்து இறைவாக்கினர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்தார்கள்.
28அவர்களுள் அகபு என்னும் பெயருடைய ஒருவர் எழுந்து நின்று தூய ஆவியாரால் ஏவப்பட்டவராய் உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார். அது கிளாதியு பேரரசர் காலத்தில் ஏற்பட்டது.
29அப்பொழுது சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருளுதவியை யூதேயாவில் வாழ்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
30அப்பொருளுதவியைப் பர்னபா, சவுல் ஆகியோர் வாயிலாக மூப்பர்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

11:16 திப 1:5. 11:17 திப 15:9. 11:19 திப 8:1-4; 21:4. 11:28 திப 21:10. 11:30 கலா 2:1.