எருசலேமின் வருங்கால மீட்பும் வளமும்

1ஓர் இறைவாக்கு: இஸ்ரயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்வெளியை விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
2இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும் போதையேற்றித் தள்ளாடச் செய்யும் மதுக்கிண்ணமாக நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்; எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் யூதாவுக்கும் அதே நிலைதான் ஏற்படும்.
3அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்; அதைத் தூக்கும் எவரும் காயமடைவது திண்ணம்; உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.
4அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும் அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் பைத்தியத்தாலும் வதைப்பேன், என்கிறார் ஆண்டவர்.
5யூதா குடும்பத்தாரைக் கடைக்கண்ணோக்கி மக்களினங்களின் அனைத்துக் குதிரைகளின் கண்களையும் குருடாக்குவேன். அப்போது யூதா நாட்டின் குடும்பத்தலைவர்கள், எருசலேமில் குடியிருப்போரின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய படைகளின் ஆண்டவரில்தான் இருக்கிறது என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்.
6அந்நாளில் நான் யூதாவின் குடும்பத் தலைவர்களை விறகுகளுக்கிடையில் வைத்த நெருப்புச்சட்டிபோலும், வைக்கோல் கட்டுகளுக்குள் தீப்பந்தம் போலும் ஆக்குவேன்; அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களினங்கள் அனைத்தையும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாய் அழித்தொழிப்பார்கள்; எருசலேம் மக்களோ முன்பு இருந்த இடமாகிய எருசலேமிலேயே குடியிருப்பார்கள்.
7தாவீது குடும்பத்தாரின் மேன்மையும் எருசலேமில் குடியிருப்போரின் மேன்மையும் யூதாவின் மேன்மையைவிட மிகுந்துவிடாதிருக்க ஆண்டவர் யூதாவின் கூடாரங்களுக்கே முதலில் விடுதலை அளிப்பார்.
8அந்நாளில் எருசலேமில் குடியிருப்போருக்கு ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார்; அந்நாளில் அவர்களுள் காலூன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப்போலிருப்பர். தாவீதின் குடும்பத்தார் கடவுளைப்போலும் அவர்களுக்கு முன்சென்ற ஆண்டவரின் தூதரைப்போலும் இருப்பர்.
9அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க வகைதேடுவேன்.
10நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.
11அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும்.
12நாடு முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்; தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,
13லேவி குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள்.
14எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியேயும் அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள்.

12:10 யோவா 19:37; திவெ 1:7. 12:10-14 மத் 24:30; திவெ 1:7.