பேய் சாராவைவிட்டு நீங்குதல்

1அவர்கள் உண்டு பருகி முடித்தபின் சாராவின் பெற்றோர் உறங்க விரும்பினர்; எனவே மணமகனைப் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
2அப்பொழுது தோபியா இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து, தம் பையிலிருந்து மீனின் ஈரலையும் இதயத்தையும் எடுத்துக்கொண்டார். அவற்றைத் தூபத்திற்கான நெருப்பிலிட்டார்.
3மீனிலிருந்து கிளம்பிய தீய நாற்றம் பேயைத் தாக்கவே அது பறந்து எகிப்துக்கு ஓடிப்போயிற்று. இரபேல் விரட்டிச் சென்று அதைக் கட்டி விலங்கிட்டார்.

தோபியா, சாராவின் மன்றாட்டு

4சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், “அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்” என்றார்.
5சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார்:

“எங்கள் மூதாதையரின் இறைவா,

போற்றி!

உமது பெயர் என்றென்றும்

எல்லாத் தலைமுறைகளுக்கும்

போற்றி!

வானங்களும் உம் படைப்பு அனைத்தும்

எக்காலமும் உம்மைப் போற்றுக!

6நீர் ஆதாமைப் படைத்தீர்;

அவருடைய மனைவி ஏவாளை

அவருக்குத் துணையாகவும்

ஆதரவாகவும் உண்டாக்கினீர்.

அவர்கள் இருவரிடமிருந்தும்

மனித இனம் தோன்றியது.

‘மனிதன் தனிமையாக இருப்பது

நல்லதன்று;

அவனுக்குத் தகுந்ததொரு துணையை

உருவாக்குவோம்’ என்று உரைத்தீர்.

7இப்பொழுது என் உறவினள் இவளை

நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது

இச்சையின் பொருட்டன்று,

நேர்மையான நோக்கத்தோடுதான்.

என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்;

நாங்கள் இருவரும்

முதுமை அடையும்வரை

இணைபிரியாது வாழச் செய்யும்.”

8இருவரும் “ஆமென், ஆமென்” என்று கூறினர்.
9அன்று இரவு உறங்கினர்.

இரகுவேலின் புகழ்ப்பா

10இரகுவேல் எழுந்து தம் பணியாளர்களைத் தம்மிடம் அழைக்க, அவர்கள் சென்று ஒரு குழி வெட்டினார்கள். “தோபியா அநேகமாக இறந்திருப்பான். அவ்வாறாயின் நாம் இகழ்ச்சிக்கும் நகைப்புக்கும் ஆளாவோம்” என்றார்.
11அவர்கள் குழிவெட்டி முடித்தபொழுது, இரகுவேல் வீட்டுக்குள் சென்று தம் மனைவியை அழைத்து,
12“பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பு. அவள் உள்ளே சென்று, தோபியா உயிரோடு இருக்கிறானா என்று பார்த்து வரட்டும். அவன் இறந்திருந்தால் எவரும் அறியா வண்ணம் அவனைப் புதைத்துவிடலாம்” என்று கூறினார்.
13எனவே அவர்கள் ஒரு பணிப்பெண்ணை அனுப்பினார்கள்; விளக்கேற்றிக் கதவைத் திறந்தார்கள். பணிப்பெண் உள்ளே சென்று அவர்கள் ஒன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கக் கண்டாள்.
14அவள் வெளியே வந்து, தோபியா உயிருடன் இருக்கின்றார் என்றும் அவருக்குத் தீங்கு எதுவும் நேரவில்லை என்றும் தெரிவித்தாள்.
15அவர்கள் விண்ணகக் கடவுளைப் புகழ்ந்தார்கள். இரகுவேல் பின்வருமாறு மன்றாடினார்:

“கடவுளே, போற்றி!

எவ்வகை மெய்ப் புகழ்ச்சியும்

உமக்கு உரித்தாகுக.

எக்காலமும் நீர் புகழப்பெறுவீராக.

16என்னை மகிழ்வித்த நீர் போற்றி!

நான் அஞ்சியதுபோல்

எதுவும் நடக்கவில்லை.

உம் இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப

எங்களை நடத்தியுள்ளீர்.

17தம் பெற்றோருக்கு

ஒரே மகனும் ஒரே மகளுமான

இவர்கள் இருவருக்கும்

இரக்கம் காட்டிய நீர் போற்றி.

ஆண்டவரே, இவ்விருவர்மீதும்

இரங்கிக் காத்தருளும்.

இவர்கள் மகிழ்ச்சியும்

இரக்கமும் பெற்று

நிறை வாழ்வு காணச் செய்தருளும்.”

18பின்னர் இரகுவேல் தம் பணியாளர்களிடம், பொழுது விடியுமுன் குழியை மூடிவிடுமாறு கூறினார்.

திருமண விழா

19இரகுவேல் தம் மனைவியிடம் நிறைய அப்பம் சுடச் சொன்னார். அவரே மந்தைக்குச் சென்று இரண்டு காளைகளையும் நான்கு ஆடுகளையும் ஓட்டி வந்து சமைக்கச் சொன்னார். அவர்கள் விருந்து ஏற்பாடு செய்தார்கள்.
20இரகுவேல் தோபியாவை அழைத்து அவரிடம், “பதினான்கு நாள்கள் நீ இங்கிருந்து நகரக் கூடாது. என்னுடன் உண்டு பருகி இங்கேயே தங்கியிரு; சோர்வுற்றிருக்கும் என் மகளின் மனத்துக்கு மகிழ்வூட்டு.
21என் உடைமையிலெல்லாம் பாதியை இப்பொழுதே எடுத்துக்கொள். உன் தந்தையின் வீட்டிற்கு நலமாகத் திரும்பு. நானும் என் மனைவியும் இறந்ததும் மற்றொரு பாதியும் உன்னைச் சேரும். அஞ்சாதே, தம்பி! நான் உனக்குத் தந்தை; எதினா உனக்குத் தாய். இனிமேல் என்றும் நாங்கள் உன்னுடன் உன் மனைவியுடனும் இருப்போம். துணிவுகொள் மகனே!” என்று கூறினார்.

8:6 தொநூ 2:7, 17-23.