1இறைப்பற்றில்லாதவர்கள்
தவறாகக் கணித்து
உள்ளத்தில் பின்வருமாறு
சொல்லிக் கொண்டார்கள்;
“நம் வாழ்வு குறுகியது;
துன்பம் நிறைந்தது.
மனிதரின் முடிவுக்கு
மாற்று மருந்து எதுவுமில்லை.
கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக்
கேள்விப்பட்டதில்லை.
2தற்செயலாய் நாம் பிறந்தோம்;
இருந்திராதவர்போல்
இனி ஆகிவிடுவோம்.
நமது உயிர்மூச்சு வெறும் புகையே;
அறிவு நம் இதயத் துடிப்பின்
தீப்பொறியே.
3அது அணையும்பொழுது,
உடல் சாம்பலாகிவிடும்.
ஆவியோ காற்றோடு காற்றாய்க்
கலந்துவிடும்.
4காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும்.
நம் செயல்களை
நினைவுகூரமாட்டார்கள்.
நம் வாழ்வு முகில் போலக்
கலைந்து போகும்;
கதிரவனின் ஒளிக்கதிர்களால்
துரத்தப்பட்டு,
அதன் வெப்பத்தால் தாக்குண்ட
மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.
5நம் வாழ்நாள் நிழல்போலக்
கடந்து செல்கின்றது.
நமது முடிவுக்குப்பின்
நாம் மீண்டு வருவதில்லை;
ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின்
எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.”
6“எனவே, வாருங்கள்;
இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்;
இளமை உணர்வோடு
படைப்புப்பொருள்களை
முழுவதும் பயன்படுத்துவோம்.
7விலையுயர்ந்த திராட்சை மதுவிலும்
நறுமண வகைகளிலும்
திளைத்திருப்போம்;
இளவேனிற்கால மலர்களில்
எதையும் விட்டுவைக்கமாட்டோம்.
8ரோசா மலர்களை
அவை வாடுமுன்
நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.
9நம் களியாட்டங்களில்
ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்;
இன்பத்தின் சுவடுகளை
எங்கும் விட்டுச்செல்வோம்.
இதுவே நம் பங்கு;
இதுவே நம் உடைமை.”
10“நீதிமான்களாகிய ஏழைகளை
ஒடுக்குவோம்;
கைம்பெண்களையும்
ஒடுக்காமல் விடமாட்டோம்;
நரைதிரை விழுந்த முதியோரையும்
மதிக்கமாட்டோம்;
11நமது வலிமையே நமக்கு நீதி —
நமக்குச் சட்டம்.
வலிமையற்றது எதுவும் பயனற்றதே.”
12‘நீதி மான்களைத் தாக்கப்
பதுங்கியிருப்போம்;
ஏனெனில், அவர்கள் நமக்குத்
தொல்லையாய் இருக்கிறார்கள்;
நம் செயல்களை எதிர்க்கிறார்கள்;
திருச்சட்டத்திற்கு எதிரான
பாவங்களுக்காக
நம்மைக் கண்டிக்கிறார்கள்.
நற்பயிற்சியை மீறிய குற்றங்களை
நம்மீது சுமத்துகிறார்கள்.
13கடவுளைப்பற்றிய அறிவு
தங்களுக்கு உண்டு என
அவர்கள் பறைசாற்றுகிறார்கள்;
ஆண்டவரின் பிள்ளைகள்* எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.
14அவர்களது நடத்தையே
நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது.
அவர்களைப் பார்ப்பதே
நமக்குத் துயரமாய் உள்ளது.
15அவர்களது வாழ்க்கை
மற்றவர் வாழ்க்கையினின்று
வேறுபட்டது;
அவர்களுடைய வழிமுறைகள்
மாறுபட்டவை.
16இழிந்தோர் என நம்மை
அவர்கள் எண்ணுகிறார்கள்;
தூய்மையற்ற பொருளினின்று
ஒதுங்கிச் செல்வதுபோல
நம்முடைய வழிகளினின்று
விலகிச் செல்கிறார்கள்;
நீதிமான்களின் முடிவு
மகிழ்ச்சிக்குரியது எனக்
கருதுகிறார்கள்;
கடவுள் தம் தந்தை எனப்
பெருமை பாராட்டுகிறார்கள்.
17அவர்களுடைய சொற்கள்
உண்மையா எனக் கண்டறிவோம்;
முடிவில் அவர்களுக்கு
என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.
18நீதிமான்கள்
கடவுளின் மக்கள் என்றால்,
அவர் அவர்களுக்கு உதவி செய்வார்;
பகைவரிடமிருந்து
அவர்களை விடுவிப்பார்.
19அவர்களது கனிவினைக்
கண்டுகொள்ளவும்,
பொறுமையை ஆய்ந்தறியவும்,
வசைமொழி கூறியும் துன்புறுத்தியும்
அவர்களைச் சோதித்தறிவோம்.
20இழிவான சாவுக்கு
அவர்களைத் தீர்ப்பிடுவோம்;
ஏனெனில், தங்கள் வாய்மொழிப் படி
அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’
21இறைப்பற்றில்லாதவர்கள்
இவ்வாறு எண்ணி
நெறி தவறிச்சென்றார்கள்.
அவர்களின் தீயொழுக்கமே
அவர்களைப்
பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.
22அவர்கள் கடவுளின் மறைவான
திட்டங்களை அறியவில்லை;
தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு
என்று நம்பவில்லை;
மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும்
என்று உய்த்துணரவில்லை.
23கடவுள் மனிதர்களை
அழியாமைக்கென்று படைத்தார்;
தம் சொந்த இயல்பின் சாயலில்*
அவர்களை உருவாக்கினார்.
24ஆனால் அலகையின் பொறாமையால்
சாவு உலகில் நுழைந்தது.
அதைச் சார்ந்து நிற்போர்
இறப்புக்கு உள்ளாவர்.