ஞானம் வழங்கும் நன்னெறி

ஞானத்தின் ஊற்று

1ஞானமெல்லாம்

ஆண்டவரிடமிருந்து வருகின்றது;

அது என்றும் அவரோடு

இருக்கின்றது.

2கடல் மணலையோ

மழைத் துளியையோ

முடிவில்லாக் காலத்தையோ

யாரே கணக்கிடுவர்?

3வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?
4எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது.
5*[உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.]
6ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்?
7[ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?]
8ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.
9அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனால் நிரப்பியவர்.
10தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.

இறையச்சம்

11ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்; அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின் மணிமுடியுமாகும்.
12ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது; மகிழ்வையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது.
13ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்; அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள்.
14ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்; அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.
15ஞானம் மனிதர் நடுவில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது; அவர்களுடைய வழிமரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும்.
16ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு; அது தன் கனிகளால் மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.
17அது அவர்களின் இல்லம் முழுவதையும் விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும்; தன் விளைச்சலால் அவர்களின் களஞ்சியங்களை நிறைத்திடும்.
18ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி; அது அமைதியைப் பொழிந்து, உடல்நலனைக் கொழிக்கச் செய்கிறது.
19ஆண்டவரே அதனைக் கண்டு கணக்கிட்டார்; அறிவாற்றலையும் நுண்ணறிவையும் மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்; அதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டோரை மாட்சியால் உயர்த்திட்டார்.
20ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்; அதன் கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.
21*[ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டிவிடுகிறது. அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றிவிடுகிறது.]

பொறுமையும் தன்னடக்கமும்

22நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது; சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சி அடைவர்.
23பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்; பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்.
24அவர்கள் தக்க நேரம்வரை நா காப்பார்கள். பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.

ஞானமும் ஒழுக்கமும்

25ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு; பாவிகளுக்கு இறைப்பற்று அருவருப்பைத் தரும்.
26ஞானத்தை நீ அடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரி வழங்குவார்.
27ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும். பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும்.
28ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே; பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே.
29மனிதர்முன்* வெளிவேடம் போட வேண்டாம். நாவடக்கம் கொள்.
30நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்குக் கொள்ளாதே. உன்மீதே மானக்கேட்டை வருவித்துக்கொள்ளாதே. ஆண்டவருக்கு நீ ஆஞ்சி நடவாததாலும் உன் உள்ளத்தில் கள்ளம் நிறைந்திருந்ததாலும் ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்; சபையார் எல்லார் முன்னிலையில் உன்னைத் தாழ்த்துவார்.

1:1 நீமொ 2:4; சாஞா 8:21. 1:3 நீமொ 30:4; பாரூ 3:29. 1:4 நீமொ 3:19. 1:6 சாஞா 9:13. 1:10 சஉ 2:26. 1:14 திபா 111:10. 1:17 சாஞா 7:11. 1:30 மத் 23:12.
1:5 [] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:7 [] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:21 [] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 1:29 இது சிரியாக்குப் பாடம்; ‘மனிதரின் வாயில்’ என்பது கிரேக்க பாடம்.