4. அந்தியோக்கு எப்பிபானும் யூதரின் துன்பமும்

சீமோன் செய்த தீமைகள்

1தன் சொந்த நாட்டுக்கு எதிராக நிதியைப்பற்றி அறிவித்த சீமோன், ஓனியாவைப்பற்றிப் பழிதூற்றினான்; ஓனியாவே எலியதோரைத் தூண்டிவிட்டவர் என்றும், இந்தக் கேட்டுக்கெல்லாம் அவரே காரணம் என்றும் கூறினான்.
2நகரின் புரவலரும் தம் நாட்டு மக்களின் காவலரும் திருச்சட்டத்தின்மீது பற்றார்வமிக்கவருமாய் விளங்கிய ஓனியாவை அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவர் என்று கூறத்துணிந்தான்.
3சீமோனின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுள் ஒருவன் கொலைகள் செய்யும் அளவிற்குச் சீமோன் ஓனியாவிடம் கொண்டிருந்த பகைமை முற்றியது.
4இத்தகைய எதிர்ப்பு பேரிடர் விளைவிப்பது என்றும், மெனஸ்தேயின் மகனும் கூலேசிரியா, பெனிசியா ஆகியவற்றின் ஆளுநனுமான அப்பொல்லோன், சீமோனின் தீச்செயல்களை முடுக்கிவிடுகிறான் என்றும் ஓனியா உணர்ந்தார்.
5ஆகவே அவர் மன்னனிடம் சென்றார்; தம் நாட்டு மக்கள்மீது குற்றம் சாட்ட அல்ல, அவர்கள் அனைவருடைய தனிப்பட்ட, பொது நலனையும் கருதியே சென்றார்.
6ஏனெனில் மன்னன் தலையிட்டாலொழிய பொது அலுவல்களில் அமைதியான தீர்வு காண முடியாது என்றும், சீமோன் தன்னுடைய மடமையைக் கைவிடமாட்டான் என்றும் கண்டார்.

யாசோன் கிரேக்கமயமாக்கலைப் புகுத்துதல்

7செலூக்கு இறந்தபின் எப்பிபான் என்று அழைக்கப்பெற்ற அந்தியோக்கு அரியணை ஏறினான். அப்போது ஓனியாவின் சகோதரனான யாசோன் கையூட்டுக் கொடுத்துத் தலைமைக் குரு பீடத்தைக் கைப்பற்றினான்.
8ஏனெனில் மன்னனை அணுகி, பதினாலாயிரத்து நானூறு கிலோ* வெள்ளியம், வேறொரு வருமானத்திலிருந்து மூவாயிரத்து இருநூற்று கிலோ வெள்ளியும்** கொடுப்பதாக உறுதியளித்திருந்தான்.
9மேலும் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றும் அதற்காக இளைஞர் குழு ஒன்றும் அமைக்கவும், எருசலேமின் குடிகளை அந்தியோக்கி நகரின் குடிகளாகப் பதிவுசெய்யவும் அவனுக்கு அதிகாரம் தர இசைந்தால் ஆறாயிரம் கிலோ* வெள்ளி கூடுதலாகக் கொடுப்பதாகவும் உறுதி கூறியிருந்தான்.
10மன்னன் அதற்கு இசையவே, யாசோன் தலைமைக் குருபீடத்தைக் கைப்பற்றினான்; உடனே தன் நாட்டார் கிரேக்க வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தான்.
11உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ளப் பின்னர் அனுப்பப்பெற்ற யூப்பொலேமின் தந்தையாகிய யோவான் வழியாக யூதர்களுக்கு கிடைத்திருந்த அரச சலுகைகளை யாசோன் புறக்கணித்தான்; சட்டப்படி அமைந்த வாழ்க்கை முறைகளை அறிந்து அவற்றுக்கு முரணான புதிய பழக்கவழக்கங்களைப் புகுத்தினான்.
12மலைக்கோட்டைக்கு அடியிலேயே ஓர் உடற்பயிற்சிக் கூடத்தை விரைவிலே நிறுவினான்; மிகச் சிறந்த இளைஞர்கள் உடற்பயிற்சி விளையாட்டுகளில் கலந்துகொள்ளவும் தூண்டினான்.
13இறைப்பற்றில்லாதவனும் உண்மையான குரு அல்லாதவனுமான யாசோனின் அளவு மீறிய தீச்செயலால், கிரேக்க வாழ்க்கைமுறை மீதும் வெளிநாட்டுப் பழக்கவழக்கங்கள்மீதும் மக்கள் கொண்டிருந்த போரார்வம் உச்சக்கட்டத்தை அடைந்தது.
14அதனால் குருக்கள் பலிபீடத்தில் பணி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை; மாறாக, கோவிலை வெறுத்தார்கள்; பலிகளைப் புறக்கணித்தார்கள்; அடையாள ஒலி கேட்டவுடன் சட்டத்துக்கு முரணான பயிற்சிகளில் பங்குகொள்ள விளையாட்டரங்குக்கு ஓடினார்கள்;
15தங்கள் மூதாதையர் பெருமைமிக்கவை என்று கருதியவற்றை வெறுத்து ஒதுக்கினார்கள்; கிரேக்கர்கள் உயர்வாகக் கருதியவற்றைப் பெரிதும் மதித்தார்கள்.
16இதன் பொருட்டு பேரிடர்கள் அவர்களுக்கு நேர்ந்தன. யூதர்கள் யாருடைய வாழ்க்கைமுறையை வியந்து பாராட்டி முழுமையாகப் பின்பற்ற விரும்பினார்களோ, அவர்களே யூதர்களுக்குப் பகைவர்களாக மாறித் துன்புறுத்தினார்கள்.
17ஏனெனில் கடவுளின் கட்டளைகளை இழிவபடுத்துவது சிறிய செயல் அன்று, இதைப் பின்வரும் நிகழ்ச்சி தெளிவுபடுத்தும்.
18ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் விளையாட்டு விழா தீர் நகரில் நடைபெற்றபோது மன்னனும் அங்கு இருந்தான்.
19அவ்வேளையில் கொடியவனான யாசோன் எருசலேமில் இருந்த அந்தியோக்கி நகரக் குடிகளைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து, எர்க்குலசு தெய்வத்துக்குப் பலிசெலுத்த தொள்ளாயிரம் கிராம்* வெள்ளியைக் கொடுத்தனுப்பினான். அப்பணத்தைக் கொண்டுசென்றவர்களோ அதனைப் பலிக்குப் பயன்படுத்துவது முறைகேடானது என்றும் வேறு நோக்கத்திற்காகச் செலவிடுவதே சிறந்தது என்றும் எண்ணினார்கள்.
20எர்க்குலசுக்குப் பலிசெலுத்துவது இப்பணத்தை அனுப்பியவரின் நோக்கம்; எனினும் அதைக் கொண்டு சென்றவர்கள் போர்க்கப்பல் கட்டுவதற்குச் செலவிட முடிவு செய்தார்கள்.
21பிலமேத்தோர் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மெனஸ்தேயின் மகனான அப்பொல்லோன் எகிப்துக்கு அனுப்பப்பட்டபோது, பிலமேத்தோர் தன் அரசுக்கு எதிரி என்று அந்தியோக்கு அறிந்து, தன் பாதுகாப்புக்கான வழிவகைகளைத் தேடினான். ஆகவே யாப்பாவுக்குச் சென்று அங்கிருந்து எருசலேமுக்குப் புறப்பட்டான்.
22யாசோனும் அந்நகர மக்களும் அவனைச் சிறப்பாக வரவேற்றார்கள்; தீவட்டிகளோடும் முழக்கங்களோடும் உள்ளே அழைத்துச் சென்றார்கள். பின்பு அவன் பெனிசியாவுக்குத் தன் படையுடன் சென்றான்.

மெனலா தலைமைக் குருவாதல்

23மூன்று ஆண்டுக்குப்பின் மன்னனுக்குப் பணம் கொண்டுசெல்லவும், உடனடியாகக் கவனிக்கவேண்டியவை பற்றி மன்னனின் முடிவுகளை அறிந்து வரவும் சீமோனின் சகோதரனான மெனலாவை யாசோன் அனுப்பி வைத்தான்.
24மன்னன் முன்னிலையில் மெனலா வந்தபொழுது, தன்னை அதிகாரமுள்ளவனாகக் காட்டிக்கொண்டு அவனை அளவு மீறிப் புகழ்ந்தான்; யாசோன் கொடுத்ததைவிட பன்னிரண்டு டன் வெள்ளி மிகுதியாகக் கொடுத்து, தலைமைக் குருபீடத்தைத் தனக்கென்று கைப்பற்றிக் கொண்டான்.
25மன்னனின் ஆணையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய அவனிடம் தலைமைக் குருவுக்குரிய தகுதியே இல்லை. கொடுங்கோலனுக்குரிய சினமும் காட்டு விலங்குக்குரிய சீற்றமும் மட்டுமே இருந்தன.
26இவ்வாறு, தன் சகோதரனை அகற்றிய யாசோனும் வேறொருவனால் அகற்றப்பட்டு அம்மோன் நாட்டுக்கு அகதியாகத் துரத்தப்பட்டான்.
27மெனலா தொடர்ந்து தலைமைக் குருவாக இருந்தபோதிலும், தான் மன்னனுக்குக் கொடுப்பதாக உறுதியளித்திருந்த பணத்தைச் செலுத்தவில்லை.
28மலைக்கோட்டைக்குத் தளபதியான சோசித்திராத்து வரி தண்டும்பொறுப்பும் உடையவனானதால், மெனலாவிடமிருந்து பணத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தான். இது தொடர்பாக மன்னன் அவ்விருவரையும் தன்னிடம் அழைத்தான்.
29தலைமைக் குரு மெனலா தன் சகோதரனான லிசிமாக்கைத் தன் பதிலாளாய் விட்டுச் சென்றான்; சைப்பிரசு நாட்டுப் படைத்தலைவனான கிராத்துவைத் தன் பதிலாளாய் சோசித்திராத்து ஏற்படுத்தினான்.

ஓனியா கொலை செய்யப்படுதல்

30நிலைமை இவ்வாறு இருக்க, மன்னன் தன் காமக்கிழத்தியான அந்தியோக்கிக்குத் தர்சு, மல்லோத்தா ஆகிய நகரங்களை அன்பளிப்பதாகக் கொடுத்திருந்ததால் அந்நகரங்களின் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள்.
31ஆகவே மன்னர் உயர் பதவி வகித்துவந்தோருள் ஒருவனான அந்திரோனிக்கைத் தன் பதிலாளாய் விட்டுவிட்டு, குழப்பத்தைத் தீர்க்க அந்நகரங்களுக்கு விரைந்து சென்றான்.
32ஆனால் மெனலா இதுவே தக்க வாய்ப்பு என்று எண்ணியவனாய், கோவிலுக்குச் சொந்தமான பொற்கலன்கள் சிலவற்றைத் திருடி அந்திரோனிக்குக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்; மற்றக் கலன்களைத் தீர் நகரிலும் சுற்றியிருந்த நகரங்களிலும் ஏற்கெனவே விற்றுவிட்டான்.
33இவை முற்றிலும் உண்மை என்று ஓனியா அறியவந்த பொழுது அந்தியோக்கி நகருக்கு அருகில் தாப்னேயில் இருந்த தூய இடத்தில் அடைக்கலம் புகுந்தபின் மெனலாவைப் பொதுவில் கடிந்து கொண்டார்.
34எனவே அந்திரோனிக்கை மெனலா தனியே சந்தித்து, ஓனியாவைக் கொல்லும்படி வேண்டினான். அந்திரோனிக்கு ஓனியாவிடம் சென்று நண்பனைப் போல நடித்து நயமாகப் பேசி ஆணையிட்டான். இதுபற்றி ஓனியாவுக்கு ஐயம் ஏற்றபட்டபோதிலும் அந்திரோனிக்கு அவரைத் தூய இடத்திலிருந்து வெளியே வர இணங்கவைத்து, நீதிக்கு அஞ்சாமல் உடனே அவரைக் கொலை செய்தான்.

அந்திரோனிக்கு பெற்ற தண்டனை

35இதன்பொருட்டு யூதர்கள் மட்டுமல்ல, மற்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இம்மனிதன் செய்த முறையற்ற கொலையினால் எரிச்சலுற்றுச் சீற்றம் கொண்டார்கள்.
36சிலிசியாப் பகுதியிலிருந்து மன்னன் திரும்பிவந்தபோது அந்தியோக்கில் இருந்த யூதர்கள் ஓனியாவின் காரணமற்ற கொலைபற்றி முறையிட்டார்கள்; கிரேக்கர்களும் இக்குற்றத்தை வெறுத்தார்கள்.
37ஆகவே அந்தியோக்கு மனம் வருந்தி இரக்கம் நிறைந்தவனாய், இறந்தவருடைய அறிவுத்திறனையும் நன்னடத்தையையும் நினைத்து அழுதான்.
38மேலும் சினம் மூண்டவனாய், அந்திரோனிக்கிடமிருந்து அரச ஆடைகளை உடனே உரித்தெடுத்து, அவனுடைய மற்ற ஆடைகளையும் கிழித்தெறிந்து, நகர் முழுவதும் அவனை நடத்திச் சென்று, ஓனியாவைக் கொன்ற அதே இடத்திற்குக் கொண்டு சென்று அந்த இரத்தவெறியனை அங்கேயே கொன்றான். இவ்வாறு ஆண்டவர் அவனுக்குத் தகுந்த தண்டனை அளித்தார்.

லிசிமாக்கு கொலை செய்யப்படுதல்

39மெனலாவின் மறைமுக ஆதரவுடன் லிசிமாக்கு எருசலேம் கோவில் பொருள்களைத் திருடி அதைத் தீட்டுப்படுத்தும் பல செயல்களைச் செய்தான். திரளான பொற்கலன்கள் ஏற்கெனவே களவு செய்யப்பட்டுவிட்டன என்னும் செய்தி எங்கும் பரவியபொழுது மக்கள் லிசிமாக்கை எதிர்த்து எழுந்தார்கள்.
40மக்கள் கூட்டம் சீற்றமுற்று லிசிமாக்கை எதிர்த்தெழ, அவன் போர்க்கோலம் பூண்ட ஆள்கள் ஏறத்தாழ மூவாயிரம் பேரைத் திரட்டி, வயதில் முதிர்ந்தவனும் மடமையில் ஊறியவனுமான அவுரானின் தலைமையில் முறைகேடாக அவர்களைத் தாக்கினான்.
41இத்தாக்குதலுக்கு லிசிமாக்கே காரணம் என்று யூதர்கள் அறிந்தபொழுது, சிலர் கற்களை எடுத்தனர்; சிலர் தடிகளைத் தூக்கினர்; சிலர் அங்குக் கிடந்த சாம்பலைக் கை நிறைய அள்ளினர்; பெருங் குழப்பத்திற்கிடையில் லிசிமாக்கின்மீதும் அவனுடைய ஆள்கள்மீதும் அவற்றை எறிந்தனர்.
42அதன் விளைவாக அவர்களுள் பலரைக் காயப்படுத்தினர்; சிலரைக் கொலை செய்தனர்; மற்ற அனைவரையும் ஓட வைத்தனர். மேலும், அந்தக் கோவில் திருடனைக் கருவூலத்தின் அருகிலேயே கொன்றனர்.

மெனலாமீது வழக்கு

43இந்நிகழ்ச்சி தொடர்பாக மெனலாவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
44மன்னன் தீர் நகருக்கு வந்தபோது ஆட்சிக் குழுவினால் அனுப்பப்பெற்ற மூவர் அவன்முன் இவ்வழக்குபற்றி எடுத்துக் கூறினர்.
45ஏற்கெனவே தோல்வியுற்ற நிலையில் இருந்த மெனலா, தொரிமேனின் மகனான தாலமிக்கு ஒரு பெருந் தொகை கொடுப்பதாக உறுதி கூறினான்; மெனலாவின் கருத்துக்கு மன்னனைத் தாலமி இணங்க வைக்குமாறு கேட்டுக்கொண்டான்.
46ஆகவே தாலமி காற்று வாங்கப் போவதுபோல மன்னனைத் திறந்த வெளிஅரங்குப் பக்கம் தனியாக அழைத்துச் சென்று அவனுடைய மனத்தை மாற்றிக்கொள்ளுமாறு தூண்டினான்.
47அதனால் எல்லாத் தீமைகளுக்கும் காரணமான மெனலாவுக்கு எதிராகச் சாட்டப்பட்ட குற்றங்களினின்று மன்னன் அவனை விடுவித்தான்; இரங்குதற்குரிய அம்மூவருக்கும் சாவுத் தண்டனை அளித்தான். இவர்கள் சித்தியர்களிடமே* முறையிட்டிருந்தாலும் குற்றம் அற்றவர்கள் என்று தீர்ப்புப் பெற்றிருப்பர்!
48இவ்வாறு நகரத்திற்காகவும் மக்களுக்காகவும் கோவிலின் கலன்களுக்காகவும் குரல் எழுப்பியவர்கள் உடனடியாக முறையற்ற தண்டனைக்கு உள்ளானார்கள்.
49இதன்பொருட்டுத் தீர் நகரத்தார்கூட இக்குற்றத்தினை வெறுத்து அவர்களுடைய அடக்கத்திற்குத் தாராளமாக உதவினர்.
50ஆனால் அதிகாரம் செலுத்தியவர்களின் பேராசையால் மெனலா பதவியில் தொடர்ந்தான்; தீமை செய்வதில் ஊறிப்போய், தன் சொந்த மக்களுக்கு எதிராகவே கொடிய சூழ்ச்சி செய்துவந்தான்.

4:10 1 மக் 1:13. 4:11 1 மக் 8:17. 4:12 1 மக் 1:14.
4:8 பதினாலாயிரத்து நானூறு கிலோ - ‘முந்நூற்று அறுபது தாலந்து’ மூவாயிரத்து இருநூற்று கிலோ - ‘எண்பது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:8 ‘முந்நூற்று அறுபது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:8 ‘எண்பது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:9 ‘நூற்றைம்பது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:19 ‘முந்நூறு திராக்மா’ என்பது கிரேக்க பாடம். 4:47 ‘சித்தியர்கள்’ கொடியவர்களாக, காட்டு மிராண்டிகளாகக் கருதப்பட்டார்கள்.