3. பேல் *-பேல் தெய்வமும் அரக்கப் பாம்பும்

தானியேலும் பேல் தெய்வமும்

1அஸ்தியாகு மன்னர் தம் மூதாதையரோடு துயில் கொண்டபொழுது, பாரசீகரான சைரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
2அம்மன்னருக்கு உற்ற தோழராய்த் தானியேல் விளங்கினார்; அவருடைய மற்றெல்லா நண்பர்களையும்விட மிகுந்த மதிப்புக்குரியவராய் இருந்தார்.
3அக்காலத்தில் பேல் என்று அழைக்கப்பட்ட தெய்வத்தின் சிலை ஒன்று பாபிலோனியரிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு கலம் மென் மாவும் நாற்பது ஆடுகளும் ஆறு குடம் மதுவும் அதற்காகச் செலவாயின.
4மன்னரும் அதை வழிபட்டு வந்தார்; நாள்தோறும் சென்று அதை வணங்கிவந்தார். தானியேலோ தம் கடவுளையே வழிபட்டுவந்தார்.
5“நீர் ஏன் பேல் தெய்வத்தை வணங்குவதில்லை?” என்று மன்னர் தானியேலை வினவினார். அதற்கு அவர், “கையால் செய்யப்பட்ட சிலைகளை நான் வழிபடுவதில்லை; மாறாக, விண்ணையும் மண்ணையும் படைத்து, மாந்தர் அனைவரையும் ஆண்டுவருகிற, வாழும் கடவுளையே நான் வழிபட்டுவருகிறேன்” என்று விடை கூறினார்.
6மன்னர் அவரை நோக்கி, “பேல் வாழும் தெய்வம் என்பதை நீர் அறியீரோ? அது ஒவ்வொரு நாளும் எவ்வளவு உண்டு குடிக்கிறது என்பது உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
7அப்பொழுது தானியேல் சிரித்துக்கொண்டே, “மன்னரே, நீர் ஏமாறாதீர். எனெனில் இது உள்ளே வெறும் களிமண்; வெளியே வெண்கலம். இது ஒருபொழுதும் உண்டதுமில்லை; குடித்ததுமில்லை” என்றார்.
8இதனால் சீற்றங்கொண்ட மன்னர் தம் அர்ச்சகர்களை அழைத்து, “படையல்களை உண்டு வருவது யாரென நீங்கள் எனக்குச் சொல்லாவிட்டால், நீங்கள் திண்ணமாய்ச் சாவீர்கள்.
9மாறாக, பேல்தான் அவற்றை உண்டுவருகிறது என்பதை நீங்கள் மெய்ப்பிக்க முடிந்தால், தானியேல் திண்ணமாய்ச் சாவார்; ஏனெனில் அவர் பேலுக்கு எதிராகப் பழிச்சொல் கூறியுள்ளார்” என்றார். தானியேலோ மன்னரிடம், “உம் சொற்படியே நடக்கட்டும்” என்று சொன்னார்.
10தங்களுடைய மனைவி, மக்கள் நீங்கலாக, பேலின் அர்ச்சகர்கள் மட்டுமே எழுபது பேர் இருந்தனர். தானியேலுடன் பேலின் கோவிலுக்குள் மன்னர் சென்றார்.
11பேலின் அர்ச்சகர்கள், “மன்னரே, இதோ நாங்கள் வெளியே போய்விடுகிறோம். நீரே உணவுப்பொருள்களைப் படைத்து, திராட்சை மதுவைக் கலந்து வையும். பின்பு கதவை மூடி, உம் கணையாழியால் முத்திலையிடும்.
12நாளை காலையில் நீர் மீண்டும் வரும்பொழுது, பேல் எதையும் உண்ணவில்லை என நீர் கண்டால், நாங்கள் சாவுக்கு உள்ளாவோம். இல்லையேல், எங்களுக்கு எதிராகப் பொய் சொல்லும் தானியேல் சாகவேண்டும்” என்றார்கள்.
13அவர்களோ எதையும் பொருட்படுத்தவில்லை; ஏனெனில், அவர்கள் மேசைக்கு அடியில் மறைவான வழி ஒன்று அமைத்திருந்தார்கள். அந்த வழியாக அவர்கள் உள்ளே நுழைந்து படையல்களை உண்பது வழக்கம்.
14அர்ச்சகர்கள் வெளியே சென்ற பின், மன்னர் பேல் தெய்வத்துக்கு முன் உணவுப் பொருள்களை வைத்தார். சாம்பல் கொண்டுவருமாறு தானியேல் தம் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார். மன்னர் மட்டுமே அங்கு இருக்க, அவர் முன்னிலையில் அவர்கள் கோவில் முழுவதும் சாம்பலைத் தூவினார்கள். பின் வெளியே வந்து கதவை மூடி, மன்னரின் கணையாழியால் முத்திரையிட்டுச் சென்றார்கள்.
15அர்ச்சகர்களோ வழக்கம் போல் இரவில் தங்கள் மனைவி மக்களுடன் கோவிலுக்குள் சென்று, எல்லாவற்றையும் உண்டு குடித்தார்கள்.
16மறுநாள் விடியற்காலையில் மன்னர் எழுந்தார். தானியேலும் எழுந்து அவரோடு கோவிலுக்குச் சென்றார்.
17“தானியேல், முத்திரைகள் உடைபடாமல் இருக்கின்றனவா?” என்று மன்னர் வினவினார். அதற்குத் தானியேல், “ஆம் மன்னரே, அவை உடைபடாமல் இருக்கின்றன” என்று மறுமொழி கூறினார்.
18கதவைத் திறந்ததும் மன்னர் மேசையைப் பார்த்தார். உடனே உரத்த குரலில், “பேல் தெய்வமே, நீர் பெரியவர்; உம்மிடம் கள்ளம் கபடு ஒன்றுமே இல்லை” என்று கத்தினார்.
19தானியேலோ சிரித்துக்கொண்டே மன்னரை உள்ளே போகவிடாமல் தடுத்தார். பின்னர் அவரிடம், “இதோ! தரையை உற்றுநோக்கும். இது யாருடைய கால்தடம் எனக் கவனித்துப் பாரும்” என்றார்.
20அதற்கு மன்னர், “ஆண், பெண், சிறுவர்களின் கால் தடங்களைக் காண்கிறேன்” என்றார்.
21கடுஞ்சினமுற்ற மன்னர் அர்ச்சகர், அவர்களின் மனைவி, மக்கள் ஆகியோரைச் சிறைப்பிடித்தார். அவர்களோ உள்ளே நுழைந்து, மேசைமீது இருந்தவற்றை உண்ணத் தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்திவந்த மறைவான வழியை அவருக்குக் காட்டினார்கள்.
22ஆகவே மன்னர் அவர்களைக் கொன்றொழித்தார்; பேலின் சிலையையோ தானியேலிடம் ஒப்படைத்தார். அவர் அந்தச் சிலையையும் அதன் கோவிலையும் இடித்துத் தகர்த்தார்.

தானியேலும் அரக்கப்பாம்பும்

23பாபிலோனியாவில் பெரியதொரு அரக்கப்பாம்பு இருந்தது. பாபிலோனியர் அதையும் வழிபட்டு வந்தனர்.
24மன்னர் தானியேலிடம், “இது உயிருள்ள தெய்வம் என்பதை உம்மால் மறுக்கமுடியாது. ஆகவே இதை வணங்கும்” என்று சொன்னார்.
25தானியேல் மறுமொழியாக, “என் கடவுளாகிய ஆண்டவரையே நான் வழிபடுவேன்; ஏனெனில் அவரே வாழும் கடவுள்.
26மன்னரே, நீர் எனக்கு அனுமதி கொடுத்தால், வாளோ தடியோ இன்றி நான் இந்த அரக்கப்பாம்பைக் கொன்றிடுவேன்” என்றார். அதற்கு மன்னர், “சரி, உமக்கு அனுமதி தருகிறேன்” என்றார்.
27பின்னர் தானியேல் சிறிது கீல், கொழுப்பு, முடி ஆகியவற்றை எடுத்து, அவற்றை ஒன்றுசேர்த்து உருக்கி, உருண்டைகளாகத் திரட்டி, அவற்றை அரக்கப் பாம்பின் வாயில் வைத்தார். அவற்றைத் தின்றதும் அதன் வயிறு வெடித்தது. உடனே தானியேல், “நீங்கள் வழிபட்டுவந்ததைப் பாருங்கள்” என்றார்.
28பாபிலோனியர் இதனைக் கேள்வியுற்றபொழுது சீற்றங்கொண்டனர். மன்னருக்கு எதிராகத் திரண்டனர். “மன்னர் யூதராக மாறிவிட்டார்; பேல் தெய்வத்தை அழித்துவிட்டார்; அரக்கப் பாம்பைக் கொன்று விட்டார்; அர்ச்சகர்களைப் படுகொலை செய்துவிட்டார்” என்று கூச்சலிட்டனர்.
29பின்பு மன்னரிடம் சென்று, “தானியேலை எங்களிடம் ஒப்படையும்; இல்லையேல் நாங்கள் உம்மையும் உம் குடும்பத்தையும் கொன்றொழிப்போம்” என்று மிரட்டினர்.
30அவர்கள் மன்னரை மிகவும் வற்புறுத்தியதால், அவர் தானியேலை வேண்டா வெறுப்புடன் அவர்களிடம் ஒப்படைத்தார்.

சிங்கக்குகையில் தானியேல்

31பாபிலோனியர் தானியேலைச் சிங்கக்குகையில் தூக்கி எறிந்தனர். அங்கே அவர் ஆறு நாள் இருந்தார்.
32அக்குகையில் ஏழு சிங்கங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் அவற்றுக்கு இரண்டு மனித உடல்களும் இரண்டு ஆடுகளும் கொடுப்பது வழக்கம். ஆனால் அவை தானியேலை விழுங்கவேண்டும் என்பதற்காக அந்த ஆறு நாளும் அவற்றுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
33அக்காலத்தில் யூதேயாவில் அபகூக்கு என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் கூழ் காய்ச்சி, ஒரு கலயத்தில் அப்பங்களைப் பிட்டு வைத்து, அவற்றை அறுவடையாளர்களுக்குக் கொடுக்க வயலுக்குக் கொண்டுபோனார்.
34ஆண்டவரின் தூதர் அவரிடம், “நீர் வைத்திருக்கும் உணவைப் பாபிலோனில் சிங்கக் குகையில் இருக்கும் தானியேலிடம் எடுத்துச் செல்லும்” என்றார்.
35அதற்கு அபகூக்கு, “ஐயா, நான் பாபிலோனை இதுவரை பார்த்ததேயில்லை; சிங்கக்குகையைப்பற்றியும் எனக்குத் தெரியாது” என்றார்.
36எனவே ஆண்டவரின் தூதர் அவருடைய உச்சந்தலையைப் பிடித்துத் தூக்கி, காற்றினும் விரைந்து சென்று பாபிலோனில் சிங்கக்குகைக்கு மேலேயே இறக்கிவிட்டார்.
37அப்பொழுது அபகூக்கு, “தானியேல், கடவுள் உமக்கு அனுப்பியுள்ள உணவை உண்ணும்” என்று உரக்கக் கூறினார்.
38அப்பொழுது தானியேல், “கடவுளே, நீர் என்னை நினைவுகூர்ந்தீர். உம்மேல் அன்புகூர்பவர்களை நீர் கைவிடுவதில்லை” என்று உரைத்தார்.
39பின்னர் எழுந்து உண்டார். உடனே ஆண்டவரின் தூதர் அபகூக்கை மீண்டும் அவருடைய இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
40மன்னர் ஏழாம் நாளன்று தானியேலைக் குறித்துத் துயரம் கொண்டாடச் சென்றார். அவர் குகையை அடைந்து உள்ளே பார்த்தார். இதோ! தானியேல் உட்கார்ந்த வண்ணம் இருந்தார்!
41உடனே மன்னர், “தானியேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் பெரியவர்! உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று உரத்த குரலில் கத்தினார்.
42பின் தானியேலை வெளியே தூக்கிவிட்டார். அவரை அழிக்கத் தேடியவர்களையோ குகைக்குள் எறிந்தார். நொடிப்பொழுதில் மன்னர் கண்முன்னரே அவர்களைச் சிங்கங்கள் விழுங்கின.

3:5 திபா 115:4. 3:31 தானி 6:16. 3:42 தானி 6:23-24.
3 இலத்தீன் பாடத்தில் இப்பகுதி, தானியேல் நூலின் 14ஆம் அதிகாரமாக இடம் பெறுகிறது.