கேதுரு மரத்துக்கு ஒப்பான எகிப்து

1பதினோராம் ஆண்டில், மூன்றாம் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்:

மேன்மையில் உனக்கு நிகர் யார்?

3இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய

அசீரியாவைப் பார்!

அழகிய கிளைகளுடன்,

அடர்ந்த நிழலுடன்,

மிகுந்த உயரத்துடன்

அது இலங்கிற்று;

அதன் உச்சி

மேகங்களை ஊடுருவிற்று.

4தண்ணீர் அதனைத்

தழைக்கச் செய்தது;

ஆழ் ஊற்றுகள் அதனை

உயர்ந்து வளரச் செய்தன;

அவை தம் அருவிகளாக

அதனைச் சுற்றி ஓடி

கால்வாய்களாகக்

காட்டின் எல்லா மரங்களுக்கும்

நீர் பாய்ச்சின.

5காட்டின் எல்லா மரங்களையும் விட

அது ஓங்கி வளர்ந்தது;

அதன் தளிர்கள் பெருகின;

நீர் வளத்தால் கிளைகள் நீண்டன;

கொப்புகள் மிகுந்தன.

6வானத்துப் பறவைகள் எல்லாம்

அதன் கிளைகளில் கூடுகள் கட்டின;

காட்டு விலங்குகள் எல்லாம்

கன்றுகள் ஈன்றன;

அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம்

வாழ்வு கண்டன.

7மிகுந்த நீரினுள்

அதன் வேர்கள் சென்றதால்,

கிளைகள் தழைத்து

அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.

8கடவுளின் சோலையிலிருந்த

கேதுரு மரங்களுக்கு

அதற்குச் சமமான கிளைகள் இல்லை;

அர்மோன் மரங்களுக்கு

அதற்கு இணையான

கொப்புகள் இல்லை;

கடவுளின் சோலையிலிருந்த

எந்த மரமும் அதைப்போன்று

அழகுடன் இருந்ததில்லை.

9அடர்ந்த கிளைகளால்

நான் அதனை அழகுபடுத்தினேன்;

கடவுளின் சோலையாகிய

ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம்

அதன்மேல் பொறாமை கொண்டன.

10எனவே, தலைவராகிய ஆண்டவர்

இவ்வாறு கூறுகிறார்:

அது உயர்ந்து வளர்ந்து

தன் உச்சியை

மேகங்களுக்குள் நுழைத்து,

தன் உயரத்தைப் பற்றித்

தன் இதயத்தில் செருக்குற்றது.

11எனவே அதனை வேற்றினத்தாருள் வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன். அவன் அதன் தீச்செயலுக்குத் தக்கவாறு அதனை நடத்துவான். நானும் அதனைப் புறம்பாக்குவேன்.
12மக்களினங்களில் மிகக் கொடியோரான அன்னியர் அதனை வெட்டி வீழ்த்திவிடுவர். மலைகளிலும் அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும் அதன் கிளைகள் விழுந்து கிடக்கும்; அதன் கொம்புகள் நாடெங்கிலுமுள்ள ஓடைகளில் முறிந்து கிடக்கும். மண்ணின் மக்களெல்லாம் அதன் நிழலை விட்டுப்பிரிந்து அதனைப் புறக்கணிப்பர்.
13வீழ்ந்து கிடக்கும் அதன் மேல் வானத்துப் பறவைகள் எல்லாம் வந்து அடையும். அதன் கிளைகளுக்கிடையே காட்டு விலங்குகள் யாவும் உலவும்.
14இதனால் நீர்நிலைகளுக்கருகில் இருக்கும் எம்மரமும் மிகுந்த உயரத்திற்கு வளராது; தன் உச்சியை மேகங்களுக்கிடையில் நுழைக்காது; நீர்க்காலை அடுத்த எம்மரமும் அவற்றை எட்டும் அளவுக்கு உயராது. ஏனெனில் அவையெல்லாம் பாதாளப் படுகுழிக்குச் செல்லும் மானிடருடன் அழிவுக்குக் குறிக்கப்பட்டுள்ளன.
15எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை முன்னிட்டு லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.
16கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப் பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும். நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும், லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும் கீழுலகில் ஆறுதல் பெறும்.
17அதன் நிழலில் வாழ்ந்த கூட்டுநாடுகள் அதனோடு சேர்ந்து வாளால் மடிந்தவர்களுடன் பாதாளத்தில் போய்ச்சேரும்.
18மேன்மையிலும் பெருமையிலும் ஏதேனின் எந்த மரம் உனக்கு ஒப்பாகும்? ஆயினும், ஏதேனின் மரங்களுடன் சேர்ந்து நீயும் கீழுலகுக்குத் தள்ளப்படுவாய். விருத்தசேதனமில்லார் நடுவே, வாளால் மடிந்தாரோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனது மக்கள் திரளுக்கும் நடக்கவிருப்பது இதுவே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

31:8 தொநூ 2:9.