1அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை — லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை — தண்டிப்பார்; கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.

2அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்

தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள்.

3ஆண்டவராகிய நானே

அதன் பாதுகாவலர்;

இடையறாது அதற்கு நான்

நீர் பாய்ச்சுகின்றேன்;

எவரும் அதற்குத்

தீங்கு விளைவிக்காதவாறு

இரவும் பகலும்

அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.

4சினம் என்னிடம் இல்லை;

நெருஞ்சியையும் முட்புதரையும்

என்னோடு போரிடச் செய்தவன் எவன்?

நான் அவற்றிற்கு எதிராக

அணி வகுத்துச்சென்று,

அவற்றை ஒருங்கே

நெருப்புக்கு இரையாக்குவேன்.

5அவர்கள் என்னைப்

புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்;

என்னோடு அவர்கள்

ஒப்புரவு செய்து கொள்ளட்டும்,

என்னோடு அவர்கள்

சமாதானம் செய்து கொள்ளட்டும்.

6வருங்காலத்தில் யாக்கோபு

வேரூன்றி நிற்பான்;

இஸ்ரயேல் பூத்து மலருவான்;

உலகத்தையெல்லாம்

கனிகளால் நிரப்புவான்.

7அவனை அடித்து நொறுக்கியோரை

ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல்,

அவனையும் அவர்

அடித்து நொறுக்கியது உண்டோ?

அவனை வெட்டி வீழ்த்தியோரை

அவர் வெட்டி வீழ்த்தியதுபோல்,

அவனையும் அவர்

வெட்டி வீழ்த்தியது உண்டோ?

8துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம்

அவர் அவனோடு போராடினார்;

கீழைக்காற்றின் நாளில்

சூறைக்காற்றால்

அவனைத் தூக்கி எறிந்தார்.

9ஆதலால் இதன் வாயிலாய்

யாக்கோபின் குற்றத்திற்காகப்

பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்.

அவனது பாவம் அகற்றப்பட்டதன்

முழுப் பயன் இதுவே:

சுண்ணாம்புக் கற்களை உடைத்துத்

தூள் தூளாக்குவது போல

அவர் அவர்களின்

பலிபீடக் கற்களுக்குச் செய்வார்;

அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும்

நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.

10அரண் சூழ்ந்த நகரம்

தனித்து விடப்பட்டுள்ளது;

குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது.

பாலைநிலம் போல்

புறக்கணிக்கப்பட்டுள்ளது;

ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது,

படுத்துக்கிடக்கின்றது;

அதில் தழைத்துள்ளவற்றைத்

தின்று தீர்க்கின்றது.

11உலர்ந்த அதன் கிளைகள்

முறிக்கப்படுகின்றன;

பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்;

ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது;

ஆதலால், அவர்களைப் படைத்தவர்

அவர்கள் மீது இரக்கம் காட்டார்;

அவர்களை உருவாக்கியவர்

அவர்களுக்கு ஆதரவு அருளார்.

12அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்; இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.
13அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.

27:1 யோபு 41:1; திபா 74:14; 104:26.