3. கோவிலைத் தீட்டுப்படுத்த எலியதோரின் முயற்சி

எலியதோரின் எருசலேம் வருகை

1தலைமைக் குருவான ஓனியாவின் இறைப்பற்றையும் தீமைமீது அவர் கொண்டிருந்த வெறுப்பையும் முன்னிட்டுத் திருநகரில் முழு அமைதி நிலவியது; சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன.
2மன்னர்களே அந்த இடத்தை மதித்தார்கள்; சிறப்பான நன்கொடைகள் அனுப்பிக்கோவிலை மாட்சிப்படுத்தினார்கள்.
3ஆசியாவின் மன்னரான செலூக்கு கூட, பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணிக்குத் தேவையான எல்லாச் செலவுகளையும் தம் சொந்த வருமானத்தினின்று கொடுத்துவந்தார்.
4ஆனால் பென்யமின் குலத்தைச் சேர்ந்தவனும் கோவில் நிர்வாகியாக அமர்த்தப் பெற்றிருந்தவனுமாகிய சீமோன், நகரின் சந்தையை நடத்தும் முறைபற்றித் தலைமைக் குருவோடு மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தான்.
5அவன் ஓனியாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாததால், தர்சு என்பவரின் மகனும் அந்நாளில் கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின் ஆளுநனுமான அப்பொல்லோனிடம் சென்றான்.
6எருசலேம் கோவிலில் உள்ள கருவூலம் இதுவரை கேள்விப்பட்டிராத செல்வத்தால் நிறைந்துள்ளது; அதில் கணக்கிட முடியாத அளவுக்குப் பணம் இருக்கிறது; அது பலிகளின் கணக்கில் சேராதது; அதை மன்னனின் கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியும் என்றெல்லாம் அவனிடம் கூறினான்.
7மன்னனை அப்பொல்லோன் சந்தித்தபோது பணத்தைப்பற்றித் தான் கேள்விப்பட்டதை அவனிடம் எடுத்துரைத்தான். மன்னனும் தன் கண்காணிப்பாளான எலியதோரைத் தேர்ந்தெடுத்து, மேலே குறிப்பிட்ட பணத்தை எடுத்துவரும்படி ஆணை பிறப்பித்து அனுப்பினான்.
8உடனே எலியதோர் புறப்பட்டுக் கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின் நகரங்களைப் பார்வையிடும் பாவனையில் மன்னனின் திட்டத்தை நிறைவேற்றப் பயணமானான்.
9அவன் எருசலேமுக்கு வந்தபோது அந்நகரின் தலைமைக் குரு அவனைக் கனிவுடன் வரவேற்றார். அவன் அங்கு வந்ததன் நோக்கத்தை விளக்கினான்; தனக்குக் கிடைத்த செய்திபற்றிக் குருவிடம் எடுத்துரைத்து அதெல்லாம் உண்மைதானா என்று வினவினான்.
10கைம்பெண்களுக்கும் ஆதரவற்றோருக்கும் உரிய சிறு நிதி கோவிலில் இருப்பதாகத் தலைமைக் குரு அவனுக்கு விளக்கினார்;
11மற்றுமொரு தொகை மிக உயர்நிலையில் இருந்த தோபியாவின் மகனான இர்க்கானுடையது என்றும், மொத்தம் பதினாறு டன் வெள்ளியும் எட்டு டன் பொன்னும்* மட்டுமே உள்ளன என்றும் சொன்னார். ஆனால் நெறிகெட்ட சீமோன் உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறியிருந்தான்.
12மேலும், அவ்விடத்தின் தூய்மையிலும் அனைத்துலகப் புகழ்ப்பெற்ற அக்கோவிலின் புனிதத்திலும் மங்கா மாட்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்குத் தீங்கிழைப்பது முற்றிலும் முடியாத செயலாகும் என்றும் தலைமைக் குரு கூறினார்.

கோவிலில் நுழைய எலியதோரின் முயற்சி

13எலியதோர் தான் மன்னிடமிருந்து பெற்றிருந்த ஆணையின் பொருட்டு, அந்தப் பணம் மன்னனின் கருவூலத்திற்காக எப்படியாவது பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று கூறினான்;
14ஆகவே தான் குறித்த ஒரு நாளில் நிதி நிலைமையை ஆய்ந்தறியும்பொருட்டுக் கோவிலுக்குள் சென்றான். நகர் முழுவதும் பெரும் துயரில் ஆழ்ந்தது.
15குருக்கள் தங்கள் குருத்துவ உடைகளோடு பலிபீடத்தின்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள்; நிதிபற்றி விதிமுறைகளைக் கொடுத்திருந்த விண்ணக இறைவனைத் துணைக்கு அழைத்தார்கள்; நிதியைச் சேமித்துவைத்திருந்தவர்கள் பொருட்டு அதனைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.
16தலைமைக் குருவின் தோற்றத்தைப் பார்த்தபோது மனம் புண்பட்டது; அவருடைய முகத் தோற்றமும் நிறமாற்றமும் அவரது மனத்துயரை வெளிப்படுத்தின.
17பேரச்சமும் நடுக்கமும் அவரை ஆட்கொள்ள, அவரின் உள்ளத்தில் உறைந்திருந்த ஆழ்துயர் காண்போருக்குத் தெளிவாயிற்று.
18தூயஇடம் தீட்டுப்படவிருந்ததை அறிந்த மக்கள் பொதுவில் மன்றாடத் தங்கள் வீடுகளிலிருந்து கூட்டமாக ஓடிவந்தார்கள்.
19பெண்கள் தங்களது மார்புக்குக் கீழே சாக்கு உடுத்தியவர்களாய் தெருக்களில் திரளாகக் கூடினார்கள்; வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாத கன்னிப்பெண்களுள் சிலர் நகர வாயில்களுக்கும் சிலர் நகர மதில்களுக்கும் ஓடினார்கள்; மற்றும் சிலர் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார்கள்.
20அவர்கள் அனைவரும் விண்ணகத்தை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தியவாறு மன்றாடினார்கள்.
21மக்கள் அனைவரும் குப்புற விழுந்து கிடந்ததையும் பெரும் துன்பத்தில் இருந்த தலைமைக் குருவின் ஏக்கத்தையும் பார்க்க இரங்கத்தக்கதாய் இருந்தது.
22கோவலில் ஒப்புவிக்கப்பட்டவற்றை ஒப்புவித்தவர்கள் பொருட்டு நன்கு பாதுகாக்கும்படி எல்லாம் வல்ல ஆண்டவரை அவர்கள் மன்றாடினார்கள்.
23ஆனால் எலியதோர் தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துவதில் முனைந்து நின்றான்.

எலியதோர் பெற்ற தண்டனை

24எலியதோர் தன் காவலர்களோடு கருவூலத்தை அடைந்தபோது, அதிகாரம் தாங்கும் ஆவிகளுக்கும் பேரரசர் மாபெரும் காட்சி ஒன்று தோன்றச்செய்ய, அவனைப் பின்பற்றத் துணிந்த அத்தனை பேரும் ஆண்டவருடைய ஆற்றலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அச்சத்தால் மயங்கி விழுந்தனர்;
25ஏனெனில் அணிமணி பூட்டிய ஒரு குதிரையையும் அதன்மேல் அச்சுறுத்தும் தோற்றமுடைய ஒரு குதிரைவீரரையும் கண்டார்கள். அக்குதிரை எலியதோரை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து தன் முன்னங்குளம்புகளால் அவனைத் தாக்கியது. குதிரைமேல் இருந்தவர் பொன் படைக்கலங்களை அணிந்தவராகத் தோன்றினார்.
26மேலும் இரண்டு இளைஞர்கள் அவன்முன் தோன்றினார்கள். அவர்கள் மிக்க வலிமை வாய்ந்தவர்கள், அழகுமிக்கவர்கள், பகட்டான உடை அணிந்தவர்கள். அவர்கள் அவனுக்கு இரு பக்கத்திலும் நின்றுகொண்டு தொடர்ந்து சாட்டையால் அவனை அடித்துக் காயப்படுத்தினார்கள்.
27காரிருள் சூழ, அவன் தரையில் விழுந்தபொழுது அவனுடைய ஆள்கள் அவனைத் தூக்கி, ஒரு தூக்குப்படுக்கையில் கிடத்தினார்கள்:
28சிறிது நேரத்திற்குமுன் தன் படையோடும் காவலர்களோடும் கருவூலத்திற்குள் நுழைந்தவன் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்தபோது அவனைத் தூக்கிச் சென்றார்கள். இதனால் அவர்கள் கடவுளின் மாபெரும் ஆற்றலைத் தெரிந்து கொண்டார்கள்.
29கடவுளின் இச்செயலால் அவன் பேச்சற்று, மீண்டும் நலம் பெறும் நம்பிக்கையற்றவனாய்க் கிடந்தான்.
30தம் சொந்த இடத்தை வியத்தகு முறையில் மாட்சிமைப்படுத்திய ஆண்டவரை யூதர்கள் போற்றினார்கள். மேலும் சிறிது நேரத்திற்குமுன் அச்சத்தாலும் குழப்பத்தாலும் நிறைந்திருந்த கோவிலில் எல்லாம் வல்லவரான ஆண்டவர் தோன்றவே, அது மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைந்து வழிந்தது.
31உடனே, இறக்கும் தறுவாயில் இருந்த எலியதோருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி உன்னத இறைவனிடம் மன்றாடுமாறு அவனுடைய நண்பர்கள் சிலர் ஓனியாவைக் கெஞ்சினர்.
32எலியதோருக்கு எதிராக யூதர்கள் யாதேனும் சூழ்ச்சி செய்திருப்பார்கள் என மன்னன் எண்ணலாம் என்று அஞ்சி, தலைமைக் குரு அவனுடைய உடல்நலனுக்காகப் பலி செலுத்தினார்.
33தலைமைக் குரு பாவக்கழுவாய்ப் பலி ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தபோது அவ்விளைஞர்கள் அதே ஆடைகளை அணிந்தவர்களாய் எலியதோருக்கு மீண்டும் தோன்றினார்கள்; நின்றவாறு அவர்கள், “தலைமைக் குரு ஓனியாவிடம் மிகுந்த நன்றியுடையவனாய் இரு; ஏனெனில் அவரை முன்னிட்டே ஆண்டவர் உனக்கு உயிர்ப்பிச்சை அளித்துள்ளார்.
34விண்ணக இறைவனால் தண்டிக்கப்பட்ட நீ கடவுளின் மாபெரும் ஆற்றலை எல்லா மனிதருக்கும் எடுத்துக் கூறு” என்றார்கள். இதைச் சொன்னதும் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

எலியதோரின் மனமாற்றம்

35அப்போது எலியதோர் ஆண்டவருக்குப் பலி செலுத்தியதுமன்றித் தன் உயிரைக் காத்தவருக்குப் பெரும் நேர்ச்சைகள் செய்தான். பின் ஓனியாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன் படைகளோடு மன்னனிடம் திரும்பிச் சென்றான்;
36மாபெரும் கடவுளின் செயல்களைத் தன் கண்ணால் கண்டு மனிதர் அனைவர்முன்னும் அவற்றுக்குச் சான்று பகர்ந்தான்.
37எருசலேமுக்கு மீண்டும் அனுப்புவதற்கு எத்தகைய மனிதன் தகுதியானவன் என்று மன்னன் எலியதோரை வினவினான். அதற்கு அவன்,
38“உமக்குப் பகைவன் அல்லது உமது அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவன் எவனாயினும் இருந்தால் அவனை அங்கு அனுப்பும்; அவன் உயிர் பிழைக்க நேரிட்டாலும் நன்றாகக் கசையடிபட்டவனாகவே உம்மிடம் திரும்பி வருவான். ஏனெனில், அந்த இடத்தில் கடவுளின் ஆற்றல் உண்மையாகவே விளங்குகிறது.
39விண்ணகத்தில் உறைகின்றவரே அந்த இடத்தைக் காத்துவருவதுமன்றி, அதற்கு உதவியும் செய்கிறார்; அதற்குத் தீங்கு இழைக்க வருபவர்களைத் தாக்கி அழிக்கிறார்” என்றான்.
40இதுதான் எலியதோரின் கதை; இவ்வாறே கருவூலம் காப்பாற்றப்பட்டது.

3:11 பதினாறு டன் - ‘நானூறு தாலந்து’; எட்டு டன் - ‘இருநூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 3:11 ‘நானூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 3:11 ‘இருநூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.