அருவருப்பான சமையல் சட்டி
1ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
2“மானிடா! இந்த நாளை — பாபிலோன் மன்னன் எருசலேமை முற்றுகையிட்ட இந்த நாளை — குறித்து வை.
3கலக வீட்டாருக்கு
உவமை ஒன்றின் வழியாக
எடுத்துக்கூறு;
தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே;
கொப்பரை ஒன்றை எடுத்து வை;
தண்ணீரை அதில் ஊற்று.
4உள்ளே இறைச்சித்
துண்டுகளைப் போடு;
தொடை, தோள்பகுதி ஆகிய
நல்ல பாகங்களைப் போடு;
பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.
5மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா;
விறகுக்கட்டைகளை
அதன்கீழ் அடுக்கு;
இறைச்சித் துண்டுகளை வேகவை;
எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.
6ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
குருதியைச் சிந்தும் நகருக்கு
ஐயோ கேடு!
துருப்பிடித்த கொப்பரை இது;
இதன் துரு நீங்கவே இல்லை;
ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு;
தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.
7ஏனெனில், அவள் சிந்திய குருதி
அவள் நடுவில் உள்ளது;
வெறுமையான பாறையில்
அதை ஊற்றினாள்;
புழுதியில் மறையும்படித்
தரையில் அதை ஊற்றவில்லை.
8சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே
புழுதியில் அதை மறைக்காது
வெறுமையான பாறையில்
ஊற்றச் செய்தேன்.
9எனவே, தலைவராகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு!
விறகுகளை நானும்
உயரமாய் அடுக்குவேன்.
10எனவே விறகுக் கட்டைகளை
மிகுதியாக அடுக்கு;
நெருப்பு மூட்டி
இறைச்சியை நன்கு வேகவை;
நறுமணப் பொருள்களையும்
கலந்துவிடு; எலும்புகளும் கரியட்டும்.
11பின்னர், வெறுமையான கொப்பரையை
நெருப்புக் கட்டைகள் மேல் வை;
களிம்பு காய்ந்து உருகும்வரை
அது சூடேறட்டும்;
அதன் அழுக்கு கரைந்து போகட்டும்;
அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.
12அனைத்து முயற்சிகளையும் அது வீணடித்துவிட்டது. அதன் திண்மையான துரு நெருப்பினாலும் அகலவேயில்லை.
13உன்னுடைய துரு காம வெறியாகும். ஏனெனில், நான் உன்னைத் தூய்மைத் படுத்த விழைந்தேன். ஆனால் நீ உன் அழுக்கினின்று தூய்மையாகவில்லை. உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ தூய்மையாகப் போவதில்லை.
14ஆண்டவராகிய நானே உரைத்தேன்; நான் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பின்வாங்க மாட்டேன். இரக்கம் காட்ட மாட்டேன்; மனம் மாறமாட்டேன். உன் நடத்தைக்கு ஏற்பவும் நீ தீர்ப்பிடப்படுவாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
இறைவாக்கினர் மனையாளின் இறப்பு
15ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
16“மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப்போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது.
17மெதுவாய்ப் பெருமூச்சுவிடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணாதே!”
18நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.
19அப்போது மக்கள் என்னிடம், “நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?” என்று கேட்டனர்.
20எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: “ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
21இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச்சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர்.
22நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.
23தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள்.
24இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.
25“மானிடா! நான் அவர்களிடமிருந்து அவர்களுடைய வலிமை, மகிழ்ச்சி, மாட்சி, கண்களின் இன்பம், இதயத்தின் விருப்பம் ஆகியவற்றையும் அவர்களுடைய ஆண்மக்கள் பெண்மக்கள் யாவரையும் என்று எடுத்துக்கொள்கிறேனோ,
26அன்று அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் ஓடிவந்து இச்செய்தியை உனக்குச் சொல்வான்.
27அப்போது உன் வாய் திறக்கப்படும். தப்பி வந்தவனிடம் நீ பேசுவாய். மௌனமாய் இருக்கமாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பாய். நானே கடவுள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள்.”
24:2 2 அர 25:1; எரே 52:4.