எருசலேமின் நிலைமை

1தாவீது பாசறை அமைத்த நகராகிய

அரியேல்!* அரியேல்! உனக்கு

ஐயோ கேடு!

ஆண்டிற்குப்பின் ஆண்டு

கடந்து வரட்டும்;

விழாக்கள் முறைமுறையாய்

வந்து போகட்டும்.

2அரியேலுக்கு நான்

இடுக்கண் விளைவிப்பேன்;

அங்கு அழுகையும் புலம்பலும்

நிறைந்திருக்கும்;

அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.

3உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்;

உன்னைப் போர்க் கோபுரங்களால்

சூழ்ந்து வளைப்பேன்;

உனக்கெதிராய்

முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.

4தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்;

நலிந்த உன் குரல்

புழுதியிலிருந்து எழும்பும்;

உன் குரல்,

இறந்தவன் ஆவியின் ஒலிபோல,

மண்ணிலிருந்து வெளிவரும்;,

உன் பேச்சு

புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.

5உன் பகைவனின் திரள்

நுண்ணிய தூசிபோல் இருக்கும்;

கொடியவர் கூட்டம்

“பறக்கும் பதர் போலிருக்கும்;

இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.

6இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல்,

சூறாவளி, புயல்காற்று விழுங்கும்

நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால்

படைகளின் ஆண்டவர்

உன்னைத் தண்டிப்பார்.

7அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும்

திரளான வேற்றினத்தார் அனைவரும்

அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப்

போரிட்டு

அதைத் துன்புறுத்திய அனைவரும்

கனவு போலும், கனவில் காணும்

காட்சிபோலும் மறைவர்.

8பசியாய் இருப்பவர் உண்பதாய்க்

கனவு கண்டு விழித்தெழுந்து

வெறும் வயிற்றினராய்

வாடுவது போலும்,

தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க்

கனாக்கண்டு விழித்தெழுந்து

தீராத்தாகத்தால் தவிப்பது போலும்,

சீயோன் மலைமேல் போர் தொடுக்கும்

திரளான வேற்றினத்தார்

அனைவரும் ஆவர்.

எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படல்

9திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்;

குருடரைப்போல் இருங்கள்;

பார்வையற்றவராகுங்கள்.

ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல;

தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.

10ஏனெனில் ஆழ்ந்த

தூக்கம் தரும் ஆவியை

ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்;

இறைவாக்கினராகிய

உங்கள் கண்களை மூடியுள்ளார்;

திருக்காட்சியாளராகிய

உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.

11ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர்“என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.
12எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப் படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத்தெரியாதே” என்பார்.
13என் தலைவர் கூறுவது இதுவே:

வாய்ச் சொல்லால் இம்மக்கள்

என்னை அணுகுகின்றனர்;

உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;

அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத்

தொலையில் இருக்கிறது;

அவர்களது இறையச்சம்

மனனம் செய்த வெறும்

மனித கட்டளையைச் சார்ந்ததே!

14ஆதலால், இதோ நான்

இந்த மக்களுக்காக

மீண்டும் வியத்தகு செயல் புரிவேன்.

அது விந்தைக்கு மேல்

விந்தையாக இருக்கும்.

அவர்களுடைய ஞானிகளின்

ஞானம் அழிந்துபோம்;

அவர்களுடைய அறிஞர்களின்

அறிவு மறைந்துபோம்.

வருங்கால நம்பிக்கை

15ஆண்டவரிடமிருந்து

தங்கள் திட்டங்களை

மனத்தின் ஆழங்களில்

மறைத்துக்கொண்டு,

தங்கள் செயல்களை இருளில் செய்து,

“நம்மை எவர் காணப்போகின்றார்?

நம்மை எவர் அறியப் போகின்றார்?”

எனச் சொல்வோருக்கு ஐயோ

கேடு!

16நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன?

குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ?

கைவேலை தன்

கைவினைஞனை நோக்கி

“நீர் என்னை உருவாக்கவில்லை”

என்று கூறலாமோ?

வனையப்பட்டது

தன்னை வனைந்தவனை நோக்கி

“உமக்கு அறிவில்லை” என்று

சொல்லலாமோ?

17இன்னும் சிறிது காலத்தில் லெபனோன்

வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ?

வளம் மிகு நிலம்

காடாக ஆகிவிடுமன்றோ?

18அந்நாளில் காது கேளாதோர்

ஏட்டுச் சுருளின்

வார்த்தைகளைக் கேட்பர்;

பார்வையற்றோரின் கண்கள்

காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும்

விடுதலையாகிப் பார்வை பெறும்.

19ஒடுக்கப்பட்டோர் மீண்டும்

ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;

மானிடரில் வறியவர்

இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.

20கொடியோர் இல்லாதொழிவர்;

இகழ்வோர் இல்லாமற் போவர்;

தீமையில் நாட்டம் கொள்வோர்

அழிந்து போவர்.

21அவர்கள் ஒருவர்மேல்

பொய்க் குற்றம் சாட்டி,

நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை

இடறச் செய்கின்றனர்;

பொய் புனைந்து நேர்மையாளரின்

வழக்கைப் புரட்டுகின்றனர்.

22ஆதலால்

ஆபிராகாமை மீட்ட ஆண்டவர்

யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது:

இனி யாக்கோபு

மானக்கேடு அடைவதில்லை;

அவன் முகம் இனி

வெளிறிப் போவதுமில்லை.

23அவன் பிள்ளைகள் என் பெயரைத்

தூயதெனப் போற்றுவர்;

நான் செய்யவிருக்கும் என்

கைவேலைப்பாடுகளைக் காணும்போது

யாக்கோபின் தூயவரைத்

தூயவராகப் போற்றுவர்;

இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.

24தவறிழைக்கும் சிந்தை கொண்டோர்

உணர்வடைவர்; முறுமுறுப்போர்

அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.


29:10 உரோ 11:8. 29:13 மத் 15:8-9; மாற் 7:6-7. 29:14 1 கொரி 1:19. 29:16 எசா 45:9.
29:1 “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.