எளியோரை ஒடுக்குவோருக்கு வரும் தண்டனை

1தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால் அவர்கள் அதைச்செய்து முடிக்கின்றார்கள்.
2வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.
3ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: “இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனினின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்கமாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும்.
4அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
5ஆதலால், நூல்பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.
6அவர்கள் பிதற்றுவது: ‘சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்; அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்; மானக்கேடு நம்மை அணுகாது.
7யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ? இவற்றைச் செய்பவர் அவர்தாமோ? நேர்மையாய் நடப்போரிடம் அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’
8ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப் பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்! போரில் நாட்டம் கொள்ளாமல், அமைதியை நாடுவோரின் மேலாடையைப் பறிக்கின்றீர்கள்; இதனால், அவர்களின் மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;
9என் மக்களின் கூட்டத்திலுள்ள பெண்களை அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து விரட்டுகின்றீர்கள்; அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம் என் மாட்சி என்றும் விளங்காதவாறு செய்துவிடுகின்றீர்கள்.
10எழுந்து அகன்றுபோங்கள்; இது இளைப்பாறும் இடம் அல்ல; நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது; அது அழிவைக் கொண்டுவரும். அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.
11‘திராட்சை இரசத்தையும் மதுவையும்பற்றி உங்களுக்கு உரையாற்றுவேன்’ என்று கூறி, வீண் சொற்களையும் பொய்களையும் பிதற்றுகிறவன்தான் இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!
12யாக்கோபே! நான் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டுவேன்; இஸ்ரயேலில் எஞ்சியோரை ஒன்றாகத் திரட்டுவேன்; இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை ஆடுகளைக் கிடையில் மடக்குவது போலவும்; மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலவும் ஒன்றாகச் சேர்ப்பேன்.
13அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்; அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.”