இ. மாபெரும் காட்சி - வானதூதர்

1பாரசீக அரசராகிய சைரசின் மூன்றாம் ஆட்சியாண்டில் பெல்தசாச்சர் என்று பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு ஒரு வாக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது உண்மையான வாக்கு; அது ஒரு பெரும் தொல்லையைப் பற்றியது. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். அதைப் பற்றிய தெளிவு, காட்சி வாயிலாகக் கிடைத்தது.
2அந்நாளில் தானியேல் ஆகிய நான் மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன்.
3அந்த மூன்று வாரம் முழுவதும் நான் சுவையான உணவு அருந்தவில்லை. இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை; என் தலையில் எண்ணெய்கூடத் தடவிக் கொள்ளவில்லை.
4முதல் மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று நான் திக்ரீசு என்னும் பெரிய ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன்.
5என் கண்களை உயர்த்திப் பார்க்கையில், மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு தம் இடையில் ஊபாசு நாட்டுத் தங்கக்கச்சை கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன்.
6அவரது உடல் பளிங்கு போல் இருந்தது; அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது; அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் வெண்கலம் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.
7தானியேல் ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன். என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை; ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஒளிந்துகொள்ள ஓடிவிட்டார்கள்.
8தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்; என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
9அப்போது அவரது பேச்சொலி என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.
10அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது; கைகளையும் முழங்கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும் படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன்.
11அவர் என்னை நோக்கி, “மிகவும் அன்புக்குரிய தானியேல்! நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்; நிமிர்ந்து நில். ஏனெனில், உன்னிடம்தான் நான் அனுப்பப்பட்டேன்” என்றார். இவ்வாறு அவர் சொன்னவுடன் நடுங்கிக் கொண்டே நான் எழுந்து நின்றேன்.
12அப்பொழுது அவர் என்னைப் பார்த்துக் கூறியது: “தானியேல்! அஞ்ச வேண்டாம், உய்த்துணர வேண்டும் என்னும் உள்ளத்தோடு என் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக் கொண்ட முதல் நாள் தொடங்கி உன் மன்றாட்டுக் கேட்கப்பட்டுவருகிறது. உன் மன்றாட்டுக்கேற்ப இதோ! நான் வந்துள்ளேன்.
13பாரசீக நாட்டின் காவலனாகிய தூதன் இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான். அங்கே பாரசீக அரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால், தலைமைக் காவலர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணைசெய்ய வந்தார்.
14உன் இனத்தார்க்கு இறுதி நாள்களில் நடக்கவிருப்பதை உனக்கு உணர்த்துவதற்காக நான் உன்னிடம் வந்தேன். இந்த காட்சி நிறைவேற இன்னும் நாள்கள் பல ஆகும்.”
15அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேசாதிருந்தேன்.
16அப்போது, மானிட மகனின் தோற்றம் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். நானும் வாய் திறந்து பேசி, எனக்கு எதிரில் நின்றவரை நோக்க, “என் தலைவரே! இந்தக் காட்சியின் காரணமாய் நான் வேதனையுற்றேன். என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
17என் தலைவருடைய ஊழியனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு உரையாடுவது எப்படி? ஏனெனில் நான் வலிமை இழந்துவிட்டேன்; என் மூச்சும் அடைத்துக்கொண்டது” என்றேன்.
18அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்.
19மேலும் அவர், “மிகுந்த அன்புக்குரியவனே! அஞ்சாதே; உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு துணிவாயிரு” என்றார். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி, “என் தலைவர் பேசட்டும்; ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர்” என்றேன்.
20அப்பொழுது அவர் கூறியது: “உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா? இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன். நான் அவனை முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான்.
21ஆனால் அதற்கு முன் ‘உண்மை நூலில்’ எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன். இவர்களை எதிர்த்துப் போராடுவதில் உங்கள் காவலராகிய மிக்கேலைத் தவிர எனக்குத் துணை நிற்பார் யாருமில்லை.”

10:5-6 திவெ 1:13-15; 2:18; 19:12. 10:13-21 திவெ 12:7.