ஆண்டவர் வருங்காலத்தின் தலைவர்

1யாக்கோபின் வீட்டாரே! இதற்குச்

செவிகொடுங்கள்;

நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால்

அழைக்கப்படுகிறீர்கள்;

யூதாவெனும் ஊற்றினின்று

தோன்றியுள்ளீர்கள்;

ஆண்டவரின் பெயரால்

ஆணையிடுகின்றீர்கள்;

இஸ்ரயேலின் கடவுளைப்

புகழ்கின்றீர்கள்.

ஆயினும், உண்மையுடனும்

நேர்மையுடனும்

இவற்றைச் செய்வதில்லை.

2‘திரு நகரினர்’ என்று உங்களைப் பற்றிச்

சொல்லிக்கொள்கின்றீர்கள்;

இஸ்ரயேலின் கடவுளையே

சார்ந்து நிற்கின்றீர்கள்;

‘படைகளின் ஆண்டவர்’ என்பது

அவர்தம் பெயராம்!

3பண்டைய நிகழ்ச்சிகளை

முன்கூட்டியே அறிவித்தேன்;

என் வாய் மொழிந்தவற்றை

அவர்கள் கேட்கச் செய்தேன்;

திடீரெனச் செயல்பட்டேன்;

யாவும் நிகழ்ந்தன.

4நீ பிடிவாத குணமுடையவன்;

உன் கழுத்து இரும்புத் தசைநார்;

உன் நெற்றி வெண்கலம்;

இதை நான் அறிவேன்.

5எனவே அவற்றை முன்கூட்டியே

உனக்கு அறிவித்தேன்;

அவை நிகழ்வதற்குமுன்

உனக்குத் தெரியப்படுத்தினேன்;

‘என் சிலை அவற்றைச் செய்தது;

நான் வார்த்த வடிவமும்

செதுக்கிய உருவமும்

அவற்றைக் கட்டளையிட்டன’ என்று

நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.

6முன்பு நீ கேட்டாய்; இப்போது

அவை அனைத்தையும் காண்கின்றாய்;

அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ?

இதுமுதல் புதியனவற்றையும்

நீ அறியாத மறைபொருள்களையும்

உனக்கு வெளிப்படுத்துவேன்.

7பண்டைக்காலத்தில் அல்ல,

அவை இப்பொழுதுதான்

உருவாக்கப்பட்டன;

இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை;

அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை;

‘அவைபற்றி எனக்குத் தெரியும்’ என

நீ கூறவும் முடியாது.

8உண்மையிலே நீ

கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை;

முன்பிருந்தே உன் செவிகள்

திறந்திருக்கவில்லை;

ஏனெனில், நீ ‘ஏமாற்றுப் பேர்வழி,

கருப்பையிலிருந்தே கலகக்காரன்’

என்று பெயர்பெற்றவன்;

இதை நான் உறுதியாய் அறிவேன்.

9என் பெயரின் பொருட்டு

என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்;

என் புகழை முன்னிட்டு

உன்னை வெட்டி வீழ்த்தாமல்,

உனக்காக அதைக்

கட்டுப்படுத்துகின்றேன்.

10நான் உன்னைப் புடமிட்டேன்;

ஆனால், வெள்ளியைப் போலல்ல;

துன்பம் எனும் உலை வழியாய்

உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.

11என்பொருட்டே, என்னை முன்னிட்டே

அதைச் செய்கின்றேன்;

என் பெயரை

எங்ஙனம் களங்கப்படுத்தலாம்?

என் மாட்சியை நான்

எவருக்கும் விட்டுக்கொடேன்.

12நான் அழைத்திருக்கும் யாக்கோபே,

இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு;

நானே அவர்; தொடக்கமும் நானே;

முடிவும் நானே.

13என் கையே மண்ணுலகிற்கு

அடித்தளமிட்டது;

என் வலக்கை

விண்ணுலகை விரித்து வைத்தது.

நான் அழைக்கும்போது

அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.

14நீங்கள் அனைவரும்

கூடிவந்து கேளுங்கள்;

அவர்களுள் இவற்றை

அறிவித்தவர் யார்?

ஆண்டவரின் அன்புக்குரியவன்,

பாபிலோனில் அவர் விரும்பியதைச்

செய்வான்; அவன் புயம்

கல்தேயருக்கு எதிராக எழும்.

15நான், நானேதான்

அதைக் கூறினேன்;

நான் அவனை அழைத்தேன்;

நானே அவனைக்கொண்டு வந்தேன்,

அவன் தன்வழியில்

வெற்றி காண்பான்.

16என் அருகில் வந்து

இதைக் கேளுங்கள்;

தொடக்கமுதல் நான்

மறைவாகப் பேசியதில்லை;

அது நிகழ்ந்த காலம் முதல்,

நான் அங்கே இருக்கின்றேன்.

இப்பொழுது

என் தலைவராகிய ஆண்டவர்

என்னையும் அவர்தம் ஆவியையும்

அனுப்பியுள்ளார்.

தம் மக்களைப் பற்றிய ஆண்டவரின் திட்டம்

17இஸ்ரயேலின் தூயவரும்

உன் மீட்பருமான ஆண்டவர்

கூறுவது இதுவே:

உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!

பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும்

செல்லவேண்டிய வழியில்

உன்னை நடத்துபவரும் நானே!

18என் கட்டளைக்குச்

செவிசாய்த்திருப்பாயானால்,

உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும்,

உன் வெற்றி கடல் அலை போலும்,

பாய்ந்து வந்திருக்கும்.

19உன் வழிமரபினர் மணல் அளவாயும்,

உன் வழித்தோன்றல்கள்

கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்;

அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்;

அவர்கள் பெயர் என் திருமுன்னின்று

அழிக்கப்பட்டிராது.

20பாபிலோனிலிருந்து

புறப்பட்டுச் செல்லுங்கள்;

கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்;

ஆரவாரக் குரலெழுப்பி

இதை முழங்கி அறிவியுங்கள்;

உலகின் எல்லைவரை

இதை அறியச் செய்யுங்கள்;

‘தம் ஊழியன் யாக்கோபை

ஆண்டவர் மீட்டுவிட்டார்’ என்று

சொல்லுங்கள்.

21அவர் அவர்களைப் பாலைநிலங்களில்

நடத்திச் சென்றபோது

அவர்கள் தாகமடையவில்லை;

பாறையிலிருந்து அவர்களுக்கு

நீர் சுரக்கச் செய்தார்;

பாறையைப் பிளந்தார்,

நீர் பாய்ந்து வந்தது.

22‘தீயோர்க்கு அமைதி இல்லை’

என்கிறார் ஆண்டவர்.


48:12 எசா 44:6; திவெ 1:17; 22:13. 48:20 திவெ 18:4. 48:22 எசா 57:21.