யோவேல் இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. இந்நூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள்மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக இறைவாக்கினர் கருதுகின்றார். மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதிமொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர்மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருளுவார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இந்நூல் கூறுகிறது.