லீசியாவின் வீழ்ச்சி

1சிறிது காலத்திற்குப்பின் மன்னனுடைய பாதுகாவலனும் உறவினனும் ஆட்சிப் பொறுப்பாளனுமான லீசியா நடந்தவற்றைக் கண்டு பெரிதும் எரிச்சல் அடைந்தான்.
2ஏறத்தாழ எண்பதாயிரம் காலாட்படையினரையும் குதிரைப்படையினர் அனைவரையும் திரட்டிக்கொண்டு யூதர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்; எருசலேம் நகரைக் கிரேக்கர்களின் குடியிருப்பாக மாற்றத் திட்டமிட்டான்;
3பிறஇனத்தாரின் கோவில்கள் மீது வரி விதித்ததுபோல் எருசலேம் கோவில் மீதும் வரி விதிக்கவும் ஆண்டுதோறும் தலைமைக் குரு பீடத்தை விலை பேசவும் எண்ணினான்.
4கடவுளின் ஆற்றல் பற்றி அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை; மாறாக, பெருந்திரளான தன் காலாட்படையினரையும் ஆயிரக்கணக்கான குதிரைப்படையினரையும் எண்பது யானைகளையும் நம்பி இறுமாப்புக் கொண்டான்.
5யூதேயா நாட்டின் மீது லீசியா படையெடுத்துச் சென்று, எருசலேமிலிருந்து ஏறத்தாழ முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரண்சூழ் நகரான பெத்சூரை நெருங்கி அதை வன்மையாகத் தாக்கினான்.
6கோட்டைகளை லீசியா முற்றுகையிட்டதுபற்றி மக்கபேயும் அவருடைய ஆள்களும் அறிய நேர்ந்தது. அப்பொழுது இஸ்ரயேலை மீட்க ஒரு நல்ல வானதூதரை அனுப்புமாறு அவர்களும் எல்லா மக்களும் அழுது புலம்பி மன்றாடினார்கள்.
7மக்கபே தாமே முதலில் படைக்கலம் எடுத்துக்கொண்டார்; தங்கள் உறவின் முறையினருக்கு உதவி புரியம்படி மற்றவர்களும் தம்மோடு சேர்ந்து தங்கள் உயிரைப் பணயம் வைக்குமாறு தூண்டினார். அவர்களும் விருப்புடன் ஒன்றாகச் சேர்ந்து முன்னேறிச் சென்றார்கள்.
8அவர்கள் எருசலேமுக்கு அருகில் இருந்தபோதே, வெண்ணாடை அணிந்து பொன் படைக்கலங்களைச் சுழற்றிக்கொண்டிருந்த குதிரைவீரர் ஒருவர் அவர்களது தலைக்குமேல் தோன்றினார்.
9அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து இரக்கமுள்ள கடவுளைப் போற்றினார்கள்; அவர்கள் எத்துணை ஊக்கம் அடைந்திருந்தார்கள் என்றால், மனிதரை மட்டுமல்ல, கொடிய காட்டு விலங்குகளையும் இரும்பு மதில்களையுமே தாக்கும் அளவுக்குத் துணிந்திருந்தார்கள்.
10விண்ணக இறைவனாகிய ஆண்டவர் அவர்கள்மீது இரக்கங்கொண்டு, அவர்களுக்குத் துணைசெய்யவே, அவர்கள் போரில் முன்னேறிச் சென்றார்கள்.
11அவர்கள் சிங்கங்களைப்போலத் தங்கள் எதிரிகள்மீது சீறிப் பாய்ந்து அவர்களுள் பதினோராயிரம் காலாட்படையினரையும் ஆயிரத்து அறுநூறு குதிரைப் படையினரையும் கொன்றார்கள்; எஞ்சியிருந்த அனைவரையும் புறமுதுகு காட்டி ஓடச் செய்தார்கள்.
12அவர்களுள் பலர் காயமடைந்து படைக்கலங்களை இழந்து தப்பிச் சென்றார்கள். லீசியாவும் இழிவுற்றுத் தப்பியோடினான்.

லீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ளல்

13அறிவாளியான லீசியா தனக்கு நேரிட்ட தோல்வியைப்பற்றிச் சிந்திக்கலானான்; ஆற்றல் படைத்த கடவுள் யூதர்கள் சார்பாகப் போரிட்டதால்தான் அவர்களை வெல்ல முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.
14ஆகவே அவர்களிடம் ஆள் அனுப்பி முறையாக உடன்பாட்டுக்கு இசையுமாறு அவர்களைத் தூண்டினான்; மன்னனை வற்புறுத்தி அவர்களின் நண்பனாக்க முயல்வதாக உறுதி மொழிந்தான்.
15பொது நன்மையைக் கருதி லீசியாவின் பரிந்துரைகள் அனைத்துக்கும் மக்கபே இசைந்தார்; அவர் யூதர்கள் சார்பாக அவனிடம் எழுத்துமூலம் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்தையும் மன்னன் ஏற்றுக்கொண்டான்.
16லீசியா யூதர்களுக்கு எழுதிய மடல் பின்வருமாறு:
“யூத மக்களுக்கு லீசியா வாழ்த்துக் கூறி எழுதுவது:
17நீங்கள் அனுப்பி வைத்த யோவானும் அப்சலோமும் உங்களது மனுவை என்னிடம் கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
18மன்னருக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்தையும் நான் ஏற்கெனவே அறிவித்து விட்டேன்; அவரும் தம்மால் கூடுமானவற்றைச் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
19அரசிடம் நீங்கள் நல்லெண்ணம் காட்டினால் எதிர்காலத்தில் உங்கள் நலனுக்காப் பாடுபட முயல்வேன்.
20இவற்றைப் பற்றி விளக்கமாக உங்களோடு கலந்து பேசுமாறு உங்களுடைய தூதர்களுக்கும் என்னுடைய பிரதிநிதிகளுக்கும் பணித்திருக்கிறேன்.
21வணக்கம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு* தியோகொரிந்து மாதம் இருபத்து நான்காம் நாள் இம்மடல் விடுக்கப்பட்டது.”
22லீசியாவுக்கு மன்னன் விடுத்த மடல் வருமாறு:
“தம் சகோதரர் லீசியாவுக்கு அந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:
23எம் தந்தை இறையடி சேர்ந்துவிட்டதால் நம் ஆட்சிக்கு உட்பட்ட குடிமக்கள் கலக்கமின்றித் தங்கள் அலுவல்களில் ஈடுபடவேண்டும் என விரும்புகிறோம்.
24கிரேக்கர்களுடைய பழக்கவழக்கங்களை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எம் தந்தை கொண்டுவந்திருந்த திட்டத்திற்கு அவர்கள் இணங்கவில்லை என்றும், தங்கள் வாழ்க்கை முறையையே அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்றும், தங்கள் பழக்கவழக்கங்களையே கடைப்பிடிக்க நம்மிடம் இசைவு கேட்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டோம்.
25இம்மக்களும் தொல்லையின்றி வாழவேண்டும் என நாம் விரும்புவதால், அவர்களுடைய கோவில் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தங்கள் மூதாதையருடைய பழக்க வழக்கப்படியே வாழலாம் என்றும் நாம் முடிவு செய்கிறோம்.
26ஆகையால் நீர் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பி, நமது நட்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அதனால் அவர்கள் நம் முடிவுகளை அறிந்து கவலையின்றித் தங்கள் அலுவல்களில் மகிழ்ச்சியோடு ஈடுபடுவார்கள்.”
27யூத மக்களுக்கு மன்னர் விடுத்த மடல் வருமாறு:
“யூதர்களின் ஆட்சிக்குழுவினருக்கும் மற்ற யூதர்களுக்கும் அந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:
28நலம். நலம் அறிய நாட்டம்.
29நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று, உங்கள் சொந்த அலுவல்களைக் கவனிக்க விரும்புவதாக மெனலா எம்மிடம் தெரிவித்துள்ளார்.
30ஆதலால், சாந்திக்கு மாதம் முப்பதாம் நாளுக்குள் வீடு திரும்பகிறவர்கள் எல்லாருக்கும் நமது ஆதரவு எப்போதும் உண்டு.
31முன்புபோல யூதர்கள் தங்கள் உணவுமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்க முழு இசைவு அளிக்கிறோம். அறியாமையால் செய்திருக்கக்கூடிய குற்றங்களில் யாதொன்றுக்காகவும் எவ்வகையிலும் அவர்களுள் எவனும் தொல்லைக்கு உள்ளாகமாட்டான்.
32உங்களுக்கு ஊக்கமூட்ட மெனலாவை அனுப்பியுள்ளோம்.
33வணக்கம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு* சாந்திக்கு மாதம் பதினைந்தாம் நாள் இம்மடல் விடுக்கப்பட்டது.”
34உரோமையர்களும் யூதர்களுக்கு ஒரு மடல் விடுத்தார்கள். அம்மடல் பின்வருமாறு:
“யூத மக்களுக்கு உரோமையர்களுடைய தூதர்களாகிய குயிந்துமெம்மியும் தீத்து மானியும் வாழ்த்துக்கூறி எழுதுவது:
35மன்னரின் உறவினரான லீசியா உங்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளுக்கு நாங்களும் இசைவு தெரிவிக்கிறோம்.
36ஆனால் மன்னரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தவற்றை நீங்கள் ஆராய்ந்தவுடன் உங்களுள் ஒருவரை எங்களிடம் அனுப்பிவையுங்கள். அப்போது உங்களுக்கு ஏற்ற கோரிக்கைகளை மன்னர்முன் வைக்க முடியும்; ஏனெனில் நாங்கள் அந்தியோக்கி நகருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
37எனவே உங்களது கருத்தை நாங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டுக் காலம் தாழ்த்தாது ஆளனுப்புங்கள்.
38வணக்கம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு* சாந்திக்கு மாதம் பதினைந்தாம் நாள் இம்மடல் விடுவிக்கப்பட்டது.”

11:1-12 1 மக் 4:26-35. 11:13-15 1 மக் 6:56-61.
11:21 கி.மு. 164. 11:33 கி.மு. 164. 11:38 கி.மு. 164.