மனமாற்றத்திற்கு அழைப்பு

1இஸ்ரயேலே! உன் கடவுளாகிய

ஆண்டவரிடம் திரும்பி வா;

நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.

2இம்மொழிகளை ஏந்தி

ஆண்டவரிடம் திரும்பி வந்து

இவ்வாறு சொல்லுங்கள்:

“தீவினை அனைத்தையும்
அகற்றியருளும்,

நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;

நாங்கள் எங்கள் வாய்மொழியாம்

கனிகளை உமக்கு அளிப்போம்;

3அசீரியர் எங்களை

விடுவிக்கமாட்டார்கள்;

குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;

எங்கள் கைவினைப்
பொருள்களை நோக்கி,

‘எங்கள் கடவுளே!’ என்று

இனிச் சொல்லமாட்டோம்;

திக்கற்றவன் உம்மிடத்தில்

பரிவைப் பெறுகிறான்”
எனச் சொல்லுங்கள்.

4அவர்களுடைய
பற்றுறுதியின்மையை

நான் குணமாக்குவேன்;

அவர்கள்மேல் உளமார

அன்பு கூர்வேன்.

அவர்கள் மேலிருந்த என் சினம்

தணிந்துவிட்டது.

5நான் இஸ்ரயேலுக்குப்

பனி போலிருப்பேன்;

அவன் லீலிபோல் மலருவான்;

லெபனோனின் மரம்போல்
வேரூன்றி நிற்பான்.

6அவனுடைய கிளைகள்

விரிந்து பரவும்;

அவன் பொலிவு

ஒலிவ மரம் போல் இருக்கும்;

லெபனோனைப்போல்

அவன் நறுமணம் பரப்புவான்.

7அவர்கள் திரும்பிவந்து என்*

நிழலில் குடியிருப்பார்கள்;

கோதுமைபோல்

தழைத்தோங்குவார்கள்.

திராட்சைக் கொடிபோல்

செழிப்படைவார்கள்.

லெபனோனின்

திராட்சை இரசம்போல்
அவர்களது புகழ் விளங்கும்.

8இனிமேல் எப்ராயிமுக்குச்

சிலைகள் எதற்கு?

நானே அவனுக்குச்

செவி சாய்த்து,

அவன்மேல்

அக்கறை கொண்டுள்ளேன்;

நான் பசுமையான

தேவதாரு மரம் போன்றவன்.

உன் கனி எல்லாம்

என்னிடமிருந்தே வரும்.

9ஞானம் நிறைந்தவன் எவனோ,

அவன் இவற்றை
உணர்ந்து கொள்ளட்டும்;

பகுத்தறிவு உள்ளவன் எவனோ,

அவன் இவற்றை

அறிந்து கொள்ளட்டும்;

ஆண்டவரின் நெறிகள்

நேர்மையானவை;

நேர்மையானவர்கள்

அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;

மீறுகிறவர்கள்

அவற்றில் இடறி விழுகின்றார்கள்.


14:7 * ‘அவர்’ என்பது எபிரேய பாடம்.