எஸ்தர் அரசியாதல்

1அதன்பின் மன்னரின் சீற்றம் தணிந்ததால் அவர் ஆஸ்தினைப் பற்றிக் கவலைப்படவில்லை; அவள் சொன்னதையும் தாம் அவளைத் தண்டித்தையும் நினைத்துப்பார்க்கவில்லை.
2ஆகவே, மன்னரின் அலுவலர்கள் அவரிடம், “கற்பும் அழகும் உள்ள இளம் பெண்களை மன்னர் தமக்காகத் தேடட்டும்;
3தம் பேரரசின் எல்லா மாநிலங்களிலும் ஆணையர்களை ஏற்படுத்தட்டும். அவர்கள் இளமையும் அழகும் வாய்ந்த கன்னிப் பெண்களைத் தேர்ந்து, சூசா நகரில் உள்ள அந்தப்புரத்துக்கு அழைத்து வந்து, பெண்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அரச அண்ணகரிடம் அவர்களை ஒப்படைக்கட்டும். அவர் ஒப்பனைப் பொருள்களையும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்கட்டும்.
4அவர்களுள் மன்னர் தமக்கு மிகவும் விருப்பமான பெண்ணை ஆஸ்தினுக்குப் பதிலாக அரசி ஆக்கட்டும்” என்று கூறினார்கள். இக்கருத்து மன்னருக்கு உகந்ததாயிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார்.
5சூசா நகரில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மொர்தெக்காய்; அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசின் கொள்ளுப்பேரனும் சிமேயியின் பேரனும் யாயிரின் மகனும் ஆவார்.
6அவர் பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் ஒருவர்.
7தம் தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகளை அவர் தம் வளர்ப்பு மகளாகக் கொண்டிருந்தார். எஸ்தர் என்னும் அப்பெண்ணின் பெற்றோர் இறந்தபின் மொர்தெக்காய் அவளைத் தம் மனைவியாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் வளர்த்து வந்தார். அவள் அழகில் சிறந்த பெண்மணி.
8அரசாணை பிறப்பிக்கப்பட்டபின் இளம் பெண்கள் பலர் சூசா நகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்; பெண்களுக்குப் பொறுப்பாளராகிய காயுவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களுள் எஸ்தரும் ஒருத்தி.
9காயுவுக்கு அவளைப் பிடித்திருந்ததால், அவரது பரிவு அவளுக்குக் கிட்டியது. எனவே, அவர் அவளுக்கு வேண்டிய ஒப்பனைப் பொருள்களையும் உணவு வகைகளையும் உடனே கொடுத்தார்; அவளுக்குப் பணிசெய்ய அரண்மனையிலிருந்து ஏழு இளம் பெண்களை ஏற்படுத்தினார்; அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.
10எஸ்தர் தம் இனத்தையும் நாட்டையும்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை; ஏனெனில், அவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெக்காய் அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.
11எஸ்தருக்கு நிகழ்வதைக் கவனிப்பதற்காக மொர்தெக்காய் அந்தப்புர முற்றத்தின் அருகில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருப்பார்;
12பன்னிரண்டு மாத காலத்தயாரிப்புக்குப் பின்னரே இளம் பெண்கள் மன்னரிடம் போகவேண்டியிருந்தது. வெள்ளைப்போளம் பூசிக்கொண்டு ஆறு மாதமும், பெண்டிருக்கான நறுமணப் பொருள்களையும் ஒப்பனைப் பொருள்களையும் பயன்படுத்திக்கொண்டு ஆறு மாதமுமாக இந்தக் காலத்தில் அவர்கள் தங்களுக்கு அழகூட்டிக்கொள்வார்கள்;
13அதன் பின் ஒவ்வோர் இளம்பெண்ணும் மன்னரிடம் செல்வாள்; மன்னரால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவாள். அந்த அலுவலர் அவளை அந்தப்புரத்திலிருந்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்.
14அப்பெண் மாலையில் அங்குச் சென்று, மறுநாள் காலையில் மற்றோர் அந்தப்புரத்திற்குச் செல்வாள். அங்கு மன்னரின் அண்ணகரான காயு பெண்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார். பெயர் சொல்லி அழைக்கப்பட்டலொழிய மன்னரிடம் அப்பெண் மீண்டும் செல்லமாட்டாள்.
15மொர்தெக்காயுடைய தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகள் எஸ்தர் மன்னரிடம் செல்வதற்குரிய முறை வந்தபோது, பெண்களுக்குப் பொறுப்பாளரான அண்ணகர் கட்டளையிட்டிருந்தவற்றுள் எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. எஸ்தரைப் பார்த்த அனைவரும் அவரது அழகைப் பாராட்டினர்.
16அர்த்தக்சஸ்தா மன்னருடைய ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் எஸ்தர் மன்னரிடம் சென்றார்.
17மன்னர் அவர்மீது காதல்கொண்டார்; மற்ற இளம் பெண்கள் எல்லாரையும் விட எஸ்தரை மிகவும் விரும்பினார்; ஆகவே, அவரையே அரசியாக்கி முடிசூட்டினார்;
18தம் நண்பர்கள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும் மன்னர் ஏழு நாள் விருந்து அளித்து எஸ்தரின் திருமணத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார்; தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு வழங்கினார்.

யூதர்களுக்கு எதிரான சூழ்ச்சி

மொர்தெக்காய், ஆமான் மோதல்

19மொர்தெக்காய் அரசவையில் பணிபுரிந்து வந்தார்.
20அவர் கட்டளையிட்டபடி எஸ்தர் தமது நாட்டைப்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை; மொர்தெக்காயோடு இருந்தபோது நடந்துகொண்டது போலவே கடவுளுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்தார். தமது வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளவில்லை.
21மொர்தெக்காய் அடைந்த முன்னேற்றத்தால் மெய்க்காவலர் தலைவர்களாகிய அரச அலுவலர்கள் இருவர் மனவருத்தம் கொண்டார்கள்; அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தார்கள்.
22அதை அறிந்த மொர்தெக்காய் அதைப்பற்றி எஸ்தரிடம் தெரிவிக்கவே, அவர் இந்தச் சூழ்ச்சி பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.
23அலுவலர்கள் இருவரையும் மன்னர் விசாரித்து அவர்களைத் தூக்கிலிட்டார்; மொர்தெக்காயின் தொண்டு நினைவுகூரப்படும் வகையில் குறிப்பேட்டில் அதை எழுதிவைக்குமாறு ஆணையிட்டார்.

2:6 எஸ் (கி) 1:1c.