பாவத்தில் வீழ்ந்த சகோதரிகள்

1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2“மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.
3அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர். தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன. அவர்களின் கன்னிக் கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா; இளையவள் பெயர் ஒகலிபா. எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.
5ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.
6அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
7அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்; தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.
8எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்; அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்; தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.
9எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.
10அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து, அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர். பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள். இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.
11அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள். இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.
12அவளும் ஆளுநர், படைத்தலைவர், பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர் ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.
13அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன். இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.
14ஆனால் இவள் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாக ஈடுபட்டாள். சுவரில் சிவப்பாய்த்தீட்டப்பட்ட கல்தேய நாட்டு ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
15இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள், தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.
16அவள் அவர்களைக் கண்டதும் அவர்கள்பால் காமுற்று கல்தேயாவிலுள்ள அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினாள்.
17பாபிலோனியர் அவளிடம் வந்து காமப்படுக்கையில் படுத்துத் தங்கள் காமத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினர். அவர்களால் தீட்டுப்பட்டபின், அவள் அவர்களிடமிருந்து தன் மனத்தை விலக்கிக் கொண்டாள்.
18அவள் வெளிப்படையாய்த் தன் வேசித்தனத்தில் ஈடுபட்டுத் தன் திறந்த மேனியை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பால் அவளிடமிருந்து விலகிக்கொண்டேன்; அவள் தமக்கையிடமிருந்து விலகிக்கொண்டது போலவே செய்தேன்.
19ஆயினும் அவள் எகிப்தில் தன் இளமையில் ஈடுபட்ட வேசித்தனத்தை மனத்தில் கொண்டு இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20அவள் தன் காதலர்பால் காமுற்றாள். அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும், விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.
21எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி, உன் இளம்கொங்கைகளோடு விளையாடிய இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.

இளையவள்மீது வரும் கடவுளின் நீதித் தீர்ப்பு

22ஆகவே ஒகலிபா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உன் காதலர்களை உனக்கு எதிராய்க் கிளம்பச் செய்வேன். இவர்களிடமிருந்து நீ வெறுப்பினால் விலகிக்கொண்டாய். அவர்களை உனக்கு எதிராய் எத்திசையிலிருந்தும் கொண்டு வருவேன்.
23பாபிலோனியர் கல்தேயர் யாவரையும், பெக்கோது, சோவா, கோகா எனும் இடத்தாரையும், அசீரியரையும் வரச்செய்வேன். அவர்கள் அழகிய இளைஞராயும் ஆளுநர்களாயும் படைத்தலைவர்களாயும் தேர்ப்படை வீரர்களாயும் உள்ளனர். அவர்கள் யாவரும் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்.
24அவர்கள் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவர். தேர்கள், குதிரை வண்டிகள், திரளான மக்கள் ஆகியோருடன் பெரிய கேடயங்களோடும், சிறிய கேடயங்களோடும் தலைச்சீராவோடும் வந்து உனக்கு எதிராய் நாற்புறமும் உன்னைச் சூழ்ந்துகொள்வர். நான் உன்னைத் தண்டிக்குமாறு அவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்களும் தங்கள் முறைப்படி உன்னைத் தண்டிப்பார்கள்.
25நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.
26மேலும் அவர்கள் உன் ஆடைகளை உரிந்து உன் விலையுயர்ந்த அணிகளை எடுத்துக் கொள்வர்.
27இவ்வாறு எகிப்தில் தொடங்கின உன் காம வெறியையும் வேசித்தனத்தையும் நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். இவற்றை இனி மேல் நீ நாடமாட்டாய். எகிப்தை நீ நினைவு கொள்ளவும் மாட்டாய்.
28ஏனெனில் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ யாரை வெறுக்கிறாயோ, யாரிடமிருந்து மனம் கசந்து திரும்பினாயோ அவர்களிடமே உன்னை ஒப்புவிப்பேன்.
29அவர்கள் வெறுப்போடு உன்னை நடத்துவர். நீ உழைத்துப் பெற்றவை அனைத்தையும் கவர்ந்துகொண்டு, உன்னைத் திறந்த மேனியாகவும் வெறுமையாகவும் விட்டுச் செல்வர். உன் வேசித்தனம், காமவெறி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் வெட்கக்கேடு வெளிப்படும்.
30நீ வேற்றினத்தார் மீது காமவெறிகொண்டு அவர்களின் சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டால் அவர்கள் உனக்கு இப்படிச் செய்வர்.
31உன் தமக்கையின் வழியிலேயே நீயும் சென்றாய்.

எனவே, அவள் குடித்த கிண்ணத்தை

உன் கையில் தருவேன்.

32தலைவராகிய ஆண்டவர்

கூறுவது இதுவே;

உன் தமக்கை குடித்த கிண்ணத்தில்

நீயும் குடிப்பாய்;

அகன்று, குழிந்து நிறைந்திருப்பது

அக்கிண்ணம்;

நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும்

நீ ஆளாவாய்.

33குடிவெறியாலும் துயரத்தாலும்

நிறைந்திருப்பாய்!

உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம்

துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!

34குடிப்பாய்; அதை நீ

குடித்து முடிப்பாய்! அதனை

உடைத்தெறிவாய் துண்டுகளாய்!

உன் மார்புகளைக் கீறிக்கொள்வாய்!

நானே உரைத்தேன், என்கிறார்

தலைவராகிய ஆண்டவர்.

35ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ என்னை மறந்து உன்னிடமிருந்து என்னை ஒதுக்கிவிட்டதால், உன் காமவெறி மற்றும் வேசித்தனத்தின் விளைவுகளை நீயே சுமந்துகொள்.

இரு சகோதரிகள்மீதும் வரும் நீதித் தீர்ப்பு

36ஆண்டவர் எனக்கு மேலும் உரைத்தது: “மானிடா ஒகோலாவையும் ஒகலிபாவையும் தீர்ப்பிடுவாயா? அவ்வாறெனில் அவர்களின் அருவருப்பான செயல்களை எடுத்துக் கூறு.
37ஏனெனில் அவர்கள் வேசித்தனம் செய்தனர். அவர்கள் கைகளோ இரத்தக் கறை படிந்தவை. சிலைகளோடு அவர்கள் வேசித்தனம் செய்தனர். எனக்கெனப் பெற்றெடுத்த பிள்ளைகளைச் சிலைகளுக்கு உணவாய்ப் படைத்தனர்.
38இதற்கு மேலும் செய்தனர், அதே நேரத்தில் எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி என் ஓய்வுநாள்களை இழிவுபடுத்தினர்.
39அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டனர். என் தூயகத்தில் நுழைந்து அதை இழிவுபடுத்தினர். என் இல்லத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
40அவர்கள் தொலைவில்வாழ் மனிதருக்காகத் தூதர்களை அனுப்பினர்; அவர்கள் வந்தபோது குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களை அணிந்து கொண்டனர்.
41அழகான மஞ்சத்தில் அமர்ந்து அதன் முன்னால் இருந்த மேசையில் எனக்குரிய நறுமணப்பொருள்களையும் எண்ணெயையும் வைத்தனர்.
42களியாட்டக் கூட்டத்தின் இரைச்சல் அவர்களைச் சுற்றியிருந்தது. பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அப்பெண்களின் கைகளில் வளையலிட்டார்கள். அழகிய மகுடங்களை அவர்கள் தலையில் சூட்டினார்கள்.
43அப்போது வேசித்தனத்தால் தளர்ந்துபோன ஒருத்தியைக் குறித்து நான் உரைத்தேன்; ‘அவர்கள் அவளை வேசியாய் நடத்தட்டும், ஏனெனில் அவள் இப்போது வேசிதான்.’
44விலைமாதரிடம் செல்வதுபோல் அவர்கள் அப்பெண்களிடம் சென்றனர்: ஒகோலா, ஒகலிபா ஆகிய இருவேசிப் பெண்களிடமும் சென்றனர்.
45ஆனால் நீதிமான்கள் அவர்களுக்கு வேசித்தனத்தில் ஈடுபட்டுக் கொலை செய்த பெண்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பர். ஏனெனில் அவர்கள் வேசிகள்தாம். இரத்தக்கறை அவர்கள் கைகளில் உள்ளது.
46தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை நடுக்கத்திற்கும் கொள்ளைக்கும் உள்ளாக்குமாறு அவர்களுக்கு எதிராய் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டிவா.
47அக்கூட்டமோ அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டிச் சாய்க்கும். அவர்களின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கொன்று, வீடுகளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
48இவ்வாறு, நாட்டில் காமவெறியை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். அதன் மூலம் மற்றப் பெண்களும் இவர்களைப்போல் காமவெறியராய் இல்லாமலிருக்க எச்சரிக்கை பெறுவர்.
49நீங்களும் உங்கள் காமவெறி, சிலை வழிபாடு ஆகிய குற்றங்களின் பாவவினையைச் சுமப்பீர்கள். அதன்மூலம் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.”