செலொபுகாதின் புதல்வியர்
1யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர்.
2அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது:
3எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை.
4இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.”
5மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார்.
6ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
7செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே; அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய்.
8நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு; மகன் இல்லாமலே ஒருவன் இறந்து விட்டால் அவன் உரிமைச் சொத்து அவன் மகளுக்குச் சேர வேண்டும்.
9அவனுக்கு மகளும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.
10அவனுக்குச் சகோதரரும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் தந்தையின் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.
11அவன் தந்தைக்கும் சகோதரர் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் குடும்பத்தில் அவனுக்கடுத்த உறவினனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் அதை உடைமையாக்கிக் கொள்வான். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கும்.
மோசேக்குப் பதிலாக யோசுவா தேர்ந்தெடுக்கப்படல்
(இச 31:1-8)
12மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “இந்த அபாரிம் மலை மேல் ஏறிச் சென்று நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்துள்ள நாட்டைப் பார்.
13நீ அதைப் பார்த்த பின் உன் சகோதரன் ஆரோன் சேர்த்துக் கொள்ளப்பட்டது போன்று, நீயும் உன் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய்.
14ஏனெனில், சீன் பாலைநிலத்தில் மக்கள் கூட்டமைப்பு தண்ணீருக்காக வாக்குவாதம் செய்தபொழுது நீங்கள் அவர்கள் பார்வையில் என்னைப் புனிதப்படுத்தாது என் வார்த்தையை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்” — இவையே சீன் பாலை நிலத்தில் காதேசிலுள்ள மெரிபாவின் நீர்நிலைகள்.
15மோசே ஆண்டவரிடம்,
16“உயிர்க்கு எல்லாம் கடவுளாகிய ஆண்டவர் இந்த மக்கள் கூட்டமைப்புக்கு ஒருவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்துவாராக;
17அவன் அவர்களுக்கு முன்னே போகவும், அவர்களுக்கு முன்னே வரவும் வேண்டும்; அவ்வாறே வெளியே நடத்திச் செல்லவும் உள்ளே அழைத்து வரவும் வேண்டும். இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது” என்றார்.
18ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்; அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்; நீ அவன் மேல் உன் கையை வை.
19குரு எலயாசருக்கும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் முன்பாக அவனை நிற்கச் செய்; அவர்கள் பார்வையில் நீ அவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்து.
20மக்கள் கூட்டமைப்பின் அனைத்து மக்களும் கீழ்ப்படியும்படி உன் அதிகாரத்தை அவனுடன் பகிர்ந்துகொள்.
21அவன் குரு எலயாசருக்கு முன் நிற்க, அவனுக்காக எலயாசர் ஆண்டவர் முன்னிலையில் ஊரிம் வழங்கும் தீர்ப்பை நாடுவான்; அவனும் அவனுடன் இருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருமான மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எலயாசரின் வார்த்தையின்படியே வெளியே செல்லவும், உள்ளே வரவும் வேண்டும்.
22ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவை அழைத்து குரு எலயாசர் மக்கள் அனைவர் முன்னிலையில் அவரை நிற்கச் செய்தார்.
23ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தம் கைகளை அவர் மேல் வைத்து அவரைப் பொறுப்பாளராக நியமித்தார்.
27:7 எண் 36:2. 27:12-14 இச 3:23-27; 32:48-52. 27:17 1 அர 22:17; எசே 34:5; மத் 9:36; மாற் 6:34. 27:18 விப 24:13. 27:21 விப 28:30; 1 சாமு 14:41; 28:6. 27:23 இச 31:23.