1ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள்

இவற்றையெல்லாம் செய்வார்கள்;

திருச்சட்டத்தைக் கற்றுத்

தேர்ந்தவர்கள் ஞானத்தை

அடைவார்கள்.

2தாய் போன்று ஞானம்

அவர்களை எதிர்கொள்ளும்;

இளம் மணமகள் போல்

அவர்களை வரவேற்கும்.

3அறிவுக் கூர்மை எனும்

உணவை அவர்கள் அருந்தக்

கொடுக்கும்; ஞானமாகிய

நீரைப் பருக அளிக்கும்.

4அவர்கள் அதன்மீது

சாய்ந்து கொள்வார்கள்;

விழமாட்டார்கள்;

அதைச் சார்ந்து வாழ்பவர்கள்

இகழ்ச்சி அடையமாட்டார்கள்.

5அடுத்திருப்பவருக்கு மேலாக

அது அவர்களை உயர்த்தும்;

சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.

6அவர்கள் அக்களிப்பையும்

மகிழ்ச்சியின் முடியையும்

கண்டடைவார்கள்;

நிலையான பெயரை

உரிமையாக்கிக் கொள்வார்கள்.

7அறிவிலிகள் ஞானத்தை

அடையமாட்டார்கள்;

பாவிகள் அதைக் காணமாட்டார்கள்;

8இறுமாப்பினின்று அது

விலகி நிற்கும்;

பொய்யர் ஒரு போதும்

அதை நினைத்துப்பாரார்.

9பாவிகளின் வாயிலிருந்து

வரும் இறைப்புகழ்ச்சி தகாதது;

அது ஆண்டவரிடமிருந்து

அவர்களுக்கு அருளப்படவில்லை.

10ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி

வெளிப்படவேண்டும்;

ஆண்டவரே அதை

வளமுறச் செய்வார்.

விருப்புரிமை

11‘ஆண்டவரே

என் வீழ்ச்சிக்குக் காரணம்’

எனச் சொல்லாதே;

தாம் வெறுப்பதை

அவர் செய்வதில்லை.

12‘அவரே என்னை நெறிபிறழச்

செய்தார்’ எனக் கூறாதே;

பாவிகள் அவருக்குத்

தேவையில்லை.

13ஆண்டவர் அருவருப்புக்குரிய

அனைத்தையும் வெறுக்கிறார்;

அவருக்கு அஞ்சிநடப்போர்

அவற்றை விரும்புவதில்லை.

14அவரே தொடக்கத்தில்

மனிதரை உண்டாக்கினர்;

தங்கள் விருப்புரிமையின்படி

செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.

15நீ விரும்பினால் கட்டளைகளைக்

கடைப்பிடி; பற்றுறுதியுடன்

நடப்பது உனது விருப்பத்தைப்

பொறுத்தது.

16உனக்குமுன் நீரையும்

நெருப்பையும் அவர் வைத்துள்ளார்;

உன் கையை நீட்டி உனக்கு

விருப்பமானதை எடுத்துக்கொள்.

17மனிதர்முன் வாழ்வும்

சாவும் வைக்கப்பட்டுள்ளன.

எதை அவர்கள் விரும்புகிறார்களோ

அதுவே அவர்களுக்குக்

கொடுக்கப்படும்.

18ஆண்டவரின் ஞானம் பெரிது.

அவர் ஆற்றல் மிக்கவர்;

அனைத்தையும் அவர் காண்கிறார்.

19ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது

அவரது பார்வை இருக்கும்;

மனிதரின் செயல்கள் அனைத்தையும்

அவர் அறிவார்.

20இறைப்பற்றின்றி இருக்க

யாருக்கும் ஆண்டவர்

கட்டளையிட்டதில்லை;

பாவம் செய்ய எவருக்கும்

அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.


15:2 சாஞா 8:2,9. 15:7 சாஞா 1:4. 15:14 தொநூ 1:26-30. 15:17 இச 30:15,19.