1 மக்கபேயர் முன்னுரை


மத்தத்தியாவின் மூன்றாம் மகன் யூதா, கிரேக்கமயமாக்கல்மூலம் யூதர்களைப் பலவாறு துன்புறுத்திவந்த செலூக்கிய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு யூதர்களை வழிநடத்தியதால், ‘மக்கபே’ என்று அழைக்கப்பெற்றார் (‘மக்கபே’ என்னும் சொல்லுக்குச் ‘சம்மட்டி’ எனச் சிலர் பொருள் கொள்வர்). காலப்போக்கில் அவருடைய சகோதரர்கள், ஆதரவாளர்கள், பிற யூதத் தலைவர்கள் ஆகிய அனைவருமே ‘மக்கபேயர்’ என்று குறிப்பிடப்பெற்றனர்.

அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி யோவான் இர்க்கான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுவரை (கி.மு. 175-134) யூத வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஏறத்தாழ கி.மு. 100இல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த யூதர் ஒருவரால் இந்நூல் எபிரேயத்தில் எழுதப்பெற்றிருக்க வேண்டும். அது தொலைந்துவிட, அதன் கிரேக்க மொழிபெயர்ப்பு இன்று மூலபாடமாக விளங்குகிறது.

இஸ்ரயேலைக் காப்பதற்காகக் கடவுள் மக்கபேயரைத் தேர்ந்தெடுத்து, வரலாற்றில் அவர்களோடு இருந்து செயல்படுகிறார், அவர்மீது பற்றுறுதி கொள்வோருக்கு வெற்றி அருள்கிறார் என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.

நூலின் பிரிவுகள்

  1. முகவுரை 1:1 - 9
  2. யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும் 1:10 - 2:70
  3. யூதா மக்கபேயின் தலைமை 3:1 - 9:22
  4. யோனத்தானின் தலைமை 9:23 - 12:53
  5. சீமோனின் தலைமை 13:1 - 16:24