எகிப்துக்கு எதிரான இறைவாக்கு

1பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை.

3அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே;

எகிப்து மன்னனாகிய பார்வோனே!

நான் உனக்கு எதிராய்

இருக்கின்றேன்;

உன் ஆறுகளின் நடுவே

வாழும் பெரிய முதலை நீ!

“நைல் என்னுடையது;

நானே அதை உருவாக்கிக்கொண்டேன்”

என்கிறாய் நீ!

4ஆனால், நான்

உன் வாயில் தூண்டில்களை மாட்டி

உன் ஆறுகளின் மீன்கள் யாவும்

உன் செதில்களில்

ஒட்டிக்கொள்ளச் செய்வேன்;

உன்னையும் உன் செதில்களில்

ஒட்டியுள்ள மீன்களையும்

உன் ஆறுகளினின்று

வெளியே இழுத்துப் போடுவேன்.

5உன்னையும்

உன் ஆறுகளின் மீன்களையும்

பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்;

உலர்ந்த தரையில் விழுந்து

மடிவாய் நீ;

உன்னைச் சேகரிக்கவோ

பொறுக்கி எடுக்கவோ

எவரும் இரார்;

காட்டு விலங்குகளுக்கும்

வானத்துப் பறவைகளுக்கும்

உன்னை இரையாய்த் தருவேன்.

6அப்போது எகிப்தில் வாழும் யாவரும்

‘நானே ஆண்டவர்’ என

அறிந்து கொள்வர்.

7இஸ்ரயேல் வீட்டாருக்கு

நாணற் கோலாய் இருந்தாய் நீ;

அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது

நீ முறித்தாய்;

அவர்கள் தோள்களைக் கிழித்தாய்;

உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது

நீ ஒடிந்தாய்;

அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.

8எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.
9எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்’ என்று உரைத்தாய்.
10எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை — கூசு எல்லைப் பகுதிவரை — எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன்.
11ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது; நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார்.
12அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்.
13ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.
14எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.
15அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன்.
16இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது ‘நானே தலைவராகிய ஆண்டவர்’ என அறிந்து கொள்வர்.

மாமன்னன் நெபுகத்னேசர் எகிப்தைக் கைப்பற்றுதல்

17இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
18“மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.
19எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.
20அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
21அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர்.

29:1-32 எசா 19:1-25; எரே 46:2-26. 29:6 எசா 36:6.