பல்வேறு பாவங்கள்

1குழந்தாய், பாவம் செய்துவிட்டாயா?

இனிமேல் செய்யாதே;

உன் பழைய பாவங்களுக்காக

மன்னிப்புக் கேள்.

2பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப்

பாவத்தைவிட்டு ஓடிவிடு;

நீ பாவத்தின் அருகில் சென்றால்

அது உன்னைக் கடிக்கும்;

அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்

போன்றவை; அவை மனிதரின்

உயிரைப் போக்கி விடும்.

3நெறிகேடுகள் எல்லாமே

இருமுனைக் கூர்வாள்

போன்றவை;

அதன் காயங்கள் ஆறமாட்டா.

4திகிலும் இறுமாப்பும்

செல்வங்களைப் பாழாக்கும்;

செருக்குற்றோரின் வீடு பாழாகும்.

5ஏழைகளின் வாயினின்று

எழும் விண்ணப்பம் கடவுளின்

செவிகளை எட்டும்;

அவரது நீதித் தீர்ப்பு

விரைவில் வரும்.

6கடிந்துரையை வெறுப்போர்

பாவிகளின் வழியில் நடக்கின்றனர்;

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்

மனம் வருந்துவர்.

7நாவன்மை படைத்தோர்பற்றிய

பேச்சு தொலைவிலும் பரவும்;

ஆனால் அவர்கள் நாத்தவறும்போது

அறிவுள்ளோர்

அதைக் கண்டுகொள்வர்.

8மற்றவர்களின் பணத்தைக் கொண்டு

தங்கள் வீட்டைக் கட்டுவோர்

தங்கள் கல்லறைக்கு வேண்டிய*

கற்களைத் தாங்களே சேர்த்து

வைப்போர் போன்றவர்கள்.

9நெறிகெட்டோரின் கூட்டம்

சணல் குப்பை போன்றது;

கொழுந்துவிட்டு எரியும்

நெருப்பே அவர்களின் முடிவு.

10பாவிகளின் பாதை வழுவழுப்பான

கற்களால் பாவப்பட்டுள்ளது;

அதன் முடிவில் கீழுலகின்

வாயில் உள்ளது.

அறிவாளியும் அறிவிலியும்

11திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர்

தங்கள் எண்ணங்களைக்

கட்டுப்படுத்துகின்றனர்;

ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சத்தின் நிறைவே ஞானம்.

12திறமை இல்லாதோருக்குக்

கல்வியறிவு புகட்ட முடியாது;

கசப்பை விளைவிக்கும் ஒருவகைத்

திறமையும் உண்டு.

13ஞானிகளின் அறிவு வெள்ளம்

போலப் பெருக்கெடுத்து ஓடும்;

அவர்களின் அறிவுரை

வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு

நிகராகும்.

14மூடரின் உள்ளம் ஓட்டைக்

கலன் போன்றது;

அதில் எவ்வகை அறிவும்

தங்கி நிற்காது.

15அறிவாற்றல் பெற்றோர்

ஞானம் நிறைந்த பேச்சைக்

கேட்டுப் புகழ்வர்;

அது வளம் பெறச் செய்வர்.

அப்பேச்சை ஒழுக்கம் கெட்டோர்

கேட்க நேரிட்டால் அதை

விரும்புவதில்லை;

அதை உள்ளத்திலிருந்தும்

விரட்டிவிடுவர்.

16மூடரின் உரை பயணத்தின் போது

எடுத்துச் செல்லும் பெருஞ்சுமை

போன்றது; அறிவுக்கூர்மை

கொண்டோரின் பேச்சு

இன்பம் தருகின்றது.

17அறிவுத்திறன் வாய்ந்தோரின்

வாய் மொழிகளைச்

சபை விரும்பித் தேடும்;

அவர்களின் கருத்துகளை

உள்ளத்தில் இருத்திச்

சிந்தித்துப் பார்க்கும்.

18மூடர்களுக்கு ஞானம்

பாழடைந்த வீடு போன்றது;

மதியீனர்களுக்கு அறிவு

பொருளற்ற உரை போன்றது.

19அறிவிலிகளுக்கு அளிக்கும்

நற்பயிற்சி கால்விலங்கு

போன்றது;

வலக்கையில் மாட்டப்பட்ட

தளை போன்றது.

20மூடர்கள் சிரிக்கும்போது

உரத்த குரல் எழுப்புவர்;

அறிவில் சிறந்தோர்

அமைதியாகப் புன்னகைப்பர்.

21அறிவுத்திறன் கொண்டோருக்கு

நற்பயிற்சி பொன் நகையாகும்;

வலக்கையில் அணிந்த

கைவளையாகும்.

22மூடர்களின் கால்கள்

மற்றவர்களின் வீட்டுக்குள்

விரைகின்றன;

பட்டறிவு பெற்றவர்களின்

கால்களோ நுழையத் தயங்குகின்றன.

23அறிவிலிகள் கதவு வழியாக

வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்;

நற்பயிற்சி பெற்றோர்

வெளியே காத்திருப்பர்.

24நற்பயிற்சி பெறாதோர்

கதவு அருகே நின்று

ஒற்றுக் கேட்பர்;

அறிவுத்திறன் வாய்ந்தோர்

அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.

25அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்;*

நுண்ணறிவு கொண்டோர்

சொற்களை அளந்து பேசுவர்.

26அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்;

அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.

27இறைப்பற்றில்லாதோர்

தங்கள் எதிரியைச்

சபிக்கும்போது தங்களையே

சபித்துக்கொள்வர்.

28புறங்கூறுவோர் தங்களையே

மாசுபடுத்திக்கொள்வர்;

சுற்றுப்புறத்தார் அவர்களை

வெறுப்பர்.


21:5 சீஞா 35:17-18; விப 3:9. 21:6 நீமொ 12:1. 21:8 அப 2:6. 21:13 நீமொ 10:11. 21:20 சஉ 7:6.
21:8 ‘மாரிக் காலத்திற்கு வேண்டிய’ என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது. 21:25 ‘அன்னியர் இவைபற்றியே பேசுவர்’ என்றும் சில சுவடிகளில் காணப்படுகிறது. மிகவும் சிதைவுற்ற இப்பாடம் சுவடிக்குச் சுவடி மாறுபடுகிறது.