தோபித்து பெற்ற கைம்மாறு தோபித்தின் அறிவுரை

1மேதியா நாட்டின் இராகியில் வாழ்ந்த கபேலிடம் தாம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தோபித்து அன்று நினைவுகூர்ந்தார்.
2“சாகவேண்டும் என்று நான் வேண்டியுள்ளேன். அதற்கு முன் என் மகன் தோபியாவை அழைத்து இப்பணத்தைப் பற்றி விளக்கவேண்டுமே” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
3எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க, அவரும் தந்தையிடம் வந்தார். மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்; “என்னை நல்லடக்கம் செய்; உன் தாயை மதித்துநட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்; எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.
4மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்; அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.
5“மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை; பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருகாலும் விரும்பாதே. உன் வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைப்பிடி; அநீதியின் வழிகளில் செல்லாதே.
6ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.
7aநீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் 7b* உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே; ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்.
8உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு; சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு; ஆனால் தருமம் செய்யத் தயங்காதே.
9இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.
10நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்; இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும்.
11தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.
12மகனே, எல்லாவகைக் தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்; எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின் வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்; நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால் உன் தந்தையின் குலத்தைச் சேராத வேற்றினப் பெண்ணை மணம் செய்யாதே. மகனே, தொன்றுதொட்டே நம் மூதாதையராய் விளங்கும் நோவா, ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோரை நினைவில் கொள். அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே பெண்கொண்டார்கள்; கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள்; அவர்களுடைய வழிமரபினர் இஸ்ரயேல் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
13அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு; உன் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம் உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே; இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்; சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்; சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.
14வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு; இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.
15உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவு மீறி மது அருந்தாதே; குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.
16உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.
17உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு; பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.
18ஞானிகளிடம் அறிவுரை கேள்; பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.
19aஎல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று; உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு; ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது. 19bஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார். ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார். மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்; அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.
20“இப்பொழுது, மகனே, உன்னிடம் ஒன்று சொல்வேன்; மேதியா நாட்டு இராகியில் உள்ள கபிரியின் மகன் கபேலிடம் நானூறு கிலோ* வெள்ளியைக் கொடுத்துவைத்துள்ளேன்.
21மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.”

4:7b-19a சீனாய் சுவடியில் விடப்பட்டுள்ளது. இதனால் வத்திக்கான், அலக்சாந்திரியச் சுவடிகளிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது. 4:20 ‘பத்து தாலந்து’ என்பது கிரேக்க பாடம். ஒரு தாலந்து வெள்ளி என்பது ஆறாயிரம் தெனாரியத்துக்குச் சமம். ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.