பகைவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

1வேற்றினத்தாரே, நெருங்கி வந்து

செவிகொடுங்கள்;

மக்களினங்களே,

கவனித்துக் கேளுங்கள்;

மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும்

கேட்கட்டும்;

வையகமும் அதில் தோன்றுவன யாவும்

செவிகொடுக்கட்டும்.

2வேற்றினத்தார் அனைவர் மேலும்

ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்;

அவர்களின் படைத்திரள்

முழுவதற்கும் எதிராக

வெஞ்சினம் கொண்டுள்ளார்;

அவர்களை அவர் அடியோடு அழிப்பார்;

அவர்களைப் படுகொலைக்கு

உள்ளாக்குவார்.

3அவர்களில் வாளுக்கு இரையானோர்

தூக்கியெறிப்படுவர்;

அவர்களின் பிணங்கள்

துர்நாற்றமடிக்கும்;

அவர்களின் இரத்தம்

மலைகளில் வழிந்தோடும்.

4விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும்

உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச்

சுருட்டப்படும்;

திராட்சை இலை உதிர்வதுபோலும்

அத்தி இலை வீழ்வதுபோலும்,

வான் படைகள் அனைத்தும்

உதிர்ந்து விடும்.

5ஆண்டவரது வாள் வானில்

வெளியேறக் குடித்துள்ளது;

இதோ, ஏதோமின் மேலும்

அழிவுக்கென ஒதுக்கப்பட்ட

மக்களினத்தின் மேலும்

தண்டனைத் தீர்ப்புக்காக

அது இறங்கப்போகிறது.

6அவரது வாளில் செம்மறிக்குட்டி,

வெள்ளாடு ஆகியவற்றின்

இரத்தக் கறை படிந்துள்ளது:

அதில் கிடாய்களின்

சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது;

ஏனெனில், பொட்சராவில்

ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்;

ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.

7அவர்களின் காட்டெருதுகள்

செத்துவிழும்;

எருதுகளுடன் காளைகளும் மடியும்;

அவர்களின் நாடு இரத்தத்தை

வெறியேறக் குடிக்கும்;

தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.

8ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது;

சீயோன் வழக்கில்

நல்தீர்ப்பீன் ஆண்டு அது.

9ஏதோமின் நீரோடைகள் கீலாகும்;

அதன் தரைப்புழுதி கந்தகமாகும்;

அதன் நிலம்

கொழுந்து விட்டெரியும் கீலாகும்.

10இரவும் பகலும் அது

அணையாமல் எரியும்;

அதன் புகை என்றென்றும்

எழும்பிக் கொண்டிருக்கும்;

தலைமுறை தோறும்

நாடு பாழடைந்து கிடக்கும்;

எவருமே அதன் வழியாய்

ஒருபோதும் பயணம் செய்யார்.

11கூகையும் சாக்குருவியும்

அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்;

ஆந்தையும் கருங்காகமும்

அங்கே தங்கியிருக்கும்;

ஆண்டவர் நூல்பிடித்து

அதை உருக்குலையச் செய்வார்;

அவர் தூக்குநூல் பிடித்து

அதைப் பாழடையச் செய்வார்.

12உயர்குடி மக்கள் அங்கே இல்லை;

அரசன் என அழைக்க

அங்கே யாரும் இல்லை;

அதன் தலைவர் அனைவரும்

ஒன்றுமில்லாது ஒழிவர்.

13அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும்

அதன் அரண்கள்மேல்

காஞ்சொறிப் பூண்டுகளும்

நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்;

அது குள்ள நரிகளின்

குடியிருப்பாக மாறும்;

ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.

14காட்டு விலங்குகள்

கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்;

காட்டாடுகள் ஒன்றையொன்று

கத்தி அழைக்கும்;

கூளி அங்கே தங்கித்

தான் இளைப்பாறுவதற்கென

இடத்தைக் கண்டுபிடிக்கும்.

15ஆந்தை அங்கே கூடுகட்டி

முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து

, தன் நிழலில் அவற்றைச்

சேர்த்து வளர்க்கும்;

பருந்துகளும் சோடி சோடியாய்ச்

சேர்ந்துவரும்.

16ஆண்டவரின் ஏட்டுச் சுருளை

ஆய்ந்து படியுங்கள்;

‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை,

துணையின்றி எதுவும் இருப்பதில்லை’

ஏனெனில், ஆண்டவரின்

வாய் மொழிந்த கட்டளை இது.

அவரது ஆவிதான்

இவற்றை ஒருங்கிணைத்தது.

17அவரே அவர்களுக்கென்று

சீட்டுப் போட்டார்;

அவர்தம் கை, நூல் பிடித்து

நாட்டை அவர்களுக்குப்

பகிர்ந்து கொடுத்தது;

அவர்கள் அதை என்றுமுள

உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;

தலைமுறைதோறும்

அதில் தங்கி வாழ்வர்.


34:4 மத் 24:29; மாற் 13:25; லூக் 21:26; திவெ 6:13-14. 34:5-17 எசா 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. 34:10 திவெ 14:11; 19:3.