பாலியற் குற்றங்கள்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2“நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
3நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம்.
4நியமங்களை ஏற்று, என் ஆணைகளுக்குப் பணிந்து நடங்கள், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
5எனவே, என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார். நானே ஆண்டவர்!
6உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்; நானே ஆண்டவர்!
7தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில், அவள் உன் தாய்; உன் தாயை வெற்றுடம்பாக்காதே!
8தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்!
9தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே!
10உன் மகனின் மகளையோ உன் மகளின் மகளையோ வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர்.
11உன் தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி.
12தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல்.
13தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல்.
14தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்; ஏனெனில், அவள் உன் சிற்றன்னை.
15மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் மகனின் மனைவி; அவளை வெற்றுடம்பாக்காதே!
16சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு.
17ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு
18மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே!
19மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே!
20உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே.
21உன்பிள்ளைகளுள் யாரையேனும் மோலெக்கிற்கு எரிபலியாக்கி, உன் கடவுளின் திருப்பெயரை இழிவு படுத்தாதே. நானே ஆண்டவர்!
22பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு.
23எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு.
24இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.
25இவ்வாறு, நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன். நாடும் அவர்களை வெளியே கக்கியது.
26நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள். குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அந்நியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.
27ஏனெனில், இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று.
28உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள்.
29ஏனெனில்,யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான்.
30எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

18:5 நெகே 9:29; எசே 18:9; 20:11-13 ; லூக் 10:28; உரோ 10:5; கலா 3:12. 18:8 லேவி 20:11; இச 22:30; 27:20. 18:9 லேவி 20:17; இச 27:22. 18:12-14 லேவி 20:19,20. 18:15 லேவி 20:12. 18:16 லேவி 20:21. 18:17 லேவி 20:14; இச 27:23. 18:19 லேவி 20:18. 18:20 லேவி 20:10. 18:21 லேவி 20:1-5. 18:22 லேவி 20:13. 18:23 விப 22:19; லேவி 20:15-16; இச 17:21.