எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1-2; லூக் 21:5-6)

1இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், “போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும்” என்று அவரிடம் சொல்ல,
2இயேசு அவரை நோக்கி,
“இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்”
என்றார்.

வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்
(மத் 24:3-14; லூக் 21:7-19)

3-4இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, “நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டனர்.
5அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது:
“உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
6ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
7போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால், இவையே முடிவாகா.
8நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.
9“நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள்.
10ஆனால், எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.
11அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில், பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.
12மேலும், சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்; பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள்.
13எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால், இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.”

வரப்போகும் கொடும் வேதனை
(மத் 24:15-28; லூக் 21:20-24)

14“ ‘நடுங்க வைக்கும் தீட்டு’* நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.
15வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.
16வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.
17அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!
18இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.
19ஏனெனில், இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.
20ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால், தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார்.
21அப்பொழுது யாராவது உங்களிடம், ‘இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார்’ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.
22ஏனெனில், போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர்.
23நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.

மானிடமகன் வருகை
(மத் 24:29-31; லூக் 21:25-28)

24“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.
25விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.
26அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.
27பின்பு, அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.”

அத்தி மர உவமை
(மத் 24:32-35; லூக் 21:29-33)

28“அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
29அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
30இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
31விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால், என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”

மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36-44)

32“ஆனால், அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
33கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.
34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.
35அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.
36அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.
37நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”

13:9-11 மத் 10:17-20; லூக் 12:11-12. 13:13 மத் 10:22. 13:15-16 லூக் 17:31. 13:19 தானி 12:1; லூக் 21:23,24. 13:24-25 எசா 13:10; 34:14; எசே 32:7; யோவே 2:10,31; 3:15; திவெ 6:12,23. 13:26 தானி 7:13,14; திவெ 1:7. 13:32 மத் 24:36. 13:34 லூக் 14:13, லூக் 7:37,38.
13:14 ‘நடுங்கவைக்கும் தீட்டு’ என்பது மக்கபேயர் காலத்தில் எருசலேம் கோவிலில் அந்தியோக்கு எப்பிப்பானசு நிறுவிய சிலையைக் குறிக்கும். இதனைப்பற்றித் தானி 9:27; 11:31; 12:11; 1 மக் 1:54 ஆகிய வசனங்களில் காணலாம்.