1இதன்பின் அர்த்தக்சஸ்தா மன்னர் பூகையனும் அம்மதாத்தாவின் மகனுமான ஆமானைப் பெருமைப்படுத்தி, தம் நண்பர்களிடையே மிகச்சிறந்த இடத்தை அவனுக்கு வழங்கினார்.
2மன்னரின் கட்டளைப்படி அரண்மனையில் பணிபுரிந்த அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர்; ஆனால், மொர்தெக்காய் அவனுக்கு வணக்கம் செலுத்தவில்லை.
3“நீர் ஏன் மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை?” என்று அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் மொர்தெக்காயை வினவினார்கள்.
4இவ்வாறு அவர்கள் அவரை ஒவ்வொரு நாளும் கேட்டு வந்தார்கள். ஆனால் அவர் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே, மன்னரின் கட்டளைக்கு அவர் பணிய மறுப்பதாக ஆமானிடம் அவர்கள் அறிவித்தார்கள். தாம் ஒரு யூதர் என்று அவர் அவர்களுக்குக் தெரிவித்திருந்தார்.
5தனக்கு மொர்தெக்காய் வணக்கம் செலுத்தாததை அறிந்த ஆமான் கடுஞ்சீற்றங் கொண்டான்;
6அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்கு உட்பட்ட யூதர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிடச் சூழ்ச்சி செய்தான்.

யூதர்களைக் கொன்றொழிப்பதற்கான அரசாணை

7அர்த்தக்சஸ்தாவினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், மொர்தெக்காயின் இனம் முழுவதையும் ஒரே நாளில் அழிப்பதற்கு ஏற்ற நாளையும் மாதத்தையும் அறிந்து கொள்ளச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, ஆமான் ஒரு முடிவுக்கு வந்தான்; இவ்வாறு, சீட்டுக்குலுக்கல் முறையில் அதார் மாதம் பதினான்காம் நாளைத் தெரிவு செய்தான்.
8அர்த்தக்சஸ்தா மன்னரிடம் ஆமான், “உமது பேரரசெங்கும் உள்ள பல மக்களினத்தாரிடையே ஓரினம் சிதறுண்டு வாழ்கிறது. மற்ற இனங்களின் சட்டங்களினின்று அவர்களின் சட்டங்கள் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை. எனவே மன்னர் அவர்களை இப்படியே விட்டுவைப்பது நல்லதல்ல.
9மன்னருக்கு விருப்பமானால் அவர்களை அழிப்பதற்கு அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும். அவ்வாறாயின் நான் அரச கருவூலத்தில் நானூறு டன் வெள்ளியைச் செலுத்துவேன்” என்று கூறினான்.
10அப்போது மன்னர் தம் கணையாழியைக் கழற்றி யூதருக்கு எதிரான ஆணையில் முத்திரையிடுவதற்காக அதை ஆமானிடம் கொடுத்தார்.
11“பணத்தை நீரே வைத்துக் கொள்ளும். அந்த இனத்தாரை உம் விருப்பப்படியே நடத்திக் கொள்ளும்” என்று மன்னர் அவனிடம் சொன்னார்.
12எனவே, முதல் மாதம் பதின்மூன்றாம் நாள் மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள்; இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த நூற்று இருபத்தேழு மாநிலங்களின் படைத்தலைவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மன்னரின் பெயரால் ஆமான் விதித்தவாறே அந்தந்த மாநில மொழியில் எழுதினார்கள்.
பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில் ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் தூதர் வழியே அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது. 13aபின்வருவது அம்மடலின் நகலாகும்: “இந்தியா முதல் எத்தியோப்பியாவரை நூற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் எழுதுவது: 13bபல நாடுகளுக்கு மன்னரும் உலகம் முழுமைக்கும் தலைவருமாகிய நான் அதிகாரச் செருக்கின்றி நேர்மையோடும் பரிவோடும் ஆட்சிபுரிந்து, என் குடிமக்களை எப்போதும் குழப்பமின்றி வாழச் செய்யவும், என் பேரரசில் நாகரிகம் நிலவச்செய்யவும், நாட்டின் கடையெல்லைவரை மக்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வழிகோலவும், எல்லா மனிதரும் விரும்பும் அமைதியை நிலைநாட்டவும் திட்டமிட்டிருந்தேன். 13cஇத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று என் ஆலோசகர்களைக் கேட்டேன். அப்போது, நம்மிடையே நுண்ணறிவாற்றல் மிக்கவரும், இடையறாத நல்லெண்ணமும் மாறாத உண்மையும் கொண்டு விளங்குபவரும், நமது பேரரசில் இரண்டாம் இடத்தை வகிப்பவருமாகிய ஆமான். 13d‛உலகில் உள்ள பல மக்களினத்தாரிடையே பகைமை உணர்வு கொண்ட ஓரினம் கலந்து வாழ்கிறது; அது மற்ற இனங்களின் சட்டங்களுக்கு மாறானவற்றைக் கடைப்பிடித்து, மன்னர்களின் ஆணைகளைத் தொடர்ந்து மீறிவருகிறது. இதனால் நாம் மனமார விரும்பும் வகையில் பேரரசின் ஒருமைப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லை’ என்று நம்மிடம் தெரிவித்தார். 13eஎல்லா இனங்களிலும் இந்த இனம் மட்டுமே தொடர்ந்து அனைவருக்கும் எதிராகச் செயல்பட்டுவருவதையும், அன்னியமான பழக்கவழக்கங்களையும் சட்டங்களையும் பின்பற்றிவருவதையும், நமது நலனுக்கு எதிராகத் தீயன நினைத்துக் கொடிய குற்றங்களைப் புரிவதால் நிலையான ஆட்சிக்கு ஊறு விளைவித்துவருவதையும் நாம் அறிவோம்.
13f“எனவே எம் ஆணைப்பேராளரும் உங்களின் இரண்டாம் தந்தையுமாகிய ஆமான் உங்களுக்கு எழுதியுள்ள மடலில் குறித்துள்ளவர்களையும் அவர்களின் மனைவி மக்களையும் இவ்வாண்டு பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதினான்காம் நாள் எவ்வகைப் பரிவும் இரக்கமுமின்றி, யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் பகைவரின் வாளால் கொன்றொழிக்குமாறு நாம் ஆணை பிறப்பித்துள்ளோம். 13gஇவ்வாறு, நீண்டகாலமாக எதிர்ப்பு மனப்பான்மை கொண்டுள்ள அவர்கள் ஒரே நாளில் வன்முறையில் கொல்லப்பட்டுப் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள். இதனால் நமது பேரரசில் இனிமேல் குழப்பம் ஒழிந்து நிலையான அமைதி நிலவும்.”
14இம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியிடப்பட்டது; அந்த நாளுக்கு முன்னேற்பாடாய் இருக்குமாறு பேரரசின் எல்லா இனத்தாருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
15இவ்வாணை சூசாவிலும் விரைவில் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்; நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது!