1நாவினால் தவறு செய்யாதோர்
பேறுபெற்றோர்;
அவர்கள் பாவங்களுக்கான
மன உறுத்தல் இல்லாதவர்கள்.
2தம் மனச்சான்றால்
கண்டிக்கப்படாதோர்
பேறுபெற்றோர்;
நம்பிக்கை தளராதோரும்
பேறுபெற்றோர்.
3கஞ்சனுக்குச் செல்வம் ஏற்றதல்ல;
கருமிக்கு அதனால் என்ன பயன்?
4தமக்கெனச் செலவிடாமல்
சேர்த்து வைக்கும் செல்வம்
பிறரையே சென்று அடையும்?
அச்செல்வத்தால் பிறரே
வளமுடன் வாழ்வர்.
5தங்களையே கடுமையாக
நடத்துவோர் அடுத்தவருக்கு
எங்ஙனம் நன்மை செய்வர்?
அவர்கள் தங்களிடம்
உள்ள செல்வங்களையே
துய்த்து மகிழத் தெரியாதவர்கள்.
6தமக்குத்தாமே கருமியாய்
இருப்போரைவிடக் கொடியவர் இலர்;
அவர்களது கஞ்சத்தனத்துக்கு
இதுவே தண்டனை.
7அவர்கள் நன்மை செய்தாலும்
அது அவர்களை அறியாமல்
நிகழ்கின்றது; இறுதியில்
தங்கள் கஞ்சத்தனத்தையே
காட்டி விடுவர்.
8பொறாமை கொண்டோர் தீயோர்;
பிறரைப் புறக்கணித்து
முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்வர்.
9பேராசை கொண்டோர்
உள்ளது கொண்டு நிறைவு
அடைவதில்லை; பேராசையுடன் கூடிய
அநீதி, உள்ளம் தளர்வு
அடையச் செய்கிறது.
10கருமிகள் மற்றவர்களுக்கு உணவை
அளந்தே கொடுப்பார்கள்.
அவர்களின் உணவறையில்
எதுவும் இராது.
11குழந்தாய், உள்ளத்தைக்
கொண்டு உன்னையே
பேணிக்கொள்;
ஆண்டவருக்கு ஏற்ற
காணிக்கை செலுத்து.
12இறப்பு யாருக்கும் காலம்
தாழ்த்தாது என்பதையும்
நீ சாகவேண்டிய நேரம்
உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை
என்பதையும் நினைவில் கொள்.
13நீ இறக்குமுன் உன் நண்பர்களுக்கு
உதவி செய்; உன்னால்
முடிந்தவரை தாராளமாகக் கொடு.
14ஒவ்வொரு நாளும் உனக்குக்
கிடைக்கும் நன்மைகளை
நன்கு பயன்படுத்து;
உன் வாழ்வின் இன்பங்களைத்
துய்க்காமல் விட்டுவிடாதே.
15உன் உழைப்பின் பயனைப்
பிறருக்கு விட்டுவிடுவதில்லையா?
நீ உழைத்துச் சேர்த்ததைப்
பங்கிட்டுக்கொள்ள விடுவதில்லையா?
16கொடுத்து வாங்கு;
மகிழ்ந்திரு. பாதாளத்தில்
இன்பத்தைத் தேட முடியாது.
17ஆடைபோன்று மனிதர்
அனைவரும் முதுமை
அடைகின்றனர்;
‘நீ திண்ணமாய்ச் சாவாய்’
என்பதே தொன்மை நெறிமுறை.
18இலை அடர்ந்த மரத்தின்
சில இலைகள் உதிர்கின்றன;
சில இலைகள் தளிர்க்கின்றன.
ஊனும் உதிரமும் கொண்ட
மனித இனத்திலும் சிலர் இறப்பர்;
சிலர் பிறப்பர்.
19கைவேலைப்பாடுகளெல்லாம்
மட்கி மறையும்;
அவற்றைச் செய்தோரும்
அவற்றோடு மறைந்தொழிவர்.
20ஞானத்தில் நாட்டம் செலுத்துவோர்
பேறுபெற்றோர்;
அறிவுக்கூர்மை கொண்டு
வாதிடுவோரும் பேறுபெற்றோர்.
21ஞானத்தின் வழிகள் பற்றித்
தம் உள்ளத்தில் எண்ணிப்
பார்ப்போரும் அதன் இரகசியங்களைச்
சீர்தூக்கிப் பார்ப்போரும் பேறுபெற்றோர்.
22வேடர்போன்று அதைத் தேடிச்
சென்று அதன் வழிகளில்
பதுங்கியிருப்போரும் பேறுபெற்றோர்.
23அதன் பலகணி வழியே
உற்றுநோக்குவோரும்
அதன் கதவு அருகே நின்று
கேட்போரும் பேறுபெற்றோர்.
24அதன் வீட்டின் அருகே
தங்குவோரும் அதன் சுவரில்
தம் கூடாரத்தின்
முளையை இறுக்குவோறும்
பேறுபெற்றோர்.
25அதன் அருகிலேயே தம்
கூடாரத்தை அமைப்போரும்
அதன் இனிமை நிறைந்த
இடத்தில் தம் இல்லத்தைக்
கட்டுவோரும் பேறுபெற்றோர்.
26அதன் நிழலில் தம் பிள்ளைகளைக்
கிடத்துவோரும் அதன்
கிளைகளுக்கு அடியில்
தங்குவோரும் பேறுபெற்றோர்.
27வெப்பத்தினின்று ஞானத்திடம்
தஞ்சம் புகுவோரும் அதன்
மாட்சியின் நடுவே
குடியிருப்போரும் பேறுபெற்றோர்.