கொடிய குத்தகைக்காரர் உவமை
(மத் 21:33-46; லூக் 20:9-19)

1இயேசு அவர்களிடம் உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்;
“ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி* வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார்.
2பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்.
3ஆனால், அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
4மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள்.
5அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.
6இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன், தம்மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.
7அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
8அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
9திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.

10‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே

கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.

11ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது

நம் கண்களுக்கு வியப்பாயிற்று’

என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?”
என்று அவர் கேட்டார்.
12தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்; ஆனால், மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே, அவரை விட்டு அகன்றார்கள்.

சீசருக்கு வரி செலுத்துதல்
(மத் 22:15-22; லூக் 20:20-26)

13பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.
14அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
15அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு,
“ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்”
என்றார்.
16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம்,
“இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?”
என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “சீசருடையவை” என்றார்கள்.
17அதற்கு இயேசு அவர்களை நோக்கி,
“சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”
என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி
(மத் 22:23-33; லூக் 20:27-40)

18உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி,
19“போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.
20சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.
21இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
22ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
23அவர்கள் உயிர்த்தெழும் போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில், எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.
24அதற்கு இயேசு அவர்களிடம்,
“உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
25இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மாறாக அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள்.
26இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா?

‘ஆபிரகாமின் கடவுள்,
ஈசாக்கின் கடவுள்,
யாக்கோபின் கடவுள் நானே’

என்று கடவுள் அவரிடம் சொன்னாரே!
27
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்”
என்று கூறினார்.

முதன்மையான கட்டளை
(மத் 22:34-40; லூக் 10:25-28)

28அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார்.
29-30அதற்கு இயேசு,

“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’

என்பது முதன்மையான கட்டளை.

31‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’

என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை”
என்றார்.
32அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே,

‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’

என்று நீர் கூறியது உண்மையே.

33அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்தவதும்

எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார்.
34அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம்,
“நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை”
என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

தாவீதின் மகன் பற்றிய விளக்கம்
(மத் 22:41-46; லூக் 20:41-44)

35இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது,
“மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி?
36தூய ஆவியின் தூண்டுதலால்,

‘ஆண்டவர் என் தலைவரிடம்,
"நான் உம் பகைவரை
உமக்கு அடிபணியவைக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்"

என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா!
37
தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?”
என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை
(மத் 23:1-36; லூக் 20:45-47)

38இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது,
“மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;
39தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;
40
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே”
என்று கூறினார்.

ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை
(லூக் 21:1-4)

41இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.
42அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு* இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
43அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து,
“இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
44
ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்”
என்று அவர்களிடம் கூறினார்.

12:1 எசா 5:1,2. 12:10-11 திபா 118:22,13. 12:19 இச 25:5. 12:26 விப 3:6. 12:29-30 இச 6:4,5. 12:31 லேவி 19:18. 12:32 இச 4:35. 12:33 ஓசே 6:6. 12:36 திபா 110:1; திப 2:34-35; எபி 1:13.
12:1 ‘பிழிவுக்குழி’ என்பது திராட்சைப் பழங்களை மிதித்து சாறு பிழிவதற்காகப் பாறைப்பகுதியில் வெட்டப்படுவது. 12:15 ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம். 12:42 ஒரு கொசிராந்து என்பது தெனாரியத்தில் அறுபத்து நான்கில் ஒரு பகுதி மதிப்புடைய காசு.