வானதூதர் இரபேல்

1அப்பொழுது தம் தந்தை தோபித்துக்கு மறுமொழியாகத் தோபியா, “அப்பா, நீங்கள் எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வேன்.
2ஆனால் எப்படிக் கபேலிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவேன்? அவருக்கு என்னைத் தெரியாது; எனக்கும் அவரைத் தெரியாது. அவர் என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை நம்பி என்னிடம் பணத்தைக் கொடுக்கவும் நான் எத்தகைய அடையாளம் காட்டுவேன்? மேதியாவுக்கு எவ்வழியாகச் செல்வது, எவ்வாறு செல்வது என்று எனக்குத் தெரியாது” என்றார்.
3அப்பொழுது தோபித்து தம் மகன் தோபியிடம், “ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார்; நானும் கையொப்பமிட்டேன். அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம். அதைப் பணத்துடன் வைத்துள்ளேன். இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பணத்தைக் கொடுத்து வைத்தேன். இப்பொழுது உன்னோடு செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்த ஒருவரை நீயே தேடிப்பார். நீ திரும்பும் வரைக்குமுள்ள கூலியை அவருக்குக் கொடுப்போம். கபேலிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்று வா மகனே” என்றார்.
4தம்முடன் மேதியாவுக்குச் செல்ல வழி தெரிந்த ஒருவரைத் தேடித் தோபியா வெளியே சென்றார். சென்று, தம்முன் நின்ற வானதூதர் இரபேலைக் கண்டார். ஆனால் அவர் கடவுளின் தூதர் என்பது அவருக்குத் தெரியாது.
5அவரிடம், “இளைஞரே, எங்கிருந்து வருகிறீர்?” என்று வினவினார். அதற்கு அவர், “உன் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் நானும் ஒருவன். வேலை தேடி இங்கு வந்துள்ளேன்” என்றார். “மேதியாவுக்குச் செல்ல உமக்கு வழி தெரியுமா?” என்று தோபியா கேட்டார்.
6அதற்கு அவர், “ஆம், பன்முறை அங்குச் சென்றுள்ளேன். அது எனக்கு அறிமுகமான இடம். எல்லா வழிகளையம் நான் அறிவேன். அடிக்கடி மேதியாவுக்குச் சென்று, இராகியில் வாழும் நம் உறவினர் கபேலுடன் தங்கியிருக்கிறேன். எக்பத்தானாவிலிருந்து இராகிக்குச் செல்ல இரண்டு நாள் ஆகும்; ஏனெனில் எக்பத்தானா மலைப் பகுதியில் உள்ளது” என்றார்.
7தோபியா, “இளைஞரே, நான் சென்று என் தந்தையிடம் சொல்லி விட்டுத் திரும்பும் வரை எனக்காகக் காத்திரும். நீர் என்னுடன் வர வேண்டும். உமக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன்” என்றார்.
8அதற்கு அவர், “சரி, நான் காத்திருக்கிறேன்; ஆனால் மிகவும் தாமதியாதீர்” என்றார்.
9தோபியா உள்ளே சென்று தம் தந்தை தோபித்தை நோக்கி, “நம் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் ஒருவரைக் கண்டுகொண்டேன்” என்றார். அவரிடம் தோபித்து, “மகனே, அவருடைய இனம் எது, குலம் எது, உன்னுடன் செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்தவரா என அறியும் பொருட்டு அவரை என்னிடம் அழைத்து வா” என்றார்.
10தோபியா வெளியே சென்று அந்த இளைஞரை அழைத்து, “என் தந்தை உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார். அவர் உள்ளே சென்றதும் தோபித்து முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அதற்கு இரபேல், “வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக” என்று வாழ்த்தினார். “எனக்கு இனி என்ன மங்கலம் உண்டு? நான் பார்வையற்ற மனிதன். விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது. ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று இருளில் கிடக்கின்றேன்; நான் உயிர்வாழும்போதே இறந்தவர்களுடன் இருக்கிறேன். மனிதரின் குரலைக் கேட்கிறேன்; ஆனால் அவர்களைக் காணமுடிவதில்லை” என்று கூறினார். அதற்கு அவர், “அஞ்ச வேண்டாம். விரைவில் கடவுள் உமக்கு நலம் அருள்வார். துணிவுகொள்ளும்” என்றார். பின்பு தோபித்து அவரிடம், “என் மகன் தோபியா மேதியாவுக்குச் செல்ல விரும்புகிறான். நீ வழிகாட்டியாக அவனோடு போக முடியுமா? தம்பி, உனக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன்” என்றார். இரபேல் அவரிடம், “சரி, நான் அவருடன் போகிறேன். எனக்கு வழியெல்லாம் தெரியும். பன்முறை மேதியாவுக்குச் சென்றுள்ளேன். அதன் சமவெளிகள், மலைகளெங்கும் பயணம் செய்துள்ளேன். அவையெல்லாம் எனக்கு நன்கு பழக்கம்” என்றார்.
11அதற்குத் தோபித்து இளைஞரிடம், “தம்பி, உன் குடும்பம் எது? குலம் எது? சொல்” என்றார்.
12அவர், “குலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன?” என்றார். அதற்கு அவர், “தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன?” என்று வினவினார்.
13இரபேல் அவரிடம், “நான் உம் உறவினர்களுள் ஒருவரான பெரிய அனனியாவின் மகன் அசரியா” என்றார்.
14தோபித்து இளைஞரிடம், “தம்பி, நீ உடல்நலமும் பிறநலன்களும் பெற்று வாழ்க! உண்மையைத் தெரிந்து கொள்ளவே உன் குடும்பத்தைப்பற்றி அறிய விரும்பினேன். எனவே என்மீது சினங்கொள்ளாதே. நீ என் உறவினர்களுள் ஒருவனே; நல்ல, சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய செமெல்லியின் புதல்வர்களான அனனியா, நாத்தான் ஆகிய இருவரையும் நான் அறிவேன். அவர்கள் என்னுடன் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதுண்டு. அவர்கள் நெறி பிறழாதவர்கள். உன் உறவினர்கள் நல்லவர்கள். நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வரவு நல்வரவாகுக!” என்று கூறினார்.
15அவர் தொடர்ந்து, “உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு திராக்மா* சம்பளமாகக் கொடுப்பேன். மேலும் என் மகனுக்கு ஆகும் செலவுகளைப் போன்றே உன் செலவுகளையும் ஏற்றுக் கொள்வேன்.
16என் மகனுடன் செல்; உனக்குரிய சம்பளத்தை விட மிகுதியாகவே கொடுப்பேன்” என்றார்.
17இரபேல் அவரிடம், “அஞ்ச வேண்டாம், நான் அவருடன் போவேன். நாங்கள் நலமே சென்று திரும்புவோம்; ஏனெனில் பாதை பாதுகாப்பானது” என்றார். பிறகு தோபித்து அவருக்கு வாழ்த்துக் கூறி, “எல்லாம் நலமாக அமையட்டும், தம்பி” என்றார். பிறகு தம் மகனை அழைத்து அவரிடம், “மகனே, பயணத்திற்கு ஏற்பாடு செய்; உன் சகோதரனுடன் புறப்படு. விண்ணகக் கடவுள் உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தி நலமே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பாராக. அவருடைய தூதர் உங்களை நலமே வழி நடத்துவாராக” என்றார். தோபியா புறப்படுமுன் தம் தந்தையையுயம் தாயையுயம் முத்தமிட்டார். அப்போது தோபித்து அவரிடம், “நலமே சென்று வா” என்றார்.
18ஆனால், அவருடைய தாய் அழுதுகொண்டே தோபித்திடம், “ஏன் என் குழந்தையை அனுப்பினீர்? அவன் நமக்கு ஊன்றுகோலும் உறுதுணையும் அல்லவா?
19பணமா பெரிது? நம் குழந்தை அதைவிட மதிப்பு வாய்ந்தவன் அல்லவா?
20ஆண்டவர் நமக்கு அருளிய வாழ்வே நமக்குப் போதுமே!” என்றார்.
21தோபித்து அவரிடம், “கவலை வேண்டாம். நம் மகன் நலமே சென்று திரும்புவான். அவன் நலமுடன் உன்னிடம் திரும்பும் நாளை நீ காண்பாய்.
22எனவே கவலை வேண்டாம், அன்பே; அவர்களைப்பற்றி அச்சம்கொள்ள வேண்டாம். நல்ல தூதர் ஒருவர் அவனுடன் சென்று, பயணத்தை வெற்றியாய் முடித்து, நலமே திரும்ப அழைத்து வருவார்” என்றார்.
23அதைக்கேட்ட தோபியாவின் தாய் அழுகையை நிறுத்தினார்.

5:15 ஒரு திராக்மா என்பது ஒருநாள் கூலிக்கு சமம். தொழிலாளியின் ஒருநாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.