எருசலேமின் வருங்கால மேன்மை

1எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!
2இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
3பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
4உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
5அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.
6ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
7கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்; நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்; எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்; இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.
8மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்?
9தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.
10அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்; அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்; ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்; நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.
11உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்; இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்; பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும்.
12உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்; அவை முற்றிலும் பாழடைந்து போகும்.
13லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்; என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்; என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.
14உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்; உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்வர்; ‘ஆண்டவரின் நகர்’ என்றும், ‘இஸ்ரயேலின் தூயவரது சியோன்’ என்றும் உன்னை அவர்கள் அழைப்பர்.
15நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்; உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை; நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்; தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
16நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்; மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்; ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும் யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும் நீ அறிந்து கொள்வாய்.
17வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.
18உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது; உன் மதில்களை ‘விடுதலை’ என்றும் உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும் அழைப்பாய்.
19கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை!
20உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.
21உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்; அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்; நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்; என் கைவேலைப்பாடும் அவர்களே.
22அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்; அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்; நானே ஆண்டவர்; ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.

60:11 திவெ 21:25-26. 60:14 திவெ 3:9. 60:19 திவெ 21:23; 22:5.