யூதாவின் அழிவு

1ஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும்.
2‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: சாவுக்குரியோர் சாவர் வாளுக்குரியோர் வாளால் மாள்வர்; பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்; நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.”
3ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்; கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.
4அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம்.
5எருசலேமே! யாராவது உனக்கு இரக்கம் காட்டுவார்களா? உன் நிலைபற்றி வருந்துவார்களா? திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?
6ஆண்டவர் கூறுவது: “நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்; என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்; எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்; இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.
7நாட்டின் வாயில்களில் நான் அவர்களை முறத்தால் தூற்றிச் சிதறடித்தேன்; அவர்களைத் தனியாகத் தவிக்க விட்டேன்; என் மக்களை அழித்துவிட்டேன்; ஏனெனில் அவர்கள் தங்கள் தீயவழியிலிருந்து திரும்பவில்லை.
8கடற்கரை மணலைவிட அவர்களின் கைம்பெண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கினேன்; இளைஞர்களின் அன்னையருக்கு எதிராகக் கொலைஞனைப் பட்டப்பகலில் கூட்டி வந்தேன்; திடீரென அவள் துயரும் திகிலும் அடையச் செய்தேன்;
9எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; மூச்சுத் திணறினாள்; அவள் வாழ்வில் கதிரவன் மறைந்து விட்டான்; அவள் வெட்கி நாணமுற்றாள்; எஞ்சியிருப்போரை அவர்களுடைய எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன்,” என்கிறார் ஆண்டவர்.

எரேமியாவின் அழைப்பு புதுப்பிக்கப்படுதல்

10நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
11ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.
12வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்?
13“நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.
14முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்; ஏனெனில் என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.”
15ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்; நீர் என்னை அறிவீர்; என்னை நினைவுகூரும்; எனக்கு உதவியருளும்; என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்; நீர் பொறுமையுள்ளவர்; என்னைத் தள்ளிவிடாதேயும்; உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்.
16நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
17களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.
18எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!
19எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.
20நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
21தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.”

15:1 விப 32:11-14; எண் 14:13-19; 1 சாமு 7:5-9. 15:2 திவெ 13:10. 15:4 2 அர 21:1-16; 2 குறி 33:1-9.