பேதுருவும் கொர்னேலியுவும்

1செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.
2அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர்.
3ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில் அவர் ஒரு காட்சி கண்டார். அதில் கடவுளுடைய தூதர் அவரிடம் வந்து “கொர்னேலியு” என்று அழைப்பது தெளிவாகத் தெரிந்தது.
4அவர் வானதூதரை உற்றுப்பார்த்து, “ஆண்டவரே, என்ன?” என்று அச்சத்தோடு கேட்டார். அதற்குத் தூதர், “உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன; அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார்.
5இப்போது யோப்பா நகருக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்.
6தோல் பதனிடும் சீமோன் என்பவரின் வீட்டில் அவர் விருந்தினராய் தங்கியிருக்கிறார். அவர் வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.
7தம்மோடு பேசிய வானதூதர் சென்றதும் அவர் தம் வீட்டு வேலையாள்களுள் இருவரையும் தம் நம்பிக்கைக்குரிய இறைப்பற்றுள்ள படைவீரர் ஒருவரையும் கூப்பிட்டு,
8நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினார்.
9அவர்கள் வழிநடந்து மறுநாள் அந்த நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பேதுரு இறைவனிடம் வேண்ட வீட்டின் மேல்தளத்துக்குச் சென்றார். அப்போது மணி பன்னிரண்டு.
10அவருக்குப் பசி உண்டாயிற்கு. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்;
11வானம் திறந்திருப்தையும், பெரிய நான்கு கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் கண்டார்.
12நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன.
13அப்போது
“பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு”
என்று ஒரு குரல் கேட்டது.
14அதற்கு மறுமொழியாகப் பேதுரு, “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதேயில்லை” என்றுரைத்தார்.
15இரண்டாம் முறையாக அக்குரல்,
“தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே”
என்று ஒலித்தது.
16இப்படி மும்முறை நடந்தவுடன் அந்த விரிப்பு வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
17தாம் கண்ட காட்சியின் பொருள் என்ன என்பது பற்றிப் பேதுரு தமக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தபோது, கொர்னேலியு அனுப்பிய ஆள்கள் சீமோன் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கதவருகில் வந்து நின்று,
18பேதுரு என்னும் பெயருடைய சீமோன் என்பவர் இங்குத் தங்கியிருக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டனர்.
19பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், “இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்;
20நீ கீழே இறங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச் செல். ஏனெனில், நான்தான் அவர்களை அனுப்பியுள்ளேன்” என்றார்.
21பேதுரு கீழே இறங்கி அவர்களிடம், “நீங்கள் தேடுபவர் நான்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார்.
22அதற்கு அவர்கள், “நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்; யூதமக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்; உம்மைத் தம் வீட்டுக்கு வரவழைத்து நீர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று தூய வானதூதர் அவருக்கு வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்கள்.
23அப்போது பேதுரு அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விருந்தோம்பினார். மறுநாள் அவர் அவர்களுடன் புறப்பட்டுப் போனார். யோப்பாவிலுள்ள சகோதரர் சிலரும் அவரோடு சென்றனர்.
24அடுத்த நாள் அவர் செசரியா நகரைச் சென்றடைந்தார். கொர்னேலியு தம் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
25பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.
26பேதுரு, “எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்” என்று கூறி அவரை எழுப்பினார்.
27அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு
28அவர்களைப் பார்த்து, “ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது” எனக் கடவுள் எனக்குக் காட்டினார்.
29ஆகவே, நீங்கள் என்னை வரவழைத்தபோது மறுப்புக் கூறாமல் வந்தேன். இப்போது சொல்லும்; எதற்காக என்னை வரவழைத்தீர்?” என்று வினவினார்.
30அதற்கு கொர்னேலியு கூறியது: “மூன்று நாள்களுக்குமுன் இதே நேரத்தில், அதாவது பிற்பகல் மூன்று மணிக்கு என் வீட்டில் நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது பளபளப்பான ஆடையணிந்த ஒருவர் என்முன் வந்து நின்றார்.
31அவர் என்னிடம், “கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார். உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார்.
32ஆகவே, நீர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயருடைய சீமோனை வரவழையும். அவர் தோல் பதனிடுபவராகிய சீமோன் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். அவ்வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.
33எனவேதான், உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீரும் இங்கு வந்தது நல்லது. ஆண்டவர் பணித்த அனைத்தையும் இப்போதும் உம் வழியாகக் கேட்பதற்கு நாங்கள் யாவரும் கடவுள் திருமுன் கூடியிருக்கிறோம்.”

கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை

34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்.
35எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
36இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர்.
37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.
38கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.
39யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.
40ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.
41ஆயினும், அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
42மேலும், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
43அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.

பிற இனத்தவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல்

44பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது.
45பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்;
46ஏனென்றால், அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.
47பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கூறி,
48இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

10:14 எசே 4:14. 10:15 தொநூ 1:31. 10:26 திப 14:15; திவெ 19:10. 10:28 திப 15:9. 10:34 இச 10:17; உரோ 2:11; 1 பேது 1:17. 10:36 எசா 52:7.