தானியேல் முன்னுரை


‘தானியேல்’ என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டபோது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புறச் செய்வார் என்பதை வற்புறுத்துமாறு இந்நூலில் எடுத்துக் காட்டுகளும் காட்சிகளும் கையாளப்பட்டுள்ளன.

இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது:

 1. தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை கொண்டு, அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப் பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.
 2. தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்துவரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன.

இந்நூலின் ஒரு பகுதி (1:1-2:3; 8:1-12:13) எபிரேய மொழியிலும், மறு பகுதி (2:4-7:28) அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ‘அசரியாவின் மன்றாட்டு’, ‘மூவர் பாடல்’, ‘சூசன்னா’, ‘பேலும் பறவைநாகமும்’ ஆகிய நான்கு பகுதிகள் கிரேக்க மொழியில் மட்டும் காணப்படுகின்றன. அவை ‘தானியேல்: இணைப்புகள்’ என்னும் இணைத்திருமுறை நூலில் இடம்பெற்றுள்ளன.

நூலின் பிரிவுகள்

 1. தானியேலும் தோழர்களும் 1:1 - 6:28
 2. தானியேலின் காட்சிகள் 7:1 - 11:45
   அ) நான்கு விலங்குகள் 7:1 - 28
   ஆ) செம்மறியும் வெள்ளாடும் 8:1 - 9:27
   இ) மாபெரும் காட்சி - வானதூதர் 10:1 - 11:45
 3. முடிவின் காலம் 12:1 - 13