1ஞானமுள்ளவருக்கு யார் நிகர்?

உலகில் காண்பவற்றின்

உட்பொருளை வேறு யாரால்

அறிய இயலும்?

ஞானம் ஒருவன் முகத்தை

ஒளிமயமாக்கும்;

அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.

அரசனுக்கு அடங்கி நட

2கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.
3எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே.
4மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, “ஏன் இப்படிச் செய்கிறீர்?” என்று அவனை யார் கேட்க முடியும்?
5அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.
6ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு; செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?
7ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது.
8அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது; பணம் கொடுத்தும் தப்ப முடியாது.

நல்லாரும் பொல்லாரும்

9உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது
10பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே.
11மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.
12பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால்,
13தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்; நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.
14வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்.
15எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.
16-17நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை; ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரால் புரிந்துகொள்ள இயலாது.