ஆரோனின் கோல்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்; ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது;
3ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதையர் குலத் தலைவனுக்கும் ஒரு கோல் இருக்கும்.
4பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய்.
5நான் தெரிந்து கொள்பவரின் கோல் துளிர்க்கும். இங்ஙனம், உங்களுக்கெதிராக முறுமுறுக்கிற இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை என் முன்னின்று ஒழித்து விடுவேன்.
6மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசினார்; ஒரு தலைவனுக்கு ஒன்று வீதம் அவர்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரு கோல்களை அவர்கள் தலைவர்கள் அவரிடம் கொடுத்தனர்; அவர்கள் கோல்களுள் ஆரோன் கோலும் இருந்தது.
7மோசே அந்தக் கோல்களை உடன்படிக்கைக் கூடாரத்தினுள் ஆண்டவர் திருமுன் வைத்தார்.
8மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்; லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது; அது துளிர்த்துப் பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது.
9பின்னர், மோசே ஆண்டவர் முன்னின்று எல்லாக் கோல்களையும் எடுத்து வெளியே இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்தார்; அவர்கள் பார்த்தார்கள்; ஒவ்வொரு தலைவனும் தன் கோலை எடுத்துக் கொண்டான்.
10ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன் கோலைத் திரும்ப எடுத்து உடன்படிக்கைப் பேழை முன் வை; எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோர் சாகாதபடி அவர்கள் முறுமுறுப்புகளை என் முன்னின்று நீ ஒழித்துவிட்டதற்கு ஓர் அடையாளமாக அது வைக்கப்படட்டும்” என்றார்.
11அப்படியே மோசே செய்தார்; ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.
12இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், “இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்;
13நெருங்கி வருகிற எவனும், அதாவது ஆண்டவரின் திருஉறைவிடத்தை நெருங்கி வருகிற எவனும் செத்தே போவான்; நாங்கள் அனைவரும் சாகத்தான் வேண்டுமா?” என்றனர்.

17:8-10 எபி 9:4.