கடனைத் திரும்பப் பெறுதல்

1பின்னர், தோபியா இரபேலை அழைத்து அவரிடம்,
2“சகோதரர் அசரியா, நீர் நான்கு பணியாளர்களை அழைத்துக்கொண்டு இரண்டு ஒட்டகங்களோடு இராகிக்குப் புறப்பட்டுக் கபேலிடம் செல்லும். அவரிடம் ஆவணத்தைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும். அவரையும் உம்முடன் திருமணத்திற்கு அழைத்து வாரும்.
3-4என் தந்தை நாள்களை எண்ணிக்கொண்டிருப்பார் என்பது உமக்குத் தெரியுமே. நான் ஒரு நாள் தாமதித்தாலும் அவர் மிகவும் துயருக்குள்ளாவார். இரகுவேல் என்ன ஆணையிட்டுள்ளார் எனப்பாரும். நான் அவருடைய ஆணையை மீற முடியுமா?” என்றார்.
5எனவே இரபேல் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஒட்டகங்களோடு மேதியாவில் இருந்த இராகிக்குச் சென்று கபேலுடன் தங்கினார்; அவரிடம் ஆவணத்தைக் கொடுத்தார். தோபித்துடைய மகன் தோபியாவின் திருமணத்தைப்பற்றிக் கூறி, திருமணத்திற்கு அவரைத் தோபியா அழைத்துவரச் சொன்னதாக உரைத்தார். கபேல் எழுந்து முத்திரையிட்ட பணப்பைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தார்.
6எல்லாரும் வைகறையில் எழுந்து திருமணத்திற்குச் சென்றனர். அவர்கள் இரகுவேலின் வீட்டை வந்தடைந்தபொழுது உணவருந்திக்கொண்டிருந்த தோபியா எழுந்து கபேலுக்கு வணக்கம் தெரிவித்தார். கபேல் மகிழ்ச்சிக் கண்ணீர் மல்க, ‟நல்லவனே, சிறந்தவனே, நன்மையும் சிறப்பும் நேர்மையும் வள்ளன்மையும் நிறைந்தவரின் மகனே, ஆண்டவர் உனக்கும் உன் மனைவிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் வானகப் பேறுகளை வழங்குவாராக. என் உறவினர் தோபித்தைப்போலத் தோற்றமுள்ள ஒருவரைக் காணச் செய்த கடவுள் போற்றி” என்று கூறித் தோபித்தை வாழ்த்தினார்.